Tue. Nov 26th, 2024

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை செய்யூர், உத்திரமேரூர், மதுராந்தகம், காஞ்சிபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை ஆதரித்து உத்திரமேரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

டெல்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கு மேலாக போராடி வருகிறார்கள். மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்கள், விவசாயத் தொழிலை முழுமையாக அழிந்து விடும் என நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக.வும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், அதிமுக.வும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்கள். மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக நின்று, அடிமையாக இருந்ததோடு, வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக போராடிய விவசாயிகளை, புரேக்கர்கள் என்று கிண்டலடித்தவர், கேலி செய்தவர் முதல்வர் பழனிசாமி.

அவர் பச்சை துண்டு பழனிசாமி இல்லை. பச்சோந்தி பழனிசாமியாக தான் இன்று இருக்கிறார். அன்றைக்கு விவசாயிகளை கேலி, கிண்டல் செய்தவர் இன்றைக்கு தேர்தல் ஆதாயத்திற்காக பரம்பரை விவசாயி என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

முதல்வர் பதவிக்கு பழனிசாமி எப்படி வந்தார், ஜெயலலிதா மறைவால், சசிகலா சிறைக்குச் சென்றதால் வந்தார். ஊர்ந்து போய் முதல்வர் பதவியை பெற்றவர் பழனிசாமி என்றால் அவருக்கு கோபம் வருகிறது. நான் என்ன பல்லியா, பாம்பா என்று கேட்கிறார் பழனிசாமி.. பல்லி, பாம்பை விட அதிக விஷம் கொண்டது எது தெரியுமா. நம்பிக்கைத் துரோகம் செய்வதுதான்.

இன்றைய தேர்தலில் பாஜக மட்டுமல்ல, அதிமுக.வும் ஒரு இடங்களில் கூட வெற்றிப் பெற்றுவிடக் கூடாது. தப்பித்தவறி அதிமுக ஒரு இடத்தில் வெற்றிப் பெற்றாலும் கூட, அவர் பாஜக.வின் குரலாகதான் ஒலிப்பார்கள். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் மகன் வெற்றிப் பெற்றார். அவர் அதிமுக எம்.பி.யாக நடந்து கொள்ளவில்லை. பாஜக எம்.பி.யாகவே மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுவரை நான் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக.வும் கூட்டணி கட்சிகளும் வெற்றிப் பெற்றுவிடும் என்று சொல்லி வந்தேன்.ஆனால், இன்றைக்கு சொல்கிறேன், 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெல்லப் போகிறது.

இங்கு போட்டியிடும் நான்கு வேட்பாளர்களுக்கு மட்டும் நான் ஆதரவு கேட்கவில்லை. எனக்கும் சேர்த்துதான் வாக்களிக்க கேட்கிறேன். இவர்கள் நான்கு பேரும் வெற்றிப் பெற்றால்தான் நான் முதல்வராக முடியும்.

மத்திய அரசுக்கு அடிமையாகிவிட்ட அதிமுக அரசு, கஜா உள்பட பல புயல்கள் தாக்கியபோதும் நிவாரணப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள தேவைப்பட்ட நிதியை மத்திய அரசிடம் இருந்து போராடி கூட பெறவில்லை. அதேபோல, தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய உரிய நிதியை கூட பெறாமல், தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது, அதிமுக அரசு. அந்த அரசை வீட்டுக்கு அனுப்புகிற தேதி தான் ஏப்ரல் 6. அதை மறந்துவிடாதீர்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இன்று மாலை 5 மணியளவில் அம்பத்தூரிலும், இரவு திருநின்றவூரிலும் தலா எட்டு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை ஆற்ற உள்ளார்.