Thu. Nov 21st, 2024

தாரை.வே.இளமதி, சிறப்புச் செய்தியாளர்.

காலை அழைப்புகளில் என் மீது மிகுந்த பாசம் காட்டி வரும் செய்தித்துறை அலுவலருடன் (செ.அ) உரையாட நேர்ந்தது. நலம் விசாரிப்பு மற்றும் அரசியல் தொடர்பான கருத்து பரிமாற்றத்திற்குப் பிறகு கேள்வி பதில் முறையில் நடைபெற்ற செய்தித்துறை தொடர்பான உரையாடல்களை, அதேபாணியில் வாசகர்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன். சமரசத்திற்கு ஆட்படாத அதிமுக பாரம்பரியத்தில் இருந்து செய்தித்துறைக்கு வந்தவர் என்பதால், அவருடனான உரையாடலை பொதுதளத்தில் வைப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தாகவே கருதுகிறேன்.

கே: செய்தித்துறைக்கு புதிதாக வந்திருக்கிற இயக்குனர் எப்படியிருக்கிறார்?
செஅ : மிகுந்த பண்பாளராக இருக்கிறார் என்று இயக்குனரை சந்தித்தவர்கள் சொல்கிறார்கள்.
கே: செய்தித்துறை அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறாரா?
செஅ : கோரிக்கையை நிறைவேற்றி தருவது முதன்மையானது இல்லை. மரியாதையைதான் முதலில் எதிர்பார்க்கிறோம். இளம் ஐஏஎஸ் அதிகாரியாக (இரா.வைத்திநாதன் ஐஏஎஸ்) இருக்கிறார். தம்மை சந்திக்க வருபவர்களை அமர வைக்கிறார். பணிவு காட்டுகிறார். இதற்கு முன்பு இருந்த இயக்குனர்கள் தராத அளவுக்கு மரியாதை தருகிறார். சந்திக்க வருபவர்களின் கருத்துகளுக்கு பொறுமையாக செவி மடுக்கிறார். இதுபோன்ற நற்பண்புகள் வெளிப்படுவதால்தான், தற்போதைய இயக்குனரை, கட்சி கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டு செய்தித்துறை அலுவலர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


கே: இரா.வைத்திநாதன் ஐஏஎஸ்ஸுக்கு முன்பு பி.மோகன் ஐஏஎஸ் இருந்தார், அவர் மரியாதை தரவில்லையா? அவருக்கு முன்பு தற்போதைய இளம் ஐஏஎஸ் அதிகாரியை (வைத்திநாதன்) விட சில மாதங்கள் சீனியரான வி.பி.ஜெயசீலன் ஐஏஎஸ் மரியாதை தரவில்லையா? அவருக்கு முன்பு முந்தைய எடப்பாடியார், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இயக்குனராக இருந்த சீனியர் பி.சங்கர் ஐஏஎஸ் மரியாதை தரவில்லையா?
செஅ: விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன் ஐஏஎஸ், செய்தித்துறை இயக்குனராக வருகிறார் என்றவுடன் அவரைப் பற்றி அதற்கு முன்பு பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் செய்தித்துறை பணியாளர்களுக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்தது. மரியாதையாக நடத்துவார். செய்தித்துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை, குறிப்பாக உடல்நலம் சார்ந்து விண்ணப்பிக்கும் பணி மாறுதல் மீது கருணையாக நடந்து கொள்வார் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தமது பதவிக்கு கீழான செய்தித்துறை அதிகாரிகளை குறிப்பாக, இணை இயக்குனர், துணை இயக்குனர், உதவி இயக்குனர் என்ற நிலைகளில் பணியாற்றிய அதிகாரிகளை கூட அவமானப்படுத்தியிருக்கிறார், எடுத்தெறிந்து பேசியிருக்கிறார். இருக்கையில் அமர வைத்து பேசுவதற்கு கூட மனிதாபிமானம் இல்லை என்பதை பற்றியெல்லாம் செய்தித்துறையில் இருந்து ஓய்வுப்பெற்ற மூத்த அதிகாரிகள், தற்போது மனம் நொந்து பேசுவதை கேட்கும் போது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.


கே: பி.மோகன் ஐஏஎஸ்ஸுக்கு முன்பு பதவியில் இருந்த வி.பி. ஜெயசீலன் ஐஏஎஸ்ஸின் செயல்பாடுகள் எப்படியிருந்தது?
செஅ: செய்தித்துறை என்பதே, முதல் அமைச்சரின் செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், ஆட்சிக்கு நற்பெயரை தேடித் தருவதற்காகவும்தான் உருவாக்கப்பட்டது. திமுக, அதிமுக என மாறிமாறி ஆட்சி வந்த காலங்களில், திமுக மற்றும் அதிமுக பிரமுகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு என்று நேரடி பணி நியமனமாக உருவாக்கப்பட்டதுதான் செய்தித்துறை. ஒட்டுமொத்த துறையில் சரிபாதி அளவுக்கு திமுக மற்றும் அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். செய்தித்துறை அதிகாரிகள் கட்சி சார்புடையவர்களாக இருந்தாலும் கூட, திறமையான இயக்குனர் தலைமை பதவியில் அமர்ந்தால், தமிழ்நாடு அரசிற்கு சிறப்பு சேர்த்துவிட முடியும் என்பதற்கு முந்தைய கால உதாரணங்கள் நிறையவே இருக்கிறது.


மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா காலத்திலும் அதற்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி காலத்திலும், முதல்வரின் நேரடி பார்வையில் செய்தித்துறை செயல்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் அனுபவம் மிகுந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைதான் செய்தித்துறை இயக்குனராக நியமனம் செய்து இருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில், திராவிட மாடல் ஆட்சியிலும் அனுபவம் மிகுந்த ஐஏஎஸ் அதிகாரிதான் இயக்குனர் பதவியில் நியமிப்பார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில், இளம் ஐஏஎஸ் அதிகாரியான ஜெயசீலன் ஐஏஎஸ்ஸை நியமித்த போது, ஒட்டுமொத்த செய்தித்துறை அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தார்கள். முதல் அமைச்சரின் அலுவலக செயலாளர்களில் மிகுந்த செல்வாக்கு படைத்த ஐஏஎஸ் அதிகாரியின் செல்லப்பிள்ளையாக ஜெயசீலன் ஐஏஎஸ் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தபோதே, கூடுதல் இயக்குனர் அந்தஸ்தில் உள்ள செய்தித்துறை அதிகாரிகளே அதிர்ந்து போனார்கள்.
இயக்குனர் பதவியில் அமர்ந்த சில மாதங்களிலேயே ஜெயசீலன் ஐஏஎஸ்ஸின் உண்மை குணம் வெளிப்பட்டுவிட்டது. தன்னோடு நாள்தோறும் தொடர்பில் இருக்கிற அதிகாரிகளை கூட கேவலமாக நடத்தியிருக்கிறார் என்று இப்போது நிறைய பேர் தகவல் கூறுகிறார்கள். அதுவும், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியால் மரியாதையோடு நடத்தப்பட்ட திமுக குடும்பத்தைச் சேர்ந்த செய்தித்துறை உயர் அலுவலர்களைக் கூட அவமானப்படுத்தியிருக்கிறார். கோபத்தில் கோப்புகளை வீசியெறிந்து எறிந்து இருக்கிறார். பலநேரங்களில் தனக்கு இணையாக இருக்கையில் அமர வைத்து கூட பேசியதில்லை என்ற தகவல்கள் நாள்தோறும் செய்தித்துறை பணியாளர்களிடம் பகிரப்பட்டு, ஒட்டுமொத்த துறையுமே நெருப்பாற்றில் நீந்துவதைப் போல தான், காலத்தை கடத்தியிருக்கிறது.

அதற்கு முன்பு சங்கர் ஐஏஎஸ் இயக்குனராக பணியாற்றிய நேரத்திலும் கூட, மனம்விட்டு வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அவமானங்களை நிறையவே சுமந்து இருக்கிறார்கள், உயர் பதவிகளில் பணியாற்றிவிட்டு ஓய்வுப் பெற்ற செய்தித்துறை மூத்த அதிகாரிகள்.
கே: சங்கர் ஐஏஎஸ் இருந்த போது, கூடுதல் இயக்குனராக இருந்த எழிலகன் மீதும் கூட திமுக குடும்ப செய்தித்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்களே?
செஅ: 2017 ல் நெருக்கடி மிகுந்த நேரத்தில் அதிமுக ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றார் என்றால், அதற்காக பகல், இரவு பாராமல் உழைத்த அதிமுக அரசியல் தலைவர்களுக்கு அப்பாற்பட்டு, அரசு அதிகாரிகள் மட்டத்தில், முன்களப் பணியாற்றியவர்களில் முதன்மையானவர் எழிலகன்.

கூடுதல் இயக்குனராக எழிலகன் பணியாற்ற காலத்தில், எடப்பாடியாரின் ஆட்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். அதிமுக ஆட்சிக்கு எதிராக ஒரு செய்தி கூட பொதுமக்களிடம் சென்றுவிடக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்தார். அப்போது, திமுக குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்பு அலுவலர்கள் பழிவாங்கப்பட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், தன்னால் பழிவாங்கப்பட்டவர்களை சில மாதங்கள் கடந்த பிறகு அரவணைக்கவும் செய்தார்.
தனது விருப்பத்தை நிறைவேற்றுவார்கள் என்று யார் மீது நம்பிக்கை வைத்தாரோ, குறிப்பாக அவரது சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகளை தன்னுடன் வைத்துக் கொண்டார். எழில் பணியாற்றிய காலம், செய்தித்துறையை பொறுத்தவரை மகிழ்ச்சிக்குரிய காலமாகதான் (ஒரு சிலரை தவிர) செய்தித்துறை அதிகாரிகளுக்கு இருந்தது என்று இன்றைக்கு திமுக குடும்பத்தைச் சேர்ந்த செய்தித்துறை அலுவலர்களே மனசாட்சியோடு பேசுவதை கேட்க முடிகிறது.

கே: எழிலைப் போல ஆட்சிக்கு விசுவமானவர் கூடுதல் இயக்குனர் பதவியில் அமர்ந்தால் இயக்குனரின் பணி எளிதாக இருக்கிறது அல்லவா.. அப்படி பார்த்தால், ஜெயசீலன் ஐஏஎஸ் இயக்குனராக இருந்தபோது கூடுதல் இயக்குனராக பணியாற்றிய அம்பலவாணனின் செயல்பாடுகள் எப்படியிருந்தன?
செஅ: ஒரு வரியில் அம்பலவாணன் நிர்வாகத்தைப் பற்றி சொல்லிவிடலாம். ஒட்டுமொத்த செய்தித்துறை வரலாற்றிலேயே அவரைப் போல மோசமான ஒரு அதிகாரியை பார்த்ததே இல்லை. திராவிட மாடல் ஆட்சிக்கும் அவரால் புண்ணியமில்லை.

செல்வாக்கு மிகுந்த திமுக குடும்பத்தைச் சேர்ந்த செய்தித்துறை அலுவலர்கள், இன்னும் வெளிப்படையாக கூறவேண்டும் என்றால், அவரோடு சம காலத்தில் பணியில் சேர்ந்து, 30 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருந்தவர்கள் தான் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படும் அளவுக்கு இரக்க குணம் அற்றவராக பணியாற்றியிருக்கிறார் அம்பலவாணன். அவரின் ஆலோசனைகளை கேட்டதால்தான், ஒட்டுமொத்த செய்தித்துறைக்கும் வில்லனாக மாறிப் போனார் ஜெயசீலன் ஐஏஎஸ். தான் நேர்மையானவர் என்பதையே அடிக்கடி கூறும் அம்பலவாணனுக்கு ஏன் திராவிட மாடல் ஆட்சியில் பணி நீட்டிப்பு வழங்கவில்லை? அம்பலவாணன் வீட்டுக்குப் போனால் போதும் என்று மூத்த அமைச்சர்கள் சிலரே, முதல்வரிடம் கூறியதாகவும் தகவல் உண்டு.

கே: இயக்குனர் மாறும் போதும், கூடுதல் இயக்குனர் மாறும் போதும் செய்தித்துறையில் இந்தளவுக்கு முட்டல்,மோதல் எழுவது எதனால்?

செஅ: உங்கள் கேள்விக்கு வெட்கம், மானத்தை எல்லாம் தூக்கி தனியாக வைத்துவிட்டுதான் பதில் சொல்ல வேண்டும். ஒரே வரியில் கூட முடித்து விடலாம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு செய்தித்துறை செயலாளராக பதவியேற்றார் தற்போது ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் வெ.இறை அன்பு ஐஏஎஸ் . பதவிவேயற்ற ஒன்றிரண்டு மாதங்களிலேயே கூறினார், செய்தித்துறை என்று தனியாக ஒரு துறை தேவையேயில்லை. இந்த துறையில் பணியாற்றுகிற கூடுதல் இயக்குனர்கள் முதல் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் வரை அனைவருக்கும் செய்திக்குறிப்பே, அதற்குரிய இலக்கணத்தோடு எழுத தெரியவில்லை.

முதல்வர் பங்கேற்கிற அரசு விழாக்கள் மட்டுமல்ல, மாவட்டங்களில் நடைபெறுகிற, அமைச்சர்கள் பங்கேற்கிற விழாக்களின் மாண்பை, பொதுமக்களிடம் முறையாக கொண்டு செல்கிற ஆற்றல் படைத்தவர்களாக இல்லை. கட்சி நிர்வாகிகள் போல இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். அன்றைய காலத்தை ஒப்பிட்டால், செய்தித்துறை அப்படிதான் இருந்தது.
செய்தித்துறையில் எந்தவொரு அதிகாரியை கேள்வி கேட்டாலும், அலுவல் பணியாற்ற நிர்ப்பந்தித்தாலும், கலைஞர் ஆட்சி காலத்தில் அவரது குடும்பத்திற்கே எங்க அப்பா நெருக்கமானவர் என்று வீறாப்பு காட்டியவர்கள் செய்தித்துறையில் பணிபுரிந்திருக்கிறார்கள். அதுபோலவே, மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆட்சிக்காலத்தலும் இயக்குனர், செயலாளர் அந்தஸ்தில் உள்ள உயர் ஐஏஎஸ் அதிகாரிகள், பணி நேரங்களில் கொஞ்சம் கடுமை காட்டினால், மூத்த அமைச்சர்கள் ஓபிஎஸ், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம் போன்றவர்களுக்கு உறவினர் என்று சொல்லி, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியவர்களும் உண்டு.
ஆனால், 2017 க்குப் பிறகு சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகமானதை தொடர்ந்து, செய்தித்துறை அலுவலர்களும் அதற்கு ஈடுகொடுத்து பணியாற்றி வருகிறார்கள். இன்றைக்கு என்னைப் போன்ற இளம் செய்தித்துறை அலுவலர்களுக்கு முக்கியமான சவாலாக இருப்பது, செய்தித்துறையிலேயே பணியாற்றி மூப்பு அடிப்படையில் அடுத்த நிலையில் உயர்ந்த செய்தித்துறை உயர்அதிகாரிகள், வேலை வாங்கும் போது, தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதுடன், பிழைகள் ஏற்படுகிறபோது, கனிவான வார்த்தைகளை கூறி அரவணைத்து வழிநடத்தி செல்ல வேண்டும் என்பதுதான்.

மக்கள் தொடர்பு அலுவலர் நிலையிலான பதவியில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள், தலைமைச் செயலகத்தில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுவதே இல்லை. அதற்கு மேலான நிலையில் உள்ளவர்கள், உதவி இயக்குனர், துணை இயக்குனர், இணை இயக்குனர் போன்றவர்கள்தான் தலைமைச் செயலகத்தில் பணியாற்ற சிபாரிசுகளை தேடி அலைகிறார்கள்.
வெளிப்படையாக பேச வேண்டும் என்றால், தலைமைச் செயலகத்தில் பணியாற்றுகிற போது, நேசம் மிகுந்த செய்தியாளர்கள், அவர்களது கை காசுகளை செலவழித்து செய்தித்துறை அலுவலர்களுக்கு தேநீர், சாப்பாடு வாங்கி கொடுத்ததை எல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தாசில்தார் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ அலுவலகத்தில், பத்திரப்பதிவு அலுவலகத்தில், வணிகவரித்துறை அலுவலகத்தில் ஜுனியர் அசிஸ்டென்ட் ஆக பணியாற்றுகிற அரசு ஊழியர்களுடன் ஒப்பிடும்போது செய்தித்துறை அலுவலர்களுக்கு அன்றாடம் ஒரு சதவீதம் கூட லஞ்சப்பணம் கிடைப்பதில்லை.

வெறும் பந்தாவுக்காக, தலைமைச் செயலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்லிக் கொள்வார்கள். சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரிடம் நட்பு பாராட்டிக் கொள்ளலாம். திராவிட மாடல் ஆட்சியில், எந்த அமைச்சரும் செய்தித்துறை அலுவலர்களை வாழ வைத்ததாக, கடந்த மூன்றாண்டுகளில் ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
கே: நீங்கள் கூறுவதை கேட்டால் பரிதாபமாக இருக்கிறது? செய்தித்துறைக்கு எப்போதுதான் விமோசனம் கிடைக்கும்?
செஅ: ரொம்ப சிம்பிள். திறமை மிகுந்தவர்களை, வேலை பார்ப்பதற்கு அஞ்சாதவர்களை தலைமைச் செயலகத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். புதிதாக வரும் இயக்குனருக்கு ஆலோசனை கூறுபவர்கள், சார் இவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளின் வாரிசுகள். முரட்டு ஆட்கள். வேலையே செய்ய மாட்டார்கள் என்று சொல்வதைவிட, வேலையே தெரியாது என்றுதான் தூபம் போடுகிறார்கள். ஆரம்பத்திலேயே இவர்களை எல்லாம் தட்டி வைத்தால்தான் இயக்குனர் பதவியில் நீடிக்க முடியும் என்று எங்கள் துறையில் உள்ள மூத்த அதிகாரிகள் ஒன்றிரண்டு பேர், இயக்குனருக்கு துறை மீதான கெட்ட எண்ணத்தை உருவாக்கிவிடுவார்கள்.


எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற குறளுக்கு ஏற்ப, இயக்குனர்கள், அவர்களது அனுபவ அறிவுக்கு ஏற்ப, செய்தித்துறையை செயல்பட அனுமதித்தாலே போதுமானது. தற்போதைய இயக்குனர் (இரா.வைத்திநாதன் ஐஏஎஸ்) ஏற்கெனவே பணிபுரிந்த துறைகளில், சிறப்பாகவே பணியாற்றி இருக்கிறார். பாரபட்சம் காட்டியதில்லை. கூழைக் கும்பிடு போடுபவர்களை உற்சாகப்படுத்தியதில்லை என்றெல்லாம் தகவல்கள் கிடைக்கிறது.

மனிதர்களை மதிக்க தெரிந்தாலே, நல்வழியில் நடத்துகிற ஆற்றலும் இயல்பாகவே வாய்ந்திருக்கும் என்று சொல்வார்கள். அந்தவகையில், கடந்த கால கசப்புகளை எல்லாம் போக்கி, ஒட்டுமொத்த செய்தித்துறையும் அன்பான வார்த்தைகள் கூறி, அரவணைத்துக் சென்றாலே, செய்தித்துறைக்கு மறுமலர்ச்சி நிச்சயம் ஏற்பட்டும் என்று நம்புகிறேன்.

கே: ரொம்ப பேசிவிட்டோம். திராவிட மாடல் ஆட்சி அமைந்தவுடன் பழிவாங்கப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர். மூன்றாண்டுகளாக கடினமான பணிச் சூழலில் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். தற்போதைய இயக்குனரை சந்தித்து பணிமாறுதல் கோரி விண்ணப்பம் கொடுக்கும் எண்ணம் இருக்கிறதா?

செஅ: வழக்கமான அலுவலக நேரத்தை விட கூடுதலாக சில மணிநேரம் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். இரவு நேரத்தில்தான் அலுவலகத்தில் இருந்து புறப்பட முடிகிறது. எனக்கு மேல் அதிகாரியாக உள்ளவர், அரவணைத்துச் செல்கிறார். சவாலான பணியாகதான் இருக்கிறது. அதிமுக பாரம்பரியத்தில் வந்தவன் என்பதால், தண்டனையாக எனக்கு கிடைத்த பணி இது. அதிமுக, திமுக என பார்க்காமல், ஆர்வமுடன் செய்து கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாடு அரசுக்கு புகழைச் சேர்ப்பது எங்களுக்கு இட்ட பணி. அதை முழுமனதோடு நிறைவேற்றி வருகிறேன். பணிமாறுதலும், பதவி உயர்வும் நேர்மைக்கு கிடைக்கும் என்றால், அந்த காலம் வரை காத்திருக்கும் மனவுறுதி எனக்கு அதிகமாகவே இருக்கிறது. உண்மையான விடியல், செய்தித்துறைக்கும் sகிடைக்கும் காலத்திற்காக காத்திருக்கிறோம். கண் முன்பே நம்பிக்கை கீற்று தெரிகிறது. நேரில் சந்திக்கும் போது விரிவாக பேசுவோம். நன்றி..