Sat. May 18th, 2024

கொங்கு மண்டலத்தில் இரட்டை இலக்கத்தில் உள்ள மாவட்டம் ஒன்று சேலம், மற்றொன்று கோவை. சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. சேலத்தை பொறுத்தவரை முதல்வர் இ.பி.எஸ்., ஸுக்கு இந்த தேர்தல் மிகப் பெரிய மானப் பிரச்னை. அதைப்போலவே, கோவை மாவட்டத்தின் வெற்றியும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் தன்மானப் பிரச்னை.

இன்றைய நிலையில் அவர் முதல்வராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் முதல்வராக எஸ்.பி.வேலுமணி, பதவியேற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக நம்பிக்கையோடு இருக்கும் அவரது விசுவாசிகள், 2016 தேர்தலில் கோட்டை விட்டதைப் போல இந்த தேர்தலில் ஏமாந்து போகாமல், 10 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக வேட்டையாட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகளை வெறியேற்றி வைத்திருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

இப்படிபட்டநேரத்தில், கோவை மாவட்டத்தில் பாஜக., தமாகா ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியோ இரண்டு தொகுதிகளோ ஒதுக்கப்படலாம் என்று பேச்சு பலமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும், கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள் தங்கள் கையை விட்டுப் போவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று பொங்குகிறார்கள் கோவை மாநகர அதிமுக நிர்வாகிகள்.

அதன் வெளிப்பாடுதான், கோவை தெற்கு தொகுதி, பாஜக.வுக்கு ஒதுக்கப்படவுள்ளது என்று தகவல் கசிந்தவுடன் அதிமுக நிர்வாகிகள் கூட்டமாக திரண்டு, கோவையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு தொகுதியை பாஜக.வுக்கு ஒதுக்கக் கூடாது, அதிமுக.வே மீண்டும் போட்டியிட வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

கோவை தெற்கு தொகுதியில், பாஜக மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடவுள்ளதாக அங்குள்ள பாஜக நிர்வாகிகள் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு திரிவதுதான், உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் சினம் கொள்ள காரணமாகும்.

இந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. அதிமுக.வைச்சேர்ந்த அம்மன் அர்ச்சுனன். இவர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நிழல் போன்றவர். அவருக்கு தொகுதி வழங்காமல், பாஜக.வுக்கு வழங்குவதுதால் தொடை தட்டுகிறார்கள் கோவை தெற்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள்.

இதேபோல, கோவை வடக்குத் தொகுதியும் அதிமுக நிர்வாகிகளுக்கு மானப் பிரச்னை பேன்றதுதான். இந்த தொகுதியின் சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி. அருண்குமார், இந்த முறை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு தாவுகிறார். ஏன் இந்த தொகுதி, கூட்டணிக் கட்சிக்கு போகிறதா என்று அப்பாவியாக கேட்காதீர்கள்.

இந்த தொகுதியை குறி வைத்திருப்பவர், அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மறுஉருவமான சந்திரசேகர். கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளராக பதவி வகிக்கும் இவர்தான், அமைச்சரின் ஆல் இன் ஆல் அழகுராஜா.

கோயிலுக்குச் சென்றால் மூலவரை பார்த்தால் கூட காரியம் கை கூடாது. பூசாரி மனசு வைத்தால்தான் என்பார்களே அதுபோல, சந்திரசேகர் கண் அசைவு இல்லாமல் அமைச்சர் மூச்சு கூட விட மாட்டார் என்கிறார்கள், இருவருக்குமான பொது நண்பர்கள்.

அதிமுக.வின் சிட்டிங் தொகுதியான கோவை தெற்கு கூட்டணிக் கட்சிக்கு தாரை வார்க்கப்படவுள்ளது என்ற தகவலையறிந்தே அதிமுக.வினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களுக்கு இருக்கும் ரோஷத்தில் துளிகூட கோவை தெற்கு தொகுதி திமுக.வினருக்கு இல்லையா என கேள்வி எழுப்புகிறார்கள் அந்த தொகுதி பொதுமக்கள்.

திமுக கூட்டணியிலும், இநத தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் கசிகிறது. இந்த தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டு பரிதாபமாக தோற்றுப் போனார். இந்த முறையும் காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் தோல்வி உறுதி என்று அடித்து கூறும் உள்ளூர் மூத்த ஊடகவியலாளர்கள், கோவை தெற்கு தொகுதியில் இஸ்லாமியர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர்.

திமுக இங்கே நேரடியாக போட்டியிட்டால்தான் உதயசூரியனுக்கு வாக்களிப்பார்கள். அதற்கு மாறாக காங்கிரஸ் போட்டியிட்டால், பாதிக்கு மேல், மக்கள் நீதி மய்யத்திற்கு சென்று விடும். காங்கிரஸ் தோல்வி பெறுவதோடு, பாஜக.வுக்கு ஒரு தொகுதி நிச்சயம் என்பதை தேர்தலுக்கு முன்பாக சொல்லிவிடலாம் என்று கூறுகிறார்கள் இஸ்லாமிய பெரியோர்கள்.

அதிமுக தொகுதியை தக்க வைக்க போராடும் அளவுக்குக் கூட, காங்கிரஸிடமிருந்து இந்த தொகுதியை திமுக.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்கிற தைரியம, கோவை திமுக.வினருக்கு இல்லாமல் போனதை கண்டு, என்னத்தைச் சொல்ல….என்று ஆதங்கத்தோடு பேசுகிறார்கள் திமுக ஆதரவு அனுதாபிகள்..

அதிமுக.வினரைப் பார்த்தாவது, கோவை தெற்கு தொகுதி திமுக.வினருக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வருமா? அறந்தாங்கி தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கக் கூடாது என்று புதுக்கோட்டை திமுக.வினர் தலைமைக்கு எதிராக பொங்குகிற போது, கொங்கு மண்டல திமுக.வினர் கள்ள மவுனம் சாதிப்பது ஏனோ….

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கையை கட்டிப் போட்டுவிட்டதா.. அவ்வளவு சாதுக்களா, கோவை மாவட்ட திமுக.வினர்?.