திருவையாறில் பா.ஜ.க. வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோதாவரி காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்ற மத்திய அரசு உதவும் என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக அரசு மீண்டும் அமைந்தவுடன் இந்த திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படும் என்றும் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியது அதிமுக அரசுதான் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் தண்ணீருக்காக இனிமேல் கர்நாடகத்தை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஏரி, குளங்களில் தூர்வாரி குடிமராமத்து பணிகள் நடைபெற்றதன் காரணமாகதான் கோடை காலம் தொடங்கியபோதும் தண்ணீர் தட்டுப்பாடு என்ற பிரச்னையே எழவில்லை என்றும் முதல்வர் தெரிவித்தார். விவசாயி என்று தன்னை கூறிக் கொள்வதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் முதல்வர் கூறினார். தொடர்ந்து, பாபாநாசம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோபிநாதன், கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரித்தார்.