வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள் ஒதுக்கீடாக 10.5% இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
உள்இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல் காரணங்களுக்காக சட்டம் இயற்றப்பட்டு உள்ளது என்றும் 10.5 % வன்னியர்களுக்கு கொடுத்ததால் மற்ற சாதியினருக்கு பாதிப்பு என்றும் சாதிவாரி புள்ளிவிவரங்களைப் பெறுவதற்கு நீதிபதி குலசேகரன் தலைமையிலான ஆணையத்திற்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ள நிலையில், தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 9) நடைபெற்றது. இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு, நீதிபதிகள், இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும்,
போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் மனுவுக்கு 8 வாரங்களில் தமிழக அரசுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.