தாரை.வே.இளமதி., சிறப்புச் செய்தியாளர்..
இந்தியாவிலேயே எந்தவொரு மாநிலத்திலும் நிகழ்த்தப்படாத சாதனையாக, தமிழகத்தில் மட்டுமே ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்று, பாரதிய ஜனதாவுக்கு பூஜ்யத்தை பரிசாக அளித்த மாநிலம் என்ற வரலாற்று புகழை தாங்கி நிற்கிறது.
புதுச்சேரியை உள்ளடக்கி தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாசிச பாஜக படுதோல்யை சந்தித்தற்கும், அதன் கூட்டணிக் கட்சிகள் மண்ணைக் கவ்வியதற்கும் வித்திட்டவர் திராவிட மாடல் ஆட்சிக்கு தலைமை ஏற்றிருப்பவரும் திமுக தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என்று பாரதிய ஜனதாவுக்கு எதிராக களமாடும் தேசிய அளவில் செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர்களே மனம் திறந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சி குறைவதற்கு முன்பாகவே, திமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசி வருவது, திமுகவின் தலைமையில் களமாடி கொண்டிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய காங்கிரஸில் செல்வாக்குமிகுந்த இளம் தலைவர் ராகுல்காந்தியே, திமுகவையும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழகத்தில் காங்கிரஸை வளர்த்தெடுக்க போகிறோம் என்று அட்டைக்கத்திகளை வீசிக் கொண்டிருக்கும் செல்வப்பெருந்தகைக்கு, உட்கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகள் கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கிறது.
பின்விளைவுகளைப் பற்றி துளியும் கவலைப்படாதவர் என்று தமிழக காங்கிரஸில் அழியா புகழைப் பெற்றிருக்கும் கிளர்ச்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக காங்கிரஸ் கட்சியின் உண்மையான பலம் என்ன என்பதை முழுமையாக உணர்ந்து கொண்டிருப்பதால்தான், செல்வப்பெருந்தகை முன்வைத்த தனித்த வளர்ச்சி என்ற முழக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில், பேராசை படக் கூடாது என்று உரக்க கூறியிருக்கிறார்.
திராவிட இயக்க சித்தாந்தங்களை உயிர்மூச்சாக கொண்டிருக்கும் திமுகவை எதிர்த்து அரசியல் செய்து, தமிழக காங்கிரஸின் நிரந்தர தலைவராகிவிட செல்வப்பெருந்தகை மூளையை கசக்கினால், சொந்தக்கட்சிக்குள்ளேயே கலகக்குரலை எழுப்பி அடிமடியிலேயே கை வைத்து அடித்தளத்தையே ஆட்டம் காண செய்துவிடும் ஆற்றல் கொண்டவராக மாறி நிற்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
இளங்கோவனின் கடந்த கால வரலாற்றை புரட்டிபார்த்தால், மனதில் எதிரியாக ஒருவரை அவர் பாவிக்கிறார் என்றால், அவர் எவ்வளவு செல்வாக்குமிகுந்தவராக இருந்தாலும் அவரின் அரசியல் வாழ்க்கையை மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையும் படுகுழியில் தள்ளிவிடும் அளவுக்கு வீரியம் கொண்டவர்தான் இளங்கோவன் என்பதை பழம்பெரும் காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
காங்கிரஸில் ரவுடிகள் இருந்தால் அவர்களை கூண்டோடு களையெடுக்க வேண்டும் என்று போகிற போக்கில் இளங்கோவன் சொல்லிவிடவில்லை என்பதையும் யாரை குறிவைத்து அந்த விமர்சனத்தை முன்வைத்தார் என்பதையும் செல்வப்பெருந்தகை ஒருநிமிடம் நிதானமாக யோசித்துப் பார்த்தால், திமுகவை சீண்டுவதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கைகே தாமே குழி தோண்டிக் கொள்கிறோமா என்ற உண்மை புலப்படும் என்று எச்சரிக்கிறார்கள் காங்கிரஸில் நீண்ட காலமாக பயணித்துக் கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள்.
செல்வப்பெருந்தகைக்கு எதிராக ஈவிகேஎஸ் இளங்கோவன் கொளுத்திப் போட்டுள்ள நெருப்பு, வரும் நாட்களில் காங்கிரஸின் எல்லா மட்டங்களிலும் பரவ தொடங்கும் என்று அச்சப்படும் தலித் தலைவர்கள், திமுகவோடு மோதினால் பின்விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளும் அளவுக்கு அரசியல் ஞானம் இல்லாதவராகவா செல்வப்பெருந்தகை இருக்கிறாரா என்று கேள்விகளை எழுப்புகிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே முதல்வர் மு.க.ஸ்டாலினையும், அவரது புதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினையும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அபஸ்வரமாக செல்வப்பெருந்தகையின் திமுகவுக்கு எதிரான தனித்த எதிர்ப்புக்குரல் காங்கிரஸ் தலைவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதைப் போல, திமுக இளைஞரணி நிர்வாகிகளிடமும் செல்வப்பெருந்தகையின் அண்மைக்கால பேச்சுகள் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று குண்டை தூக்கிப் போடுகிறார்கள் அமைச்சர் உதயநிதியின் தீவிர விசுவாசிகள்.
“நாடு முழுவதும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக வீரியமிக்க அரசியலை மேற்கொண்டிருக்கும் செல்வாக்குமிகுந்த மாநில அரசியல் கட்சித்தலைவர்கள் சரத் பவார், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்ரே உள்ளிட்டவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட அவரவர் மாநிலங்களில் நிகழ்த்த முடியாத சாதனையை, தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மட்டுமே நிகழ்த்தியிருக்கிறது என்றால் அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மட்டுமே காரணம் என்று கூறி ஒதுக்கி விட முடியாத அளவுக்கு அமைச்சர் உதயநிதியின் சூறாவளி பரப்புரையும், பொதுமக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்திய எதிர்க்கட்சியினருக்கு எதிராக அவர் முன்வைத்த அதிரடி விமர்சனங்களும் முக்கிய பங்காற்றியிருக்கிறது,
29 பைசா பிரதமர் என்று பட்டப்பெயர் சூடி, 40 தொகுதிகளில் கிண்டலும் கேலியுமாக மத்திய பாஜக அரசை அமைச்சர் உதயநிதி வாசைப்பாடியதை தமிழகம் மற்றும் புதுச்சேரி வாக்காளர்கள் ஆரவாரத்துடன் ரசித்ததை 3 வது முறையாக ஆட்சியை கைப்பற்றிருக்கும் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுமே நன்றாக உணர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், திமுக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகித்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான செல்வப்பெருந்தகை, உயிரைக் கொடுத்து பணியாற்றிய உதயநிதியை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்” என்று ஆவேசம் காட்டுகிறார்கள் திமுக இளைஞரணி மூத்த நிர்வாகிகள்.
காங்கிரஸின் உட்கட்சிக் கூட்டத்தில் திமுகவின் செல்வாக்கை கேலி கூத்தாக்கும் வகையில் பேசிய செல்வப்பெருந்தகை, தமது கடந்த கால வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் பற்றி யாருக்குமே தெரியாது என்ற நினைப்பில், காங்கிரஸில் கிடைத்திருக்கும் திடீர் செல்வாக்கின் மயக்கத்தால் தமிழகத்தில் தன்நிகர் இல்லாத தலைவராக தன்னை பாவித்துக் கொண்டு போடும் ஆட்டம், அவரது அரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்பதை செல்வப்பெருந்தகை உணர்ந்து கொள்ளு ம் காலம் வெகு தொலைவில் இல்லை”என்று பூடகமாக எச்சரிக்கை விடுக்கிறார்கள் திமுக இளைஞரணி மூத்த நிர்வாகிகள்.
செல்வப்பெருந்தகைக்கு எதிராக திமுக இளைஞரணியினரின் கொந்தளிப்பதற்கு பின்னணியில் உள்ள விடயம், விவகாரமாக மாறியிருப்பதுதான் அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாகும்
திமுகவை எதிர்த்து அரசியல் செய்வது என்பதை போகிற போக்கில் செல்வப்பெருந்தகை முன்வைக்கவில்லை. அவரின் ஆழ்மனதில் அந்த எண்ணம் அழுத்தமாகவே படிந்திருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில்தான் அடுத்தடுத்து நிகழும் நடவடிக்கைகள் இருக்கிறது என்று கூறும் அமைச்சர் உதயநிதியின் தீவிர விசுவாசிகள், விளவங்கோடு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தாரகை கத்பெர்ட், ஜுன் 12 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சுகளை திமுக இளைஞரணி நிர்வாகிகளால் சாதாரணமாக கடந்து போகமுடியாத அளவுக்கு அமைந்துவிட்டது என்கிறார்கள்.
5 நிமிடத்திற்கு மேல் பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வெற்றிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்த தேர்தல் வியூகமும், பரப்புரையும், மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகளும் தான் வரலாறு காணாத வெற்றியை பெற்றுத் தந்தது என்று விரிவாக கூறியவர், ஒரு வார்த்தைக் கூட அமைச்சர் உதயநிதியின் தேர்தல் பரப்புரை பற்றி குறிப்பிட்டு சொல்லாதது தற்செயலான நிகழ்வாக பார்க்க முடியவில்லை. உதயநிதி மீதான வன்மம், செல்வப்பெருந்தகையின் நாடி நரம்பெல்லாம் பரவியிருப்பதாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது என்று கொந்தளிக்கிறார்கள் அமைச்சர் உதயநிதியின் தீவிர விசுவாசிகள்.
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் உதயநிதி மேற்கொண்ட பரப்புரைக்கு கிடைத்த வெகுமதிதான், கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகளை விட பல ஆயிரம் கூடுதல் வாக்குகளாக கிடைத்திருக்கிறது என்பதை செல்வப்பெருந்தகை ஒருநிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.
2024 தேர்தல் மட்டுமல்ல, 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் என கடந்த 5 ஆண்டுகளில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக உயிரை கொடுத்து பரப்புரை ஆற்றியதை எல்லாம் உதாசீனப்படுத்தும் வகையில்தான், செல்வப்பெருந்தகையின் பேட்டி அமைந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டும் திமுக இளைஞரணி மூத்த நிர்வாகிகள், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவராகவும் செல்வப்பெருந்தகை இன்று நடமாடிக் கொண்டிருக்கிறார் என்றால், அதற்காகவும் உழைத்தவர் உதயநிதிதான் என்பதை நினைவில் வைத்திருந்தால், நன்றி கூறும் உணர்வு இல்லாதவராக எப்படி மாறிவிட முடியும் என்று செல்வப்பெருந்தகைக்கு எதிராக நெற்றிக்கண்களை திறக்கிறார்கள் அமைச்சர் உதயநிதியின் தீவிர ஆதரவாளர்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை இன்று நடமாடிக் கொண்டிருந்தாலும் கூட, சொந்தக் கட்சியிலேயே அவருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது என்பதையும் அவர் சார்ந்த சமுதாயத்தின் பேரதரவு பெற்ற தலைவராகவும் தான் இன்னும் வளர்ந்து விடவில்லை என்பதையும் பத்தாண்டு காலத்திற்கு முன்பு ஆயுள் முழுவதும் சிறை வாழ்க்கைக்கு வித்திடும் வகையில் நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல்கள் இன்றும் பதிவேடுகளில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் செல்வப்பெருந்தகைக்கு உரைக்கும்படி அவரது ஆதரவாளர்கள் நினைவூட்டினால், திமுகவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம், நாளைய முதல்வர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கும் அமைச்சர் உதயநிதியை உதாசீனப்படுத்தும் அளவுக்கு செல்வப்பெருந்தகைக்கு அதிகாரப் போதை அவரது கண்களை மறைத்திருக்காது என்று அக்னி வார்த்தைகளை உதிர்க்கிறார்கள் திமுக இளைஞரணி மூத்த நிர்வாகிகள்.