Sat. May 18th, 2024

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 7 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற திமுக சிறப்பு பொதுக்கூட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும், தொலைநோக்கு பார்வையாக 7 துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டங்களையும் வெளியிட்டார்.

அவர் அறிவித்த புதிய திட்டங்கள், தங்களுடையது என்று மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார். இதேபோல, பிரதமரின் செயல்திட்டங்களைதான், மு.க.ஸ்டாலினும் நகலெடுத்து அறிவித்துள்ளார் என பாஜக.வும் சாடியுள்ளது.

இந்தநிலையில், திமுக.வுக்கு போட்டியாக அதிமுக.வும் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத் தலைவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் எங்களுடையது. அது எப்படியோ கசிந்து விட்டது. அதைதான் காப்பியடித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதியாக சொல்லியுள்ளார் என்று புகார் தெரிவித்தார். தொடர்ந்து, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்றும், ஆண்டு ஒன்றுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அதிமுக.வுடன் இணைப்பு என்று பேச்சுக்கே இடமில்லை. சசிகலாவே அரசியலில் இருந்து ஒதுக்கி விட்டதாக சொல்லிய பிறகு அதுபற்றி கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கூட்டணி கட்சிகளுடான தொகுதி பங்கீடு, தொகுதிகளை அடையாளம் காண்பது, அதிமுக வேட்பாளர் தேர்வு என அனைத்து பணிகளும் இரண்டொரு நாளில் நிறைவு செய்து, அறிவிக்கப்பட்டு விடும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.