சர்வதேத அளவில் சிறந்த முதல் 20 பெண் ஆளுமைகள் விருது, தமிழகத்தைச் சேர்ந்த தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் Multi Ethnic Advisory Task Force, அமைப்ப ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, பெண்கள் உரிமை, பொருளதாரம், சமூகம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை செலுத்தி வரும் பெண் ஆளுமைகளை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.
அதன்படி, நடப்பாண்டிற்கான 20 பெண் ஆளுமைகளில், தமிழகத்தைச் சேர்ந்த, ஆந்திர ஆளுநர் மற்றும் புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை கூடுதலாக நிர்வகித்து வரும் தமிழிசை சவுந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவின் இல்லினாய்ஸில் நடைபெற்ற இந்த விழாவில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. சர்வதேச பெண் ஆளுமைகளில், அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் உள்பட மேலும் 18 பேருக்கு வழங்கப்பட்டது.
பெண்கள் உரிமை, பாலின சமத்துவம், பழங்குடியினர் மேம்பாடு, உள்ளிட்ட பல்வேறு துறைகளில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பான சேவை ஆற்றி வருவதாக, விருது வழங்கும் விழாவில் அவருக்கு புகழ் மாலை சூட்டப்பட்டது.
கொரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக அமெரிக்க செல்ல முடியாத நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இருந்தே காணொலி வாயிலாக இந்த விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று, சர்வதேச பெண் ஆளுமைக்கான விருதைப் பெற்றுக் கொண்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பெண் ஆளுமையான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பல்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் நடைபெற்ற விருது வழங்கும் விழா காணொளியை, ஆளுநர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.