Sun. Apr 28th, 2024

தாரை.வே.இளமதி., சிறப்புச் செய்தியாளர்…

சமூக விரோதிகளுக்கு எந்நாளும் சிம்ம சொப்பனமாக திகழும் அமுதா ஐஏஎஸ், தமது நிர்வாகத்தின் கீழ் உள்ள உள்துறையில் பணியாற்றும் அலுவலர்களை சிசிடிவி கேமிரா வைத்து கண்காணிக்கும் அளவுக்கு அதிகார போதை தலைக்கு ஏறியவராக மாறிப் போனது ஏன் என்பதை பற்றி விரிவாக அலசுகிறது இன்றைய நல்லரசுவின் சிறப்பு செய்தி தொகுப்பு…

திருமதி அமுதா ஐஏஎஸ் என்ற பெயருக்கு விரிவான அறிமுகமே தேவையில்லாத அளவுக்கு, தமிழ்நாட்டில் பரவலாக அறிமுகமாயிருப்பவர் திருமதி அமுதா ஐஏஎஸ். அரசுப் பணியில் நேர்மை, சமரசத்திற்கு ஆட்படாதவர், அரசாங்கத்தின் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு, தேவைப்பட்டால் அதிரடி காட்டவும் தயங்காதவர் என்ற நற்பெயருக்கு சொந்தக்காரரான அமுதா, 1994 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக, தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் பங்கெடுக்கிறார்.
இளம் வயதிலேயே அநீதிக்கு எதிராக சீற்றத்தை வெளிப்படுத்தி , சட்டவிரோத செயல்களுக்கு எதிராக துணிச்சலாக நடவடிக்கைகள் எடுத்ததன் மூலம் அதிரடி அமுதா ஐஏஎஸ் என்று பட்டப்பெயரை சுமந்தவர்.

30 ஆண்டுகளுக்கு முன்பு எப்படிப்பட்ட போர்க்குணம் இருந்ததோ.. அதே போர்க்குணத்துடன் தான் இன்றைக்கும் பணிபுரிந்து வருகிறார் அமுதா ஐஏஎஸ் என்பதுதான், அவரது சம கால ஐஏஎஸ் அதிகாரிகளிடம் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2021 ல் திராவிட மாடல் ஆட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்ற போது, மத்திய பாஜக அரசின் தலைமையிடமான பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் அமுதா ஐஏஎஸ். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் இறுதிச்சடங்கு நிகழ்வுக்கு அமுதா ஐஏஎஸ் தாமாக முன்வந்து பொறுப்பு ஏற்று மிகுந்த கண்ணியத்துடன் நிறைவேற்றி தந்ததை நினைவில் வைத்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமுதா ஐஏஎஸ்ஸின் சேவை திராவிட மாடல் ஆட்சிக்கு மிகப்பெரிய புகழைத் தேடி தர வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியதால், மத்திய அரசு பணியில் இருந்து மீண்டும் தமிழ்நாடு அரசு நிர்வாகத்திற்கு திரும்பியவர் அமுதா ஐஏஎஸ்.

அமுதா ஐஏஎஸ்ஸின் நிர்வாகத் திறமைக்கு உரிய மரியாதை வழங்கும் வகையில், ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் பதவியில் அமர வைக்கப்பட்டார். நேர்மை குணமும், அரசு நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது என்ற மனவுறுதியும் கொண்டிருக்கும் அமுதா ஐஏஎஸ்ஸுக்கும், ஊரக வளர்ச்சித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் எண்ணவோட்டத்திற்கும் இடையே முரண்பாடுகள் தலை தூக்க தொடங்கின. ஒருகட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் தொடர்ந்தால், தலைமைச் செயலகத்திற்கே வர மாட்டேன் என்று திண்டுக்கல்லிலேயே முகாமிடும் அளவுக்கு விரக்தி மனநிலைக்கு சென்றவர் அமைச்சர் ஐ.பெரியசாமி.


மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் மனத்துயரை போக்கும் வகையில், ஊரக வளர்ச்சித்துறையில் இருந்து அமுதா ஐஏஎஸ்ஸை பணிமாறுதல் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் வசம் உள்ள துறைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறைக்கு செயலாளராக பணியாற்றும் வாய்ப்பை அமுதா ஐஏஎஸ்ஸுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு நிர்வாகத்தில் 50க்கும் மேற்பட்ட துறைகள் இருந்து வரும் நிலையில், தனித்துவமானதாக உள்துறையை குறிப்பிடுவார்கள் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்.
உள்துறையில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை நியமனம் செய்யும் புரட்சியை ஏற்படுத்தியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்.மு.கருணாநிதிதான். 1999 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளராக சாந்தா ஷீலா நாயர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் உள்துறைக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றவர் சாந்தா ஷீலா நாயர் ஐஏஎஸ்.

உள்துறைக்கு இரண்டாவது பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமைக்குரியவர் ஷீலா ராணி சுங்கத் ஐஏஎஸ். 2001 முதல் 2006 வரையிலான அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் சந்தன கடத்தல் வீரப்பன் சிறப்பு அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், உள்துறை செயலாளராக பணியாற்றியவர் ஷீலா ராணி சுங்கத் ஐஏஎஸ்.

உள்துறை செயலாளர் பணியிடத்திற்கு நியமிக்கப்பட்ட மூன்றாவது பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற புகழுக்கு உரியவர் எஸ்.மாலதி ஐஏஎஸ். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் 2007 முதல் 2010 வரை உள்துறை செயலாளராக பதவி வகித்தவர் எஸ்.மாலதி ஐஏஎஸ்.

திமுக தலைவரும் தமது தந்தையுமான கலைஞர் மு.கருணாநிதி வழியில் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ்ஸை நியமித்ததை, பெண்ணியவாதிகள் ஆரவாரமாக வரவேற்கவே செய்தார்கள்.

உள்துறைக்கு நியமிக்கப்பட்ட நான்காவது பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற புகழுக்கு உரியவராக மாறிய அமுதா ஐஏஎஸ், அவருக்கு முன்பாக உள்துறை செயலாளராக பணியாற்றிய மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் செய்ய துணியாத காரியங்களை எல்லாம் ஆரவாரமாக செய்து, ஒட்டுமொத்த உள்துறை அதிகாரிகளையும் கலங்கடித்துக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள்தான், தலைமைச் செயலகத்தில் இன்றைய தேதியில் புயலைக் கிளப்பி கொண்டிருக்கிறது.

உள்துறையின் முதன்மையான பணி என்பது, தமிழ்நாட்டில், அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றிய தகவல்களை ரகசியமாக திரட்டி முதல் அமைச்சரின் பார்வைக்கு விரிவான அறிக்கையாக வழங்குவதுடன், சாதிச் சண்டை, மத மோதல்கள், சட்ட விரோத செயல்பாடுகள் மற்றும் நாட்டிற்கும் மாநிலத்தின் அமைதிக்கும் குந்தகம் விளைவிப்பவர்கள் என சந்தேகம் எழும் சூழலில், இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என முன்கூட்டியே முதல்வருக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றவர் உள்துறை செயலாளர்தான். ஒவ்வொரு நாளும்.. ஏன் ஒவ்வொரு மணிநேரமும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டிய பொறுப்பும் உள்துறை செயலாளருக்கு உண்டு.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பணியாற்றியதால் கிடைத்த அனுதாபமும், இயல்பாகவே மனிதநேயம் கொண்டவர் என்பதாலும் பலதரப்பட்ட மனிதர்களுடனான நட்பும் அமுதா ஐஏஎஸ்ஸுக்கு நிறைய இருப்பதால், மூலை முடுக்கெல்லாம் இருந்து தகவல்களை எளிதாக திரட்டும் ஆற்றல் கொண்டவராக தான் இருக்கிறார் அமுதா ஐஏஎஸ் என்று பெருமிதமாகவே கூறுகிறார்கள் உள்துறை அலுவலர்கள். திராவிட மாடல் ஆட்சியில் அமுதா ஐஏஎஸ்ஸுக்கு முன்பு பணியாற்றிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் எஸ்.கே.பிரபாகர், பணீந்திர ரெட்டி ஆகியோரை விட, பொதுமக்கள் எளிதாக நெருங்கும் அளவுக்கு மனிதநேயம் மிகுந்தவராகதான் இருந்து வருகிறார் அமுதா ஐஏஎஸ் என்று நெகிழ்ச்சியோடு கூறும் தலைமைச் செயலக அலுவலர்கள், தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகளான ஐபிஎஸ் முதல் காவல்துறை ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரமும் உள்துறை செயலாளருக்கு இருக்கிறது என்பதால், இந்த துறைக்கு புதிதாக பொறுப்பு ஏற்கும் உள்துறை செயலாளருக்கு, அவரை அறியாமலேயே தலைக்கு ஏறிவிடும் அதிகார போதை, அமுதா ஐஏஎஸ்ஸையும் ஆட்டிப் படைக்க ஆரம்பித்துவிட்டதுதான் துயரமானது என்கிறார்கள்.

உள்துறையில் தான் வைத்துதான் சட்டம் என்பதை வெளிப்படையாகவே நிலைநாட்டும் வகையில், உள்துறையில் பணியாற்றும் கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர்கள், துணை செயலாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர், உள்துறை அலுவலக பணியாளர்கள் என அனைத்து நிலை அலுவலர்களும் பணிபுரியும் அலுவலக அறைகளிலும் கண்காணிப்பு கேமிராவை பொருத்தி, ஒட்டுமொத்த துறையையுமே வேவு பார்க்கும் அளவுக்கு அமுதா ஐஏஎஸ்ஸின் குணம் தாழ்ந்துவிட்டதுதான் கொடுமை என்கிறார்கள் மிகுந்த வேதனையோடு.

தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை அலுவலகத்திற்கு வரும் காவல்துறையைச் சேர்ந்த எந்தவொரு அதிகாரியும், அலுவலர்களும் உள்துறைச் செயலாளரைதான் நேரடியாக சந்திக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார் அமுதா ஐஏஎஸ் என்று சோக கீதம் பாடும் உள்துறை அலுவலக உயர் அதிகாரிகள், உள்துறைச் செயலாளரின் அதிகார வரம்பிற்கு வராத விஷயங்களில்கூட, கூடுதல் செயலாளரையோ, இணைச் செயலாளர்களையோ, அலுவலக கண்காணிப்பாளரையோ மனுதாரர் நேரிடையாக சந்தித்து விட்டால், அமுதா ஐஏஎஸ்ஸின் நெற்றிக்கண் நொடிப்பொழுதில் திறந்து தீப்பொறிகள் அலை அலையாய் பறக்க தொடங்கி விடுகிறது என்று பொங்குகிறார்கள்.

அரசு நிர்வாகத்தில் எந்த துறைக்கு தலைமை ஏற்றாலும் தன்னிடம் நிறைந்திருக்கும் தனித்த திறமையால், அந்த துறையையே தலைகீழாக புரட்டி போட்டு, துளியும் சோம்பல் இன்றி துறை அலுவலர்கள், பணியாளர்கள் பணியாற்ற உத்வேகத்தை வழங்கி, தான் சார்ந்திருக்கும் துறைக்கும், தமிழக அரசுக்கும் பெருமை சேர்ப்பவர் என்ற பாராட்டுகளை சுமந்திருக்கும் அமுதா ஐஏஎஸ், உள்துறையின் செயலாளராக பொறுப்பு ஏற்றவுடன், தனது இயல்பான குணநலன்களுக்கு மாறாக, வேவு பார்ப்பதும், கடந்த பல ஆண்டுகளாக உள்துறையிலேயே பணியாற்றியதன் மூலம் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளின் அனுபவம் மற்றும் அதிகாரத்தை கூட வெளிப்படுத்துவதற்கு உரிய வாய்ப்பு தர மறுப்பதும் அமுதா ஐஏஎஸ்ஸின் மனிதநேயத்திற்கு, அதிகார வரம்பிற்கு எதிரான ஒன்று என்று அதீத கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் உள்துறையில் பணியாற்றி வரும் அனுபவம் மிகுந்த அதிகாரிகள்.


தலைமைச் செயலகத்தில் உள்ள எண்ணற்ற துறைகளுக்கு இல்லாத சிறப்பு, உள்துறைக்கு தனித்துவமாக இருந்து வருகிறது. பொது,நிதி, கல்வி, மக்கள் நல்வாழ்வு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், தலைமைச் செயலகத்திற்கு என்று நேரடி தேர்வு மூலம் பணியில் சேர்ந்தவர்கள் பணியாற்றுவார்கள். ஆனால், உள்துறையில் மட்டும், செயலாளருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த அலுவலர்கள்தான் காலம் காலமாக பணியாற்றி வருகிறார்கள்.

தலைமைச் செயலக அலுவலர்கள், பணியாளர்களைவிட, காவல்துறை அலுவலர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே பெருமிதம் இருக்கும். அப்படிபட்ட தனித்துவமான மனநிலையை அவமானப்படுத்தும் வகையில்தான் அமுதா ஐஏஎஸ்ஸின் அன்றாட நடவடிக்கைகள் அமைந்திருக்கிறது என்று புலம்புகிறார்கள் உள்துறை அலுவலக பணியாளர்கள்.
உள்துறையின் செயலாளராக அமுதா ஐஏஎஸ் பொறுப்பு ஏற்ற நாள் முதலாகவே, காலம் காலமாக இருந்துவந்த நடைமுறைகளையே மாற்றிவிட்டார் என்று உள்துறை அலுவலர்கள் ஆவேசம் காட்டுவதைப் போல, கோரிக்கை மனுக்களோடு உள்துறை செயலாளர் அலுவலகத்திற்கு வரும் காவல்துறை அலுவலர்களும் கொந்தளிப்பதுதான் துயரமான ஒன்று.
தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், துறை செயலாளர்கள் என 50 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், நாள்தோறும் உணவு இடைவேளைக்கு முன்பாகவே பார்வையாளர்களை சந்திப்பதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

ஆனால், உள்துறை செயலாளரை சந்திக்க வேண்டும் என்றால் பிற்பகல் 3 மணிக்குதான் வர வேண்டும் என்று பார்வையாளர்கள் நேரத்தையே மாற்றிவிட்டார் அமுதா ஐஏஎஸ் என்று வேதனையை வெளிப்படுத்தும் காவல்துறை அதிகாரிகள், வெளியூரில் இருந்து கோரிக்கை மனுவோடு சென்னைக்கு வரும் போது, ​​காலையில் உள்துறை செயலாளரை சந்தித்தால், இரவுக்குள் அவரவர் சொந்த ஊருக்கு சிரமமின்றி திரும்பி விட முடியும். காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு விடுமுறை கிடைப்பதே அசாதாரணமான ஒன்றாக இருக்கும் இன்றைய தேதியில், உள்துறை செயலாளரைப் பிற்பகலில் சந்தித்துவிட்டு, அவரவர் சொந்த ஊருக்குத் திரும்பி அன்றைய தினமே பணிக்குச் செல்வது என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது என்று புலம்புகிறார்கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அலுவலர்கள்.


அரசுப் பணியை செம்மையாக நிறைவேற்றுபவர் அமுதா ஐஏஎஸ் என்ற புகழை சுமந்திருக்கும் மனிதநேயம் மிகுந்த பெண் அதிகாரிக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் ஆவேச குரல்களுக்கு செவிமடுத்து, அதிகாரம் பரவலாக இருந்தால்தான், திராவிட மாடல் அரசு முன்நிறுத்தும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற லட்சிய தாகம் வெற்றியடையும் என்பதை நொடிப்பொழுதில் களநிலைமையை உள்வாங்கிக் கொள்ளும் அசாத்திய திறமை படைத்த மூத்த ஐஏஸ் அதிகாரியான அமுதா அவர்களுக்கு நல்லரசு முன்வைக்கும் வேண்டுகோளாகும்.


இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தி தன் வாழ்நாள் முழுவதும் அதிகாரப் பகிர்வு குறித்தே ஓயாமல் முழங்கிக் கொண்டிருந்தார். அவரின் லட்சியத்தை முழுமையாக நிறைவேற்றி இருக்கும் மகத்தான தலைவராக, இந்திய வரலாற்றிலேயே அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு முதல் அமைச்சராக, திராவிட மாடல் ஆட்சியின் பிதாமகனான மு.க.ஸ்டாலின்தான் திகழ்கிறார். முதல் அமைச்சருக்கு உரிய தனித்துவமான அதிகாரங்களைக் கூட, முதல் அமைச்சரின் அலுவலகச் செயலாளர்களுக்கு பகிர்ந்து அளித்து, நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய ஒன்றாக இல்லாத அதிகாரம் மீது நெல்மணியளவுக்குக் கூட பற்று இல்லாதவராகத் தகவமைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கண்ணசைவுக்கு ஏற்ப, செயல்படும் ஆற்றல் கொண்ட அமுதா ஐ.ஏ.எஸ்., முதல்வரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்வாரா என்பதுதான் மகாத்மாவின் வழித்தோன்றல்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *