Thu. Nov 21st, 2024


விக்கிரவாண்டி சட்டமன்றத் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது, ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் உறுதியாக வெற்றி பெறும் என்பது கடந்த கால வரலாறாக இருந்தாலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, போட்டியில் இருந்து விலகியதால், பாஜக-பாமக கூட்டணி அதிக வாக்குகளை வாங்காத வகையில், முழுவீச்சில் களப்பணியாற்ற வேண்டிய கட்டாயம், ஆளும்கட்சியாக திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. அதிமுகவும் களத்தில் இருந்தால் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள், பாமக, நாம் தமிழர் கட்சி என மூன்றாக பிரிந்து, வாக்கு வித்தியாசம் அதிகளவில் காட்டுவதற்கான வாய்ப்பு திமுகவுக்கு கை கூடியிருக்கும்.

திராவிட மாடல் ஆட்சியின் முதல்வரான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சந்திக்கும் 2 வது இடைத்தேர்தல் விக்கிரவாண்டியாகும். முதல்வரின் சகோதரர் மதுரை மு.க.அழகிரி அறிமுகப்படுத்திய திருமங்கலம் பார்மூலாவை விட வாக்காளர்களை பட்டியலில் அடைக்கும் ஈரோடு கிழக்கு பார்மூலா நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது. ஒரே ஒரு இடைத்தேர்தலுக்காக 300 கோடி ரூபாய்க்கு மேல் ஆளும்கட்சியான திமுக செலவழிக்க திட்டம் தீட்டிய அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் வாசம் செய்து கொண்டிருக்கிறார்.

அதிமுகவுக்கு அபரிதமான வாக்கு வங்கி கொண்ட கொங்கு மண்டலத்திலேயே ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிராக களம் கண்ட அதிமுக, டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொள்ளவே கடுமையாக போராடியது. ஈரோடு மாவட்டத்தில் செல்வாக்குமிகுந்த அதிமுக தலைவரான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கடுமையாக தேர்தல் பணியாற்றியும், அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களான முன்னாள் முதல்வர் எடப்பாடியார், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி ஆகியோரின் செல்வாக்கையும் கூட வெட்டவெளிச்சமாக்கிவிட்டது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் படுதோல்வியை எதிர்கொண்ட அதிமுக கூட்டணி, ஓராண்டிற்குள்ளாகவே நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டு, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியையே எதிர்கொண்டது

2023 ல் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளிவிடும் வகையில் பாமக, தமாகா,புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளை அதிமுக கூட்டணியில் இருந்து பிரித்து, பாஜக கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்ள வைத்ததோடு, தாமரை சின்னத்தில் 9 இடங்களில் இரண்டாம் இடத்தையும் பிடித்தது.


அதிமுகவின் செல்வாக்கை அடித்து நொறுக்கும் எண்ணத்தோடு பாஜக தலைமையில் தனியாக கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட தமிழக தலைவர் கே.அண்ணாமலை, 12 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்து 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி, ஆளும்கட்சிக்கு நேர் எதிரான அரசியல் சக்தியாக பாஜகவை முன்னிறுத்திய விசித்திரத்தையும் தமிழ்நாடு பார்த்தது.

அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு இருந்தால், திமுகவின் 40 க்கு 40 என்ற குறிக்கோள் தகர்க்கப்பட்டு, 30 எம்பி தொகுதிகள் அதிமுக பாஜக கூட்டணிக்கு கிடைத்திருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் உரக்க கூறினார்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் கற்றுத் தந்த பாடத்தையும் அண்ணாமலை புறம் தள்ளிவிட்டார் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.

திமுகவைப் போலவே தமிழக அரசியலில் அதிமுகவும் மாபெரும் செல்வாக்கு கொண்ட அரசியல் கட்சி என்பதை அண்ணாமலையும் அன்புமணியும் ஏற்றுக் கொள்ளாததற்கு இருவரிடம் மிதமிஞ்சி இருக்கும் ஆணவம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள் இரண்டு கட்சிகளையும் சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள்.
விளையாட்டு பிள்ளைகளின் வெள்ளாமை வீடு வந்து சேராது என்பதற்கு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, பாமக அடைந்த படுதோல்வியே சிறந்த எடுத்துக்காட்டு என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.

ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றிப் பெற்றுவதற்கு முக்கிய காரணமே பலமான கூட்டணி என்பதை அண்ணாமலை ஏற்றுக் கொள்ளவே மறுக்கிறார் என்கிறார்கள் அவரது தீவிர ஆதரவாளர்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தினால், திமுக வேட்பாளரை எளிதாக வீழ்த்தி விட முடியும் என்பதுதான் அனுபவம் மிகுந்த அரசியல் தலைவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவுக்கு இருக்கும் செல்வாக்குக்கிற்கு இணையாகவே அதிமுகவுக்கும் இருக்கிறது என்பதை, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கிறது.

தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மூன்று கட்சிகளின் சார்பில் அதிமுக வேட்பாளரை பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு அண்ணாமலை முயற்சியெடுத்து இருந்தால், நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கசப்பு மறந்து போய் இருக்கும் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.

நடந்து முடிந்த விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ரவிக்குமார் மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தனித்து போட்டியிட்ட அதிமுகதான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் விழுப்புரம் தொகுதியில் மூன்றாம் இடத்தைதான் பிடித்தது. விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணிக்கு விழுந்த வாக்குகள் 72 ஆயிரத்து 188 வாக்குகள்.இரண்டாம் இடத்தை பிடித்த அதிமுகவுக்கு 65 ஆயிரத்து 825 வாக்குகள். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவுக்கு 32 ஆயிரத்து 198 வாக்குகள் தான் கிடைத்துள்ளன.

வன்னியர்கள் நிறைந்த விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவுக்குதான் அதிகமாக வாக்குகள் கிடைத்துள்ளதை சுட்டிக்காட்டும் அதிமுக மூத்த நிர்வாகிகள், ஆளும்கட்சியான திமுகவுக்கு இடைத்தேர்தலில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வலிமை அதிமுகவுக்குதான் இருக்கிறது என்கிறார்கள்.
ஒருமாத இடைவெளியில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவை பொது வேட்பாளராக அறிவித்து பாமகவும் பாஜகவும் விக்கிரவாண்டியில் பிரசாரம் மேற்கொண்டால், திமுக வேட்பாளரை நிச்சயம் தோற்கடித்து விட முடியும் என்கிறார்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.
அண்ணாமலைக்கு எந்தளவுக்கு ஆணவம் தலைக்கு ஏறியிருக்கிறதோ, அதேஅளவுக்கு அன்புமணிக்கும் ஆணவம் உச்சத்தில் இருக்கிறது. அதிமுகவை விட பாஜகவும் பாமகவும் பெரிய கட்சிகள் இல்லை என்பதை இரட்டையர்கள் ஏற்பதற்கே மறுக்கிறார்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதிமுகவை அவமானப்படுத்தும் வேண்டும் என்பதற்காகதான் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சியின் அராஜகம் அதிகமாகவே இருக்கும் என்று சொல்லி, இடைத்தேர்தலைகளை தொடர்ந்து புறக்கணித்து வந்தவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

டாக்டர் ராமதாஸினின் நீண்ட நெடிய தேர்தல் கால அனுபவங்களுக்கு மதிப்பு அளிக்காமலும், ஒட்டுமொத்த பாமக நிர்வாகிகளின் விருப்பத்திற்கு மாறாகவும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியை புறம்தள்ளிவிட்டு பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடுவதற்கு கடைசி நேரத்தில் அன்பு மணி முடிவெடுத்தாரோ, அதைப்போலவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிட வேண்டும் என்று தன்னிச்சையாகவே முடிவெடுத்து இருக்கிறார் அன்புமணி என்கிறார்கள் பாமக மூத்த தலைவர்கள்.

திமுகவுக்கு நேரடி போட்டி பாமக என்றால், வன்னியர் சமுதாயத்திற்கு எதிரான அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் திமுகவுக்குதான் பெருவாரியாக வாக்காளிப்பார்கள். இஸ்லாமியர், கிறிஸ்துவர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களும் திமுகவுக்குதான் வாக்காளிப்பார்கள்.
அதிமுக தேர்தலை புறக்கணித்திருந்தாலும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பாமகவுக்கு மனப்பூர்வமாக வாக்காளிப்பார்களாக என்பது சந்தேகத்திற்குரியது என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் சேராமல் பாமக-பாஜக கூட்டணியில் இணைந்த போது, விழுப்புரம் மாவட்டத்தில் பாமகவுடன் எப்போதுமே மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் சி.வி.சண்முகம், அன்புமணி மீது வைத்த விமர்சனங்களை, ஒரு மாத காலத்திற்குள்ளாக பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் மறந்திருக்க மாட்டார்கள்.

அதுபோலவே, பாமக கூட்டணி மாறியதால் அதிமுகவுக்கு அவமானகரமான தோல்வி ஏற்பட்டுவிட்டதே என்று மனம் நொந்து கிடக்கும் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பாமகவின் வெற்றிக்கு உதவமாட்டார்கள். அந்தளவுக்கு பாமக மற்றும் அதிமுகவினரிடையே சி.வி.சண்முகம் விரோதத்தை அதிகப்படுத்தி வைத்திருக்கிறார்.

இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தவரே சி.வி.சண்முகம்தான் என்று கூறும் விழுப்புரம் மாவட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள், அதிமுக போட்டியிட்டால், தேர்தல் செலவுக்கு பல கோடி ரூபாய்களை தனது சொந்த பணத்தில் இருந்து செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதால்தான் அதிமுக புறக்கணிப்பு என்ற நிலைக்கு எடப்பாடியாரை தள்ளிவிட்டார் சி.வி.சண்முகம் என்கிறார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் தோல்வியை சந்தித்த சி.வி.சண்முகம், 2022ம் ஆண்டில் ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் போட்டியிட்டு மக்களின் அபரிதமான ஆதரவோடு வெற்றி பெற முடியாத சண்முகம், ஐந்து பைசா செலவில்லாமல் எம்பி ஆகிவிட்டார். அன்றைய தேதியில், தன்மானத்தை இழந்துவிட்டுதான் பாஜக தலைவர் கே.அண்ணாமலையை தேடிச் சென்று ஆதரவு கேட்டார். எம்பி ஆக தேர்வு செய்யப்பட்ட பிறகும் கூட அண்ணாமலையை தேடிச் சென்று நன்றி தெரிவித்தவர்தான் சிவி.சண்முகம்.

அதிமுகவில் ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயத்தினரின் ஆதரவு பெற்ற ஒரே தலைவராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் சி.வி.சண்முகம், அதிமுகஉட்கட்சி விவகாரத்தில் பொறுமை காக்காமல் முந்திரிகொட்டை மாதிரி தேவையில்லாத விவகாரங்களில் எல்லாம் மூக்கை நுழைந்து, சர்ச்சைக்குரிய
கருத்துகளை தெரிவித்து, எடப்பாடியார் உள்ளிட்ட அதிமுக முன்னணி தலைவர்களையே கொந்தளிக்க வைப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் சி.வி.சண்முகம்.

அதிமுகவில் தன்னைவிட புத்திசாலிகள் யாருமே இல்லை என்பதை போல நடந்து கொள்ளும் சி.வி.சண்முகம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை நிறுத்தி, திமுகவின் செல்வாக்கை தகர்த்து எறியும் வகையில் கள பணியாற்றாமல் ஆளுமையற்ற தலைவர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் புறமுதுகு காட்டி ஓடியதால்தான், எடப்பாடியாரின் தலைமைக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.

இன்றைக்கு அதிமுகவின் பொதுச் செயலாளர், பிரதான எதிர்க்கட்சித்தலைவர் என்ற அதிகாரமிகுந்த பதவிகளில் இருந்தாலும் கூட, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் சொல் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்தான் எடப்பாடியார் என்ற அவப்பெயர்தான் தற்போது எழுந்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்க காரணமாக இருந்த அண்ணாமலை மற்றும் அன்புமணியிடம் இடைத்தேர்தலையொட்டி எடப்பாடியார் சரண்டராகிவிட்டாரே என்று குமறுகிறார்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து அதிமுக தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதால், எடப்பாடியாருக்கு எதிராக திமுகவும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் முன் வைக்கும் விமர்சனத்தை விட சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள நடுநிலையாளர்கள் அதிகமாகவே எடப்பாடியாரை வசைப்பாடி வருகிறார்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது என்ற அறிவிப்பு வெளியான பிறகு கும்பகர்ண தூக்கத்தில் இருந்த வி.கே.சசிகலா, மீண்டும் எழுச்சி பெற்ற தலைவராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார். எடப்பாடியாரின் தேர்தல் புறக்கணிப்பை விமர்சனம் செய்த வி.கே.சசிகலா, அதிமுக மீட்டு அதற்கு தலைமையேற்று வழிநடத்தி 2026 ல் ஆளும்கட்சியாக வீறுநடை போட உழைப்பேன் என்று சபதம் எடுத்திருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பச்சை துரோகம் செய்துவிட்டு பாஜக கூட்டணியில் களம் கண்ட ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்ட நேரத்தில், அதிமுகவால் அடையாளத்தையும், அதிகாரத்தையும் அனுபவித்த இருவரும், ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மாறாக, பாஜக கூட்டணியில் தேர்தல் போட்டியிட்டதை கடுமையாக கண்டிக்கும் வகையில், அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடுவதற்கு கூட துணிவு இல்லாதவராகதான் இருந்தார் வி.கே.சசிகலா.

அப்படிபட்டவர்தான் அதிமுகவை மீட்பேன் என்று சூளுரைப்பதை அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களுமே காமெடியாக பார்க்கும் போது, எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவினர், வி.கே.சசிகலாவின் செய்தியாளர்கள் சந்திப்பை வெற்றுக் கூச்சல் என்றுதான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுகவின் எதிர்காலம், 2026 சட்டமன்றத் தேர்தலை நம்பிதான் இருக்கிறது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணியை அமைத்து, ஆளும்கட்சி மீதான அதிருப்தியை ஒருசேர அதிமுக கூட்டணிக்கு சேதாரம் இல்லாமல் வந்து சேரும் வகையில், வியூகம் அமைத்தால் தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடியார் நீடிக்க முடியும் என்று உறுதிபட கூறுகிறார்கள் கொங்கு மண்டல அதிமுக மூத்த தலைவர்கள்.