Fri. Nov 22nd, 2024
ஆந்திர மாநில உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. 
பலத்த போலீசார் பாதுகாப்புக்கு இடையே இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சிலுகலூரிபேட் மற்றும் எலுருர் நகராட்சிக்களுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தது. முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்க தேசம் பின்தங்கியே இருந்தது. குண்டூர், திருப்பதி மாநகராட்சிகளை ஆளும் கட்சி வென்றுள்ளது. இதே போல, மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஆளும்கட்சியே முன்னணியில் உள்ளது. 11 மாநகராட்சிகள் மற்றும் 70 நகராட்சிகள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளுக்கான வாக்குகளின் எண்ணிக்கை 4,000 க்கும் மேற்பட்ட மையங்களில்  நடந்து வருகிறது. 
மொத்தமுள்ள 75 நகராட்சிகளில் உள்ள 2,122 வார்டுகளில் ஒய்.எஸ்.ஆர்.சி 1,754 இடங்களைப் பிடித்துள்ளது. எதிர்க்கட்சியான தெலுங்க தேசம் 270, பாஜக 8 , ஜனசேனா 19, சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் 71 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளன. 
 
உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழ் என்று அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.