Sat. Nov 23rd, 2024

சமூக ஊடகங்களில் பிரபலமாவதற்கும், மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கும் இன்றைக்கு உள்ள ஒரே வழி, யூ டியூப்பை தொடங்கி திமுகவை அல்லது அதிமுகவை, பாஜகவை, சீமானை, விஜயை ஆதரித்து பேசுவதுதான் சிறந்த தொழில் நுட்பமாக மாறியிருக்கிறது.

ஆளும்கட்சியான திமுகவை விமர்சனம் செய்வதற்காக யூ டியூப் சேனலை தொடங்கியிருப்பவர்களின் பின்னணியை ஆராய்ந்தால், அதிமுகவின் முகமூடியையோ அல்லது அண்ணாமலையின் சீடர்களாகவோ, சீமானின் தம்பிமார்களாகவோ தான் பெரும்பாலும் இருப்பார்கள். அதற்கு சற்றும் குறைவில்லாமல் பாஜகவை, சீமானை, அதிமுகவை விமர்சனம் செய்யும் யூ டியூப்பர்கள், ஆளும்கட்சியான திமுகவின் ஆதரவில் யூ டியூப்பில் பொங்கிக் கொண்டிருப்பார்கள். சிதறு தேங்காய் போல, டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு ஆதரவாகவும் சிறிய எண்ணிக்கையில் யூ டியூப் பிரபலங்கள் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பத்திரிக்கை துறையில் நீண்ட அனுபவம் கொண்ட செய்தியாளர்கள் யூ டியூப்பிற்கு பேட்டியளிப்பதை விட, அதிகளவில் அரசியல் சாயம் பூசிக் கொள்பவர்கள்தான் அதிகமாக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகம் என்றால் என்ன… அரசியல் என்றால் என்ன… என்பதை பற்றியெல்லாம் தெரியாதவர்கள் கூட யூ டியூப் நடத்தி வருகிறார்கள். நெறியாளர்களாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிபட்ட நேரத்தில், அரசியலிலும் இலக்கியத்துறையிலும் மிகுந்த செல்வாக்குப் பெற்ற தமிழருவி மணியன், தமது சொந்த முயற்சியில் தமிழருவி தர்பார் என்ற பெயரில் புதிய யூ டீயூப்பை தொடங்கியிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு சிறந்த அரசியலை கற்றுத்தருவதுதான் தமது நோக்கம் என்று முழங்கிய மணியன், தர்பாரின் முதல் வீடியோவிலேயே, அண்ணாமலையை 2026ல் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைப்பதுதான் தமது ஒரே குறிக்கோள் என்ற அளவுக்கு அண்ணாமலைக்கு ஆதரவாக கொடியை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

2014 ம் ஆண்டிலேயே நரேந்திர மோடியை பிரதமர் பதவியில் அமர வைக்கும் ஒன்றை குறிக்கோளோடு, தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது கூட்டணி அமைப்பதற்கு பல மாதங்களாக உழைத்தவர்தான் மணியன்.

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவராக அமர்ந்த கேப்டன் விஜயகாந்தின் அபரிதமான செல்வாக்கு, பாஜக கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் என்ற ஆரூடத்தில், கேப்டன் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியை அமைப்பதற்கு முழு சக்தியையும் செலவிட்டவரும் மணியன்தான்.

பிரதமர் பதவிக்கு மோடியா, லேடியா என்று முழக்கமிட்ட மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் அதிமுகவை தனித்து களமாட வைத்து, 37 தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெற வைத்தார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை எதிர்கொண்டது.

இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக அமைக்கப்பட்ட மூன்றாவது அணியில் பாஜக,தேமுதிக,பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய செல்வாக்கு மிகுந்த கட்சிகள், அதிமுகவிடம் பரிதாபமாக தோற்றது. கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனும், தர்மபுரியில் அன்புமணி ராமதாஸும் வெற்றி பெற்றார்கள். மோடி வேண்டாம் என்று கூறிய தமிழக மக்கள், செல்வி ஜெயலலிதாவுக்கு ஒருமித்த ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

2014 ல் மோடியை தமிழகம் புறக்கணித்ததைப் பார்த்து அதரித்துப்போன தமிழருவி மணியன், 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது, மோடியை மீண்டும் தூக்கிப் பிடிக்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கொண்டார்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு 2024 ல் மோடியே மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று முழங்கத் தொடங்கினார் மணியன். இடைப்பட்ட காலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை நம்பி ஏமாந்து போன மணியன், அரசியலில் இருந்தே விலகுவதாக கூறியதை எல்லாம் தமிழகம் பார்த்தது.

வடமாநில மக்களிடையே இந்துமத வெறியை அதிகப்படுத்தி, மூன்றாவது முறையாகவும் மத்தியில் ஆட்சியில் அமர்ந்துவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த மோடியை, வடமாநில மக்கள் புறக்கணிக்க தொடங்கியதை கண்டு பாஜக மூத்த தலைவர்களே அதிர்ந்து போனார்கள்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே பண்பாடு என மாநில கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கும் அளவுக்கு ஆணவம் பிடித்து திரிந்த மோடியையும், அமித்ஷாவையும் இந்து மத ஆதரவாளர்களே வெறுக்க தொடங்கிய நேரத்தில், வலிய சென்று சிகப்பு கம்பளம் விரித்தார் தமிழருவி மணியன்.

இந்தியாவில் உள்ள எந்தவொரு மாநிலத்தையும் விட கல்வி,மருத்துவம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மேம்பட்டிருக்கும் வகையில் தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றிய திராவிட கட்சி ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக துடித்துக் கொண்டிருக்கும் தமிழருவி மணியனைப் பார்த்து வேதனைப்படுகிறார்கள் காந்தியவாதிகள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற அபரிதமான வெற்றியைப் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தில், அலறிக் கொண்டிருக்கிறார் மணியன். ஊழல் ஆட்சியில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன்தான் அண்ணாமலை என்ற அளவுக்கு பொய் கதைகளை கட்டவிழ்த்து விடுகிறார் தமிழருவி மணியன்.

55 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நேர்மையற்ற வழியில் சொத்துகளை சேர்க்கவில்லை என்று தன்னிலை விளக்கம் கொடுக்கும் மணியன், தமிழக பாஜக தலைவராக பதவியேற்ற மூன்றாண்டுகளில் அண்ணாமலைக்கு, மாதந்தோறும் 8 லட்சம் ரூபாய் அளவுக்கு செலவழித்துக் கொண்டிருக்கும் நண்பர்களின் பட்டியலை பகிரங்கமாக அறிவிக்கும் துணிச்சல் அண்ணாமலையிடம் இருக்கிறதா என்று கேள்விகளை முன்வைப்பாரா மணியன் என்று ஆவேசம் காட்டுகிறார்கள் மணியனின் ஆத்மார்த்தமான நண்பர்கள்.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை விலைக்கு வாங்கியதாக கூறிய விவகாரத்திலேயே உண்மையை மறைத்தாரே அண்ணாமலை.. அப்படிபட்டவர்தான் ஊழலற்ற ஆட்சியை தமிழகத்திற்கு கொடுப்பார் என்று சர்டிபிகேட் கொடுப்பதற்கு மணியன் கடைப்பிடித்து வரும் காந்திய சிந்தனை எப்படிதான் மனம் கொடுக்கிறதோ..

அண்ணாமலையின் மைத்துனர், கடந்த ஓராண்டிற்குள்ளாகவே பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வாங்கியிருக்கிறார் என்பதும், அரசு விதிகளுக்கு புறம்பாக செங்கல் சூளை அமைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் அண்ணாமலையிடம் பதில் இல்லாமல் போகலாம். தமிழருவி மணியன் நினைத்தால் ஒரு சில மணிநேரங்களில் உண்மையை கண்டறிந்து, பொதுமக்கள் முன்பு வைக்கலாமே..

அண்ணாமலையை முதல் அமைச்சர் பதவியில் அமர வைக்கும் வரை ஓய மாட்டேன் என்று சபதம் எடுத்திருப்பதை போல முழங்க தொடங்கியிருக்கும் மணியன், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் அடுத்த முதல் அமைச்சர் என்று கூறப்படும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கொம்பு சீவும் வேலையை இன்றைய தேதியில் இருந்தே தொடங்கியிருப்பதுதான் திமுக முன்னணி தலைவர்களை கோபத்தில் கொந்தளிக்க வைத்துள்ளது.

இன்றைய தேதியில் திமுக ஆளும்கட்சி. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வலுவான பூத் கமிட்டிகளை வைத்திருக்கும் 75 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கட்சி. பலதலைமுறைகளாக திமுக எனும் இயக்கத்திலேயே தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் கொள்கைப் பிடிப்பு உள்ள லட்சக்கணக்கான நிர்வாகிகளை கொண்ட கட்சி. 2019,2021,2024 ஆகிய மூன்று பொதுத் தேர்தல்களில் வெற்றிக் கூட்டணி என்பதை நிரூபித்துள்ள நிலையில், இதே கூட்டணியே 2026 தேர்தலையும் எதிர்கொள்ளும் என்பதும் உறுதியாகியிருக்கிறது.

மாநில சுயாட்சியை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்ற உறுதியான மனநிலையில் உள்ள கட்சிகளை கொண்ட திமுக கூட்டணியை எதிர்க்க, அண்ணாமலைக்கு கொம்பு சீவும் வேலையை தமிழருவி மணியன் கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார்.

மணியனுக்கு முன்பாக யூ டியூப் பிரபலங்களான ஊடகூகவியலாளர்கள் ரங்கராஜ் பாண்டே, துக்ளக் ரமேஷ், கோலாகல சீனிவாசன் ஆகியோரும் மூன்று ஊடகவியலாளர்களுக்கு முன்பாகவே பாரதிய ஜனதாவை வரிந்துக் கட்டிக் கொண்டு ஆதரிக்கும் யூ டியூப் பிரபலம் மாரிதாஸ் ஆகியோரும் கூட தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்று படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

அண்ணாமலைதான் தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் என்று தமிழருவி மணியன், பாண்டே, ரமேஷ், சீனிவாசன் ஆகியோர் முழங்கி கொண்டிருக்கும் வேளையில், மாரிதாஸ் மட்டுமே அண்ணாமலையை நேர்மையான தலைவராக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

கடந்த ஓராண்டிற்கு மேலாக அண்ணாமலையை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார் மாரிதாஸ். அதற்கு முக்கிய காரணம், தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதாவை வளர்த்து கொண்டிருக்கும் எந்தவொரு தலைவர்களுக்கும் அண்ணாமலை முக்கியத்துவமே தருவதே இல்லை என்பதுதான்.

அண்ணாமலையை மட்டுமே புகழ்வதற்காக வார் ரூம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் அராஜக குழு மீதும், அண்ணாமலையை தவறான பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கும் அமர் பிரசாத் ரெட்டி, திருச்சி சூர்யா உள்ளிட்டோர் மீதும் மாரிதாஸுக்கு பயங்கரமான கோபம் இருக்கிறது.

இளம்படை என்ற பெயரில் சட்டவிரோத செயல்களுக்கு பெயர் பெற்ற கும்பலுக்கு தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கியிருப்பதை மாரிதாஸ் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார். அண்ணாமலைக்கு எதிராக மாரிதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைப்பதை போலவே, திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜக பிரமுகர் கல்யாண ராமன் ஆகியோருமே அண்ணாமலையின் அராஜக அரசியலை எதிர்த்தவர்கள்தான்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, பேராசிரியர் ராம சீனிவாசன் போன்ற முக்கிய தலைவர்களும் கூட அண்ணாமலையின் சுயநல அரசியலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக பாஜகவில் சீனியர் தலைவர்களாக உள்ளவர்களும், பெரும்பான்மையான மாவட்ட தலைவர்களும் அண்ணாமலையின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராகதான் உள்ளார்கள்.

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை தூக்கியெறிந்தால், 70 சதவீதத்திற்கு மேலான பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடும் மனநிலையில் உள்ள நேரத்தில், அண்ணாமலைக்கு கொடி பிடிக்க தொடங்கியிருக்கிறார் தமிழருவி மணியன் என்கிறார்கள் பாஜக மூத்த தலைவர்கள்.

அண்ணாமலையை முழுவீச்சில் மணியன் ஆதரிப்பதிலும் ஒரு நிம்மதி என்று ரகசியமாக கூறும் பாஜக தலைவர்கள், தமிழக அரசியலில் தமிழருவி மணியன் ஆதரித்த கூட்டணியோ, தனித்த அரசியல் தலைவர்களோ வெற்றி பெற்றதாகவே சரித்திரம் இல்லை என்பதால், அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கையும் 2026க்குள் அஸ்தமனமாகிவிடும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.

2026 ல் திமுக ஆட்சி மீண்டும் அமையக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தமிழருவி மணியன், திமுகவுக்கு மாற்றாக மற்றொரு திராவிட கட்சியான அதிமுகவும் கூட தனித்தே ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்ற சிந்தனையில்தான் இருந்து கொண்டிருக்கிறார். பாஜக, பாமக ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சிதான் 2026ல் அமைய வேண்டும் என்பதுதான் தமிழருவி மணியன் ஒற்றை குறிக்கோளாக இருக்கும்.


தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சி நீடிக்க கூடாது என்று தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பணையம் வைக்க துணிந்த தமிழருவி மணியன், தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து பொறாமைபடும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு ஆதரவு தருவதை பார்த்து கொதித்து கிடக்கிறார்கள் திராவிட சித்தாந்தவாதிகள்.

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி நீடிக்க கூடாது என்று கூறும் மணியன், நாம் தமிழர் கட்சியையோ அல்லது 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி அரசியல் இயக்கம் கண்ட நடிகர் விஜயையோ முழுமையாக ஆதரிக்கட்டும்.

தமிழ்நாட்டின் நலனை முதன்மையாக கொண்டுள்ள மாநில கட்சிகளை ஆதரிப்பதற்கு பதிலாக, இந்துஸ்தான் என்று இந்தியாவின் முகவரியை மாற்ற துடிக்கும் பாசிச கட்சியான பாஜகவை ஆதரிப்பதுதான் வேதனையை அதிகப்படுத்துகிறது என்கிறார்கள் தமிழ் தேசியவாதிகள்.


2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் முன்நிறுத்தப்பட்டால், அவரை வீழ்த்துவதற்காக எடப்பாடியார், அண்ணாமலை, சீமான், நடிகர் விஜய் என செல்வாக்கு மிகுந்தவர்களுக்கு பக்கபலமாக தமிழருவி மணியனின் அரசியல் செயல்பாடுகளும் அமையும் என்பதை வெளிப்படுத்துவதாகதான் தமிழருவி மணியனின் தர்பார் வீடியோக்கள் வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் காந்தியவாதிகள்.