தாரை.இளமதி., சிறப்புச் செய்தியாளர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையால் கொந்தளித்து கிடக்கும் தலித் சமுதாய மக்களை அமைதிப்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவியில் இருந்து சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸை அதிரடியாக தூக்கியடித்துவிட்டு, அரசியல் மற்றும் அதிகார அழுத்தத்திற்கு அடிபணியாதவரான அருண் ஐபிஎஸை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவு, சென்னை மாநகர காவல்துறை அலுவலர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை மாநகரில் சமூக விரோதிகள், கொலை பாதகத்திற்கு அஞ்சாத ரவுடிகளை கூண்டோடு அழிப்பதற்கு துணிச்சல் மிகுந்த ஐபிஎஸ் அதிகாரியான அருண் ஐபிஎஸ் சரியான தேர்வுதான் என்று உற்சாகமாக கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைவராக பணியாற்றி வந்த அருண் ஐபிஎஸ், மிகுந்த நேர்மையானவர் என்பதுடன், அதிகாரம் படைத்தவர்களுக்கு தலை வணங்காதவர் என்றும் அரசியல்வாதிகளுடனான நட்புக்கு ஒருபோதும் ஏங்காதவர் என்றும் உரக்க கூறுகிறார்கள் காவல்துறையில் உள்ள உயர் ஐபிஎஸ் அதிகாரிகள்.
ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உளவுத்துறையின் அறிவுரையை கவனத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதில் கோட்டை விட்டுவிட்டவர் சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் என்று முணுமுணுக்கிறார்கள் சென்னை மாநகர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள். ஆம்ஸ்ட்ராங்கிற்கு போலீஸ் தரப்பில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கு விருப்பம் இல்லாமல் இருந்திருந்தாலும் கூட, ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு சட்டவிரோத கும்பல்கள் எந்தநேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரித்து, ஆம்ஸ்ட்ராங் விழிப்புடன் இருப்பதை ரத்தோர் ஐபிஎஸ் உறுதி செய்திருக்கலாம் என்கிறார்கள் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த காவல்துறை உயரதிகாரிகள்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவியை ஏற்பதற்கு முன்பு ரத்தோர் ஐபிஎஸிடம் காணப்பட்ட நற்பண்புகள் அனைத்தும், சிட்டி போலீஸ் கமிஷனர் இருக்கையில் அமர்ந்தவுடன் பறந்துபோய்விட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் அவருக்கு மிகமிக நெருக்கமான மூத்த ஊடகவியலாளர்கள். சென்னை மாநகர காவல்துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியான நேரங்களில், அவற்றில் உள்ள உண்மை தன்மையை விசாரித்து அறிந்து கொள்ள ரத்தோர் ஐபிஎஸ் ஆர்வமே காட்டவில்லை என்று வருத்தப்படுகிறார்கள் மாநகர காவல்துறையில் அனுபவமிகுந்த காவல்துறை அலுவலர்கள்.
புதிதாக சிட்டி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ள அருண் ஐபிஎஸைப் பற்றி நல்லவிதமாகவே கருத்துகளை தெரிவிப்பதுதான் ஆச்சரியத்திற்குரிய செய்தியாகும்.
ரத்தோர் ஐபிஎஸை விட சிட்டி கமிஷனர் பதவிக்கு சிறந்த தேர்வாகவே இருப்பார் அருண் ஐபிஎஸ் என்று கூறும் மாநகர காவல்துறை அதிகாரிகள், சென்னையில் இணை ஆணையராக பணியாற்றிய அனுபவமும், போக்குவரத்து துறையில் கூடுதல் ஆணையராக பணியாற்றிய அனுபவமும் அருண் ஐபிஎஸுக்கு இருப்பதால், சட்டம் ஒழுங்கை முழுமையாக அமல்படுத்தி ரவுடிகள், சமூக விரோதிகளின் கொட்டத்தை அடுக்கி விடுவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு மிகுதியாகவே இருக்கிறது
சென்னை மாநகர காவல்துறை அலுவலர்கள்.லஞ்சத்தில் மஞ்சள் குளிக்கிறார்கள் போக்குவரத்து காவல்துறை அலுவலர்கள் என்ற குற்றச்சாட்டு எல்லா காலங்களிலும் உரக்க கூறப்பட்டாலும், அருண் ஐபிஎஸ், போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக பணியாற்றிய காலத்தில், பணமாக வசூலிப்பதற்கு பதிலாக டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் வசூலிக்கும் நடைமுறையை கண்டிப்புடன் அமல்படுத்தியவரும் அவரேதான் என்கிறார்கள்.
சென்னை மாநகர காவல்துறையில் லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்ற நிலையை எப்பேர்பட்ட அதிகாரியாலும் மாற்றவே முடியாது என்று கூறும் மூத்த ஊடகவியலாளர்கள், சட்டத்திற்கு பயந்து பணியாற்றாத காவல்துறை அதிகாரிகள் பற்றிய புகார்கள் அருண் ஐபிஎஸ் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டால், ஊழலில் திளைத்த காவல்துறை அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனையை வழங்குவதற்கு கொஞ்சம் கூட தயக்கமே காட்டமாட்டார் அருண் ஐபிஎஸ் என்கிறார்கள்.
சமூக விரோதிகளின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதற்கு துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்பவர் அருண் ஐபிஎஸ் என்பது சென்னை காவல்துறையில் பணியாற்றி வரும் அனுபவம் மிகுந்த அலுவலர்களுக்கு நன்றாகவே தெரியும் என்று உற்சாகமாக கூறும் ஓய்வுப் பெற்ற உதவி ஆணையர் ஒருவர், சென்னை மாநகர காவல்துறையில் அண்ணா நகர் மற்றும் பரங்கிமலையில் துணை ஆணையராக அருண் ஐபிஎஸ் பணியாற்றிய போது நிகழ்ந்த ஜனரஞ்சகமான இரண்டு நிகழ்வுகளை நினைவுக்கூர்ந்தார்கள்.
அண்ணா நகர் சரகத்தில் துணை ஆணையராக அருண் ஐபிஎஸ் பணியாற்றிய போது, பணக்காரர்களின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் கொள்ளையடிக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்றன. அந்தநேரத்தில் காவல்துறைக்கு பெரிய சவாலாக குற்ற நிகழ்வுகள் இருந்துவந்த போது, புலன் விசாரணையில் ஆந்திராவைச் சேர்ந்த சமூக விரோதிகள் அண்ணாநகருக்கு வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.
கொள்ளையர்களை கூண்டோடு பிடிக்க வேண்டும் என்ற வெறியோடு அருண் ஐபிஎஸ், ஆந்திர மாநிலத்திற்குச் சென்று கொள்ளையர்களின் கிராமத்திலேயே முகாமிட்டு, திருடுபோன தங்க நகைகள் உள்ளிட்ட சொத்துகளை முழுமையாக மீட்டதுடன், தமிழகத்தில் கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபட்டால் உயிருக்கு உத்தரவாதமே இருக்காது என்று எச்சரிக்கை விடுத்துவிட்டு சென்னை திரும்பினார். அதன் பிறகு அண்ணாநகரில் வீடடின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் ஒன்று கூட நடக்கவில்லை என்பதுதான் வியப்பிற்குரிய செய்தியாகும்.
அதுபோலவே, பரங்கிமலை சரக காவல்துறை துணை ஆணையராக அருண் ஐபிஎஸ் பணியாற்றிய காலத்தில் பீரோ புல்லிங் எனும் குற்றச்செயல்கள் அடிக்கடி நடக்க ஆரம்பித்து. இரவுநேரத்தில், திறந்திருக்கும் ஜன்னல் வழியாக இரும்பு கம்யை நீட்டி பீரோவை இழுத்து திறந்து கொள்ளையடித்து வந்த மர்ம கும்பலின் அட்டகாசம் காவல்துறைக்கு தீராத தலைவலியை கொடுத்துக் கொண்டிருந்தது. அப்படிபட்ட நேரத்தில் இரவுநேர ரோந்தை அதிகப்படுத்தி, அருண் ஐபிஎஸும் களத்தில் குதித்து, அதிரடியாக வாகன சோதனையை மேற்கொண்டு பீரோ புல்லிங்கில் கை தேர்ந்த சமூக விரோதிகளை கூண்டோடு கைது செய்து சிறையில் அடைத்தார்.
பரங்கிமலை துணை ஆணையராக அருண் ஐபிஎஸ் பணியில் நீடித்தவரை, பீரோ புல்லிங் எனும் குற்றச் செயல்களே தலைதூக்கவில்லை. இப்படி, அருண் ஐபிஎஸ் எங்கெல்லாம் பணியாற்றினாரோ, அங்கு எல்லாம் சமூக விரோதிகளின் வாலை ஒட்ட நறுக்கியிருக்கிறார் என்பதால், சென்னை மாநகரில் இனிவரும் நாட்களில் சமூக விரோதிகள், கொலை, கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபடும் ரவுடிகளுக்கு என்கவுண்டர் மூலம் முற்றுப்புள்ளி வைத்துவிடுவார் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
2023 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைவராக பதவியேற்ற அருண் ஐபிஎஸ், கடந்த ஓராண்டில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளின் கொட்டத்தை முழுமையாக அடக்குவதற்கு, ஐஜி, டிஐஜி, போலீஸ் கமிஷனர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு உரிய அறிவுரைகளை வழங்கியதன் அடிப்படையில், தமிழ்நாடு அமைதி மாநிலமாக திகழ்ந்தது. இருப்பினும், திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீபக் ராஜா ஆகியோரின் படுகொலைகள், தமிழ்நாடு காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது.
தமிழ்நாடு காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் இருந்து கடுமையான உத்தரவுகள் மாவட்டங்களில் தலைமைப் பொறுப்புகளில் உள்ள உயர் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பறந்தாலும் கூட, பல மாவட்டங்களில் ஆளும்கட்சி பிரமுகர்களுடன் நெருக்கம் காட்டி வரும் ஐபிஎஸ் உயர் அதிகாரிகள், தலைமையிட உத்தரவுகளை அமல்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதால், தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை முழுமையாக நிலைநாட்டுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
அருண் ஐபிஎஸ் பணியாற்றிய இடத்தில் நியமனம் செய்யப்பட்டிருப்பவர் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் தலைவர் டேவிட்சன் ஐபிஎஸ், ஏற்கெனவே உளவுத்துறையில் பணியாற்றியவர் என்பதால், அருண் ஐபிஎஸை போலவே, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பணியை சிறப்பாகவே கையாள்வார் என்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறையின் உயர் பதவிகளில் பணியாற்றிய அருண் ஐபிஎஸ் மற்றும் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் ஆகிய இருவரையுமே கேவலப்படுத்தும் வகையில் சரக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு செய்து வந்தார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கடந்து பிரபல அரசியல்வாதிகள், திமுக அமைச்சர்கள் என சகட்டுமேனிக்கு வசைபாடி வந்த சரக்கு சங்கருக்கு யார் மணி கட்டுவார்கள் என்று ஏக்கத்தோடு நாள்களை கடத்திய நேரத்தில், துணிச்சல் மற்றும் அதிரடிக்கு பெயர் பெற்ற அருண் ஐபிஎஸ், சரக்கு சங்கரின் அடாவடி செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரக்கு சங்கருக்கு விடுதலை என்பது கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், அருண் ஐபிஎஸைப் போலவே டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸும் சரக்கு சங்கருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்வதில் மேலும் மேலும் தீவிரம் காட்டுவார் என்று உறுதிபட கூறுகிறார்கள் டிஜிபி அலுவலக காவல்துறை உயரதிகாரிகள்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு முறையே தலைமை ஏற்றிருக்கும் அருண் ஐபிஎஸ் மற்றும் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் ஆகிய இருவரும் இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்பட்டு, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்பதுடன் சமூக விரோதிகளுக்கு எதிராக வாண வேடிக்கைகளை இனிமேல் அடிக்கடி பார்க்கலாம் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாக நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள் ஓய்வுப்பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள்.