பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில், சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், தமது நேரடி கண்காணிப்பில் பாலியல் தொந்தரவு வழக்கு விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி முன்பு ஆஜாராகி வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், சிறப்பு டிஜிபி.க்கு எதிராக பாலியல் தொந்தரவு புகார் கொடுக்க சென்னைக்கு வந்தபோது, பரனூர் சுங்கச்சாவடி முன்பு, செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன், தன்னை வழிமறித்து மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி வாக்குமூலம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருபக்கம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை சூடுபிடித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக டிஜிபி திரிபாதியிடம் 12 பெண் ஐபிஎஸ் உயரதிகாரிகள் நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன், பொருளாதார குற்றப்பிரிவுக்கு அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக செங்கல்பட்டு எஸ்.பி.ஆக சுந்தரவதனன் மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ளார். மாலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட கண்ணன், இரவு 10 மணியளவில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, தேர்தல் ஆணையம் அதிரடி காட்டியுள்ளது.
இதேபோல, முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள மற்ற ஐபிஎஸ். அதிகாரிகளுக்கு எதிராகவும் துறை ரீதியிலான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படவுள்ளதாக காவல்தறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.