Mon. Apr 29th, 2024

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதட்டி, மிரட்டி, பாஜக கூட்டணியில் சேர வைத்து விடுவார்கள் என்று பாஜக ஆதரவு யூ டியூப்பர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வீறாப்பு காட்டி வந்தார்கள். பாஜக கூட்டணியில் அதிமுக சேர வில்லை என்றால், எடப்பாடியார் பழனிசாமியின் எதிர்கால அரசியலே அஸ்தமனம் ஆகிவிடும், இபிஎஸ், தங்கமணி, வேலுமணி உள்பட அதிமுக முன்னாள் அமைச்சர்களை எல்லாம் குறி வைத்து மத்திய பாஜக அரசின் கைப்பாவைகளாக செயல்பட்டு வரும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அமைப்புகள் அதிரடி சோதனை மேற்கொண்டு தலையெடுக்காமல் பழிவாங்கிவிடும் என்றெல்லாம் கூட கூக்குரல் எழுப்பினார்கள்.

சின்ன பிள்ளைகள் கூட நம்பமாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் கூட, இரட்டை இலை சின்னத்தையே மத்திய பாஜக அரசு முடக்கி விடும் என்றெல்லாம் கூட பயமுறுத்தினார்கள் பாஜக ஆதரவு யூ டியூப்பர்கள். யூ டியூப்பர்களின் மிரட்டல்களை சிறிதும் பொருட்படுத்தாத எடப்பாடி பழனிசாமி, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கடந்த 5 மாதங்களாக உறுதியாக நிற்பதை பார்த்து, தமிழக அரசியல் களமே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது.


மார்ச் 8 ம் தேதி மகளிர் தின கொண்டாட்டத்தின் நிறைவில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடியார், பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்திக்க வேண்டாம் என்பது கோடான கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது என்று தீர்க்கமாக கூறினார். மார்ச் 8 ஆம் தேதிக்கு முன்பாக, பாரதிய ஜனதா கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும் என்று தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை கூட எடப்பாடியார் புறக்கணித்துவிட்டார் என்ற தகவல்களும் பொதுவெளியில் தீயாக பரவியது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இரண்டு முறை தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் மட்டுமல்ல, அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலும் கூட தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமரை வரவேற்கவோ, வழியனுப்பி வைப்பதற்கோ எடப்பாடியார் துளியளவும் ஆர்வமே காட்டவில்லை என்பதுதான் பரபரப்பான தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியது. அதேநேரத்தில், பாஜக எதிர்ப்பில் ஒட்டுமொத்த அதிமுகவும் உறுதியாக நிற்கும் நேரத்தி, எடப்பாடியாருக்கு நெருக்கமான அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு கூட நெருடலாகதான் இருந்தது.

பிரதமர் மோடியை, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, மத்திய நிதியமைச்சர் சீதாராமன் உள்பட அகில இந்திய பாஜக தலைவர்கள் ஒருவரை கூட தமிழகம் வரும் போது, தான் நேரில் சந்திக்க மாட்டேன் என உறுதிகாட்டி வரும் எடப்பாடியாரை, அதிமுகவின் மானத்தை காக்க வந்த தலைவராகவே ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

பாரதிய ஜனதாவுக்கு எதிராக தில்லான தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் எடப்பாடியாரிடம் காணப்படும் தலைவருக்கு உரிய மாண்பு, மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திடம் இல்லை என்பதை அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில்தான் ஓபிஎஸ்ஸின் அண்மைகால செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

பிரதமர் மோடியை வரவேற்கவும், வழியனுப்பவும் தனக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்தில் உள்ள உயர் ஐஏஎஸ் அதிகாரிகளிடமும், பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடமும் தன்மானத்தை விட்டு கெஞ்சி பார்த்தார் ஓ.பி.எஸ். இருப்பினும், தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் மன்றாடியதை கூட மோடி கண்டுகொள்ளவே இல்லை. பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு என்று வலிய சென்று ஓபிஎஸ் கெஞ்சிய போதும் கூட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கண்டு கொள்ளவில்லை. பாஜக மேலிட தலைவர்களும் ஒருபொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை.

ஓபிஎஸ்ஸுக்கு மரியாதை தராமல் அவமானப்படுத்திய தமிழக பாரதிய ஜனதா கட்சி, ஒரே ஒரு எம்பி தொகுதியில் கூட மரியாதைக்குரிய செல்வாக்கு இல்லாத அரசியல்கட்சித் தலைவர்களான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் எஸ்ஆர்எம் பச்சமுத்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றார் அண்ணாமலை.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவால் அரசியல் அடையாளம் பெற்ற ஓ.பன்னீர்செல்வம், செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் இரண்டு முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஒருமுறை முதல் அமைச்சர் என மூன்று முறை அதிமுக ஆட்சிக்கு தலைமை ஏற்ற ஓபிஎஸ், இன்றைய தேதியில் அதிமுக கரை வேட்டியே கட்ட முடியாத அளவுக்கு, ஓபிஎஸ்ஸின் அதிமுக அரசியல் பயணத்திற்கு முடிவுரை எழுதிவிட்டார், எடப்பாடியார்.

அதிமுக கொடி கிடையாது. அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை பெயரையே உச்சரிக்க முடியாது. அதிமுக என்ற பெயரையே பயன்படுத்த முடியாத அளவுக்கு நீதித்துறையின் மூலம் ஓ.பி.எஸ்.மீது பல சங்கிலியை மாட்டிவிட்டு விட்டார் எடப்பாடியார். செல்வி ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது தோழியான வி.கே.சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவரை எதிர்த்துதான் தர்மயுத்தத்தையே நடத்தினார். செல்வி ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று பொங்கிய ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சாட்சி சொன்னபோது, எதுவுமே தனக்கு நினைவில்லை என்று இரட்டை நாக்கை வெளிப்படுத்தி அசிங்கப்பட்டார்.

தேனி மாவட்டத்தில் முகவரியே இல்லாமல் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை, வி.கே.சசிகலாவிடமும் செல்வி ஜெயலலிதாவிடமும் அறிமுகப்படுத்திய டி.டி.வி.தினகரனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததுடன் மட்டுமல்ல, செஞ்சோற்று கடனை மறந்தவராகவும் மாறி, ஒட்டுமொத்த மன்னார்குடி குடும்பத்திற்கும் துரோகியாக மாறியவர் ஓ.பன்னீர்செல்வம் என்கிறார்கள் அதிமுக மூத்த தலைவர்கள்.

தமிழக அரசியலில் அனாதை போல நடமாடிக் கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக, திராவிட சித்தாங்களுக்கு எதிராக மதவாத அரசியலை மூலதனமாக்கிக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்வதற்கும், தனது மூத்த மகன் ரவீந்திரநாத்தை எப்படியாவது எம்பி ஆக்கிவிட வேண்டும் என்ற சுயநலத்திற்காகவும் மோடி, அமித்ஷா காலில் மட்டுமல்ல, தமிழக அரசியலில் விளையாட்டு பிள்ளையான அண்ணாமலையின் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருப்பதை பார்த்து, ஓபிஎஸ்ஸுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு முன்னாள் அதிமுக தலைவர்களும் கூட ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தென்மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்குப் படைத்த சமுதாயத்தை எடப்பாடியார் அவமானப்படுத்திவிட்டார், புறக்கணித்துவிட்டார் என்றெல்லாம் 2021 சட்டமன்றத் தேர்தலின் போது பரப்புரை மேற்கொண்டு, மூன்றாவது முறையாக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்று வரலாற்று சாதனையை அதிமுக நிகழ்த்துவதற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை கெடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்பதுதான் எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவினரின் மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருந்தது.

தென்மாவட்டங்களில் மிகப்பெரிய செல்வாக்கு படைத்த சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள துடிக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கு பாரதிய ஜனதா கட்சி கொடுத்த மரியாதையையும், ஓபிஎஸ்ஸின் சமுதாயத்தைப் போல தென்மாவட்டங்களில் மிகவும் செல்வாக்குப் படைத்த சமுதாயத்திற்கு பாஜக தலைமை கொடுத்த மரியாதையையும் ஒப்பிட்டு பேசி, ஓபிஎஸ்ஸின் சுயமரியாதையை கிழிகிழியென கிழித்து தொங்கப் போடுகிறார்கள் ஓபிஎஸ்ஸின் சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக மூத்த தலைவர்கள்.

தென்மாவட்டங்களில் செல்வாக்கு மிகுந்த இரண்டு சமுதாயங்களில், நடிகர் சரத்குமாரின் சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு மிகப்பெரிய மரியாதையை தந்திருக்கிறது பாஜக மேலிடம். பாஜக கூட்டணியில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்த நடிகர் சரத்குமாரை, பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன், பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் தேடிச் சென்று நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை நிகழ்வை சுட்டிக்காட்டும் தென்மாவட்ட அதிமுக மூத்த தலைவர்கள், ஓ.பி.எஸ்.,ஸுக்கு அதேபோன்ற முக்கியத்துவத்தை தராமல், பாஜக மத்திய அமைச்சர்கள் தங்கியிருந்த தனியார் ஹோட்டலுக்கு ஓபிஎஸ்ஸை வரவழைத்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நிகழ்வையும் வேதனையோடு சுட்டிக்காட்டுவார்கள்.

நடிகர் சரத்குமாரை, அவரது இருப்பிடத்திற்கு தேடிச் சென்ற பாஜக மூத்த தலைவர்கள், மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸை, தனியார் ஹோட்டலுக்கு வரவழைத்து மத்திய அமைச்சா்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், முருகன் மற்றும் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ஆகியோர் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் சேர்வதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

நடிகர் சரத்குமாருக்கு பாஜக தலைவர்கள் வழங்கிய முக்கியத்துவத்தால், நடிகர் சரத்குமாரின் சமுதாய மக்கள் பெருமிதம் அடைந்திருக்கும் நேரத்தில், இரவுநேர திருடனைப் போல, ஓபிஎஸ்ஸை தனியர் ஹோட்டலுக்கு அழைத்து பாஜக மத்திய அமைச்சர்களும், அண்ணாமலையும் கூட்டணியை உறுதி செய்திருக்கும் நிகழ்வை சுட்டிக்காட்டும் இபிஎஸ் ஆதரவு அதிமுக தலைவர்கள், ஓபிஎஸ்ஸுக்கு பாஜக மேலிடம் கொடுத்திருக்கும் மரியாதையால், ஓபிஎஸ்ஸின் சமுதாயத்திற்கு மிகப்பெரிய அளவில் தலைக்குனிவு ஏற்பட்டுவிட்டது என்று அனல் கக்குகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்தின் சுயநலத்தையும், கயமைத்தனத்தையும், காட்டிக் கொடுக்கும் எட்டப்பர் குணத்தையும் பல ஆண்டுகளாகவே நன்றாக அறிந்து வைத்திருக்கும் எடப்பாடியார், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் வைத்திருந்தால், பல லட்சம் உண்மையான தொண்டர்களின் ரத்தத்தை சிந்தி அதிமுகவை துவக்கிய, அதன் நிறுவனர் மறைந்த முதல்வர் எம்ஜிஆருக்கும், அவரின் உண்மையான அரசியல் வாரிசாக, இந்திய திருநாடே திரும்பி பார்த்த அதிசய பெண்மணியாகவும், அச்சுறுத்தலுக்கு பயப்படாத ஆளுமை மிகுந்த தலைவர் என்ற புகழ்மாலைக்கு சொந்தக்காரராகவும் வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கும் செய்யும் பச்சை துரோகம் என்று வெளிப்படையாக கூறி, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இருந்தே தூக்கியெறிந்தார் எடப்பாடியார்.

அதிமுகவை பயமுறுத்தி பாஜக கூட்டணியில் சேர்த்து விடலாம் என்று நப்பாசையில் இருந்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் எதிராக துணிச்சலாக, தைரியமாக அரசியல் நிலைபாட்டை எடுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார், எந்தவொரு சூழலிலும் கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களின் தன்மானத்தை அடகு வைக்க மாட்டார் என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டணியை பாரதிய ஜனதா உறுதி செய்த அடுத்த நிமிடமே எடப்பாடியார் நிம்மதி பெருமூச்சு விட்டார். அதிமுகவை பிடித்த சனிக்கிரகம் விலகிவிட்டது என்று எடப்பாடியார் மட்டுமல்ல, அவரது தலைமை மீது நம்பிக்கை வைத்து அதிமுகவில் பயணித்து வரும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் என அனைத்து தரப்பினருமே உற்சாகத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொல் திருமாவளவனின் சமரசத்திற்கு ஆட்படாத தேர்தல் அரசியல் நிலைப்பாட்டை போல , பாட்டாளி மக்கள் கட்சி எந்த கூட்டணியில் இருக்கிறதோ அந்த கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது என்பதை போல, ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் இருக்கும் கூட்டணியில் மட்டுமல்ல, அவர்கள் இருக்கும் பக்கமே அதிமுக தலை வைத்து படுக்காது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்றுக் கொண்டிருக்கும் எடப்பாடியாருக்கு, பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்ஸுக்கு இழுத்துக் கொண்டது, மிகப்பெரிய அளவில் நிம்மதியையும், அதே சமயம், பாஜக கூட்டணிக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலில் முழு வீச்சுடன் பணியாற்றுவதற்கான உத்வேகத்தையும் தந்துள்ளது என்கிறார்கள் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் காலை வாரினால் அரசியல் எதிர்காலமே சூன்யமாகிவிடும் என்ற எண்ணத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், பாரதிய ஜனதா கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். எடப்பாடியாரின் எதிர்பார்ப்புக்கு ஏற்பதான், ஓபிஎஸ்ஸும், டிடிவி தினகரனும் பாரதிய ஜனதாவில் தஞ்சம் புகுந்துவிட்டார்கள் என்று கூறும் இபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்கள், அதிமுகவை சூழ்ந்திருந்த ஆபத்து முழுமையாக நீங்கிவிட்டதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

தேமுதிக, பாமக ஆகிய இரண்டு கட்சிகள் அதிமுக கூட்டணியில் இல்லை என்றாலும் கூட, திமுக அரசு மீதான எதிர்ப்பு மற்றும் பிரதமர் மோடி தலைமையிலான அதிருப்தி அலை, ஒருசேர அதிமுகவுக்கு தங்குதடையின்றி வந்து சேரும் என்று உறுதியான நம்பிக்கையோடு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க துணிந்துவிட்டார் எடப்பாடியார் என்கிறார்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.

ஆக மொத்தத்தில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி, அதனை நேரடியாக எதிர்த்து அதிமுக தலைமையிலான கூட்டணி, பிரதமர் மோடியின் ஆசியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருந்து வரும் சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி உறுதியாகிவிட்டது. பிரதமர் மோடியையும், மதவாத பாஜகவையும் துணிச்சலுடன் எதிர்த்துக் கொண்டிருக்கும் ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி, தமிழகத்தில் உள்ள 39 எம்பி தொகுதிகளையும் லட்டு போல கைப்பற்றுவது எளிதான ஒன்றாக அமைந்துவிட்டது என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளிவிட்டு, தமிழக பாஜக தலைமையிலான கூட்டணி இரண்டாம் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற அண்ணாமலையின் கனவு நிறைவேறுமா.. இல்லை, என்றைக்குமே தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்குதான் வாக்காளர்கள் ஆதரவாக நிற்பார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை அகிலத்திற்கும் உணர்த்தும் வகையில் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக, வீறுகொண்டு நிற்குமா என்பதை 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்தான் உறுதிப்படுத்தும். காத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *