Sat. May 18th, 2024

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த தொகுதியில் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்தாக ஊர்வலமாக வந்த அவருக்கு பொதுமக்கள், அதிமுக.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார், முதலமைச்சர் பழனிசாமி.. அதன் முக்கிய அம்சங்கள்…

முதன் முதலாக 1989ஆம் ஆண்டு போட்டியிட வாய்ப்பளித்த செல்வி. ஜெயலலிதா, அந்த தேர்தலில் வெற்றிப் பெற்ற பின்னர், அதிமுகவில் பல்வேறு பொறுப்புகள் வகிக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கினார்.

எடப்பாடி தொகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளும் ஏற்றம் பெற அரும்பாடுபட்டுள்ளேன். எடப்பாடி தொகுதி முழுவதும் சாலை மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளேன்.

பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கை எடுபடுமா என்ற கேள்விக்கு மே 2 ஆம் தேதி பதில் கிடைக்கும். அடித்தட்டு மக்கள் அதிமுக தேர்தல் அறிக்கையை வரவேற்கிறார்கள்.

6 லட்சம் கோடி கடனில் தமிழக அரசு இருந்தாலும், வளர்ச்சி பணிகள் தொடர்கிறது.

அமோக வாக்குகளுடன் மீண்டும் வெற்றிப் பெறுவேன். அடுத்த ஐந்தாண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை எடப்பாடி தொகுதியில் மேற்கொள்வேன். அரசு கலைக் கல்லூரியும் கொண்டுவரப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.