சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலையடுத்து, வருவாய் துறையினர் பொது அமைதியை நிலைநாட்டும் வகையில் அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். இந்த உத்தரவை எதிர்த்து இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு நடைபெற்றது. மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அவரவர் தரப்பிலான வாதங்களை முன்வைத்தனர். நீதிபதியின் உத்தரவையடுத்து, இருதரப்பினர் மோதிக்கொண்ட போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைக்கு பிறகு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று பிற்பகலில் நீதிபதி சதிஷ்குமார், வருவாய் துறையினரால் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றிவிட்டு அதன் சாவியை எடப்பாடி பழனிசாமியில் ஒப்படைக்க வேண்டும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும், ஒருமாதத்திற்கு தொண்டர்களை அதிமுக அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.