Fri. May 3rd, 2024

பாரதிய ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவிலோ, மாநில அளவிலோ சவால் விடும் அரசியல் கட்சிகளை, சல்லி சல்லியாக உடைத்து திகில் காட்டுவதில் அசாத்திய சூரரான அமித்ஷாவுக்கே, மகாராஷ்டிராவில் இரண்டு சிறிய கட்சிகளின் ஆளுமை மிகுந்த தலைவர்கள் கடிவாளம் போட்டிருப்பதுதான், பிரதமர் மோடியை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் எடப்பாடியாரை போலவே, தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அதிரடி அரசியலை மேற்கொண்டிருப்பது, பாஜக மேலிட தலைவர்களை கதிகலங்க வைத்திருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாரதிய ஜனதா ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஏக்நாத் ஷிண்டேவை, முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைத்தவர்களே, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்தான் என்ற போதிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா மேலிடம் நினைத்த மாத்திரத்தில் கூட்டணியை உறுதி செய்ய முடியாத அளவுக்கு கடிவாளம் போட்டுக் கொண்டிருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே என்பதுதான், நாடு முழுவதும் பாஜக தலைவர்களிடம் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதாவுடன் சிவசேனா நிறுவனர் மறைந்த பால் தாக்ரேவின் புதல்வர் உத்தவ் தாக்ரே கூட்டணி அமைத்து போட்டியிட்டார். பாரதிய ஜனதா கட்சி 105 இடங்களிலும் சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றது. முதல் அமைச்சர் பதவியை சிவசேனாவுக்கு வழங்க வேண்டும் என்று உத்தவ் தாக்ரே பிடிவாதம் காட்டியபோதும் அவரது கோரிக்கையை புறக்கணித்தது பாஜக மேலிடம்.
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஸாரி அழைப்பின் பேரில், பாஜகவைச் சேர்ந்த முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார்.

முதல் அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த உத்தவ் தாக்ரே, சட்டமன்றத் தேர்தலில் எதிர் அணியில் நின்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் முதல் அமைச்சர் பதவியை முனைப்புக் காட்டினார்.

பாஜக தலைமையிலான ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், முதல்வர் பதவியில் இருந்து விலகினார் தேவேந்திர பட்னாவிஸ். இதனைத்தொடர்ந்து எழுந்த அரசியல் குழப்பங்களுக்கு இடையே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் முதல் அமைச்சர் பதவியில் அமர்த்தார் உத்தவ் தாக்ரே. கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாதி காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்த உத்தவ் தாக்ரேவை பழி தீர்க்க பாஜக மேலிட தலைவர்கள் சரியான காலத்திற்காக காத்திருந்தனர்.

உத்தவ் தாக்ரே தலைமையிலான ஆட்சி, இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாம் ஆண்டில் பயணித்த போது, உத்தவ் தாக்ரேவை முதல் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக தூக்கியெறிந்தது பாஜக மேலிடம். உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே என்பவரை தூக்கிய பாஜக மேலிடம், சிவசேனா கட்சியை உடைத்துக் கொண்டு பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் வெளியேறி தனி அணியாக நின்று, பாஜக கூட்டணியுடன் ஆட்சி அமைக்க நாள் குறித்தனர்.

ஏக்நாத் ஷிண்டே, தமிழ்நாட்டின் எடப்பாடியார் என்று வர்ணிக்கும் அளவுக்கு, மத்திய பாஜக அரசின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல் பேச்சுக்கு கட்டுப்பட்டு செயல்பட தொடங்கினார். ஏக்நாத் ஷிண்டோவை பொம்மையாக பாவித்து, பாஜக மேலிடம் சாவி கொடுத்து ஷிண்டோவை இயக்கிக் கொண்டிருக்கிறது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுக்கு சமமாக இந்துத்துவா கொள்கையில் வெறித்தனம் காட்டும் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனாவையே உடைத்த பாஜக மேலிடத் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுப்பதை போல, இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸையும் இரண்டாக பிளந்தார்கள் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரான அமித்ஷாவும்.

சரத்பவாரின் உறவினராக அஜித் பவார், மகாராஷ்டிரா சிவசேனா பாஜக கூட்டணி அரசில் துணை முதல் அமைச்சராக பதவி வகித்து வருகிறார். பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிக்கியிருப்பவர் அஜித் பவார் என்று பிரதமர் மோடியால், பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டவர் தேசியவாத காங்கிரஸை உடைத்துக் கொண்டு பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தந்தவுடன் புனிதராகிவிட்டாரா என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டின.


மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவை போலவே செல்வாக்கு மிகுந்த சிவசேனாவையும், தேசியவாத காங்கிரஸையும் உடைத்த பாரதிய ஜனதாவுக்கு, இரண்டு கட்சித் தலைவர்களும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தண்ணி காட்டிக் கொண்டிருப்பதுதான், தேசிய அளவில் இன்றைக்கு மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

மகராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 எம்பி தொகுதிகள் உள்ள நிலையில், 35 இடங்களில் போட்டியிடுவதற்கு பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது. எஞ்சிய 13 தொகுதிகளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறது பாஜக மேலிடம்.

தொகுதி பங்கீடு விவகாரத்தில் பெரியண்ணன் போல நடந்து கொள்ளும் பாஜகவின் செயல்பாட்டிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஏக்நாத் ஷிண்டேவும் அஜித் பவாரும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 25 இடங்களில் வெற்றி பெற்ற 23 தொகுதிகளில் மட்டுமே தற்போது பாஜக போட்டியிட வேண்டும். எஞ்சிய 25 தொகுதிகளில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸும் போட்டியிடுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிளவுபடாத சிவசேனா கட்சி, 23 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இன்றைய தேதியில் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் 13 பேர் உள்ள நிலையில், அதே எண்ணிக்கையில் சிவசேனா போட்டியிட வேண்டும் என்று சிவசேனா தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பாஜக 23, சிவசேனா 13 என மொத்தம 36 இடங்கள் போக, எஞ்சிய 12 தொகுதிகளில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதில் தீர்க்கமாக உள்ளது.

மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர்களால், 48 தொகுதிகளை பிரித்துக் கொண்டு கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருப்பது, பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மிகப்பெரிய அளவில் தலைவலியை உருவாக்கிவிட்டது. இந்தியாவில் அதிக எம்பி தொகுதிகளை கொண்ட மாநிலங்களில், 80 எம்பிகளுடன் முதல் இடத்தில் உத்தரப் பிரதேசம் இருந்து வரும் நிலையில், 48 எம்பிகளுடன் இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. வர்த்தகத் துறையில் முதல் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிரம், ஹிந்து பேசும் மாநிலங்களின் இதயமாகவும், தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாகவும் இருந்து வருகிறது.


இப்படிபட்ட பின்னணி கொண்ட மகாராஷ்டிராவில், பாரதிய ஜனதாவுக்கு இணையாக செல்வாக்கு இல்லாத ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும், தொகுதி பங்கீட்டில் அடம் பிடிப்பதை கண்டு ஆத்திரமடைந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, மார்ச் 6 ஆம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு பறந்து வந்தார்.
மகாராஷ்டிரா மாநில பாஜக மூத்த தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கூட்டணி கட்சித் தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரிடமும் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இரண்டு தலைவர்களுமே பாஜக 30 தொகுதிகளை குறி வைத்திருக்கிறது என்ற கோரிக்கையை ஏற்கவில்லை.
தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி குறித்து நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்திய அப்போதைய பாஜக தலைவர் அமித்ஷா, மிரட்டல் பாணியில் பேசிய போதும் கூட, அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார். எடப்பாடியாரின் பிடிவாதத்தைப் பார்த்து அதிருப்தியடைந்து விடியற்காலையில் டெல்லிக்கு பறந்து சென்ற அமித்ஷாவுக்கு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, மகாராஷ்டிராவில் எடப்பாடியாரை போல பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் ஆகிய இரண்டு ஆளுமைகளைப் பார்த்து ஆடிப்போய் இருக்கிறார்.


மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் சுமுகமாக தொகுதி பங்கீட்டை முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு டெல்லியில் இருந்து மும்பைக்கு பறந்து வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, தண்ணீ காட்டி விட்டார்கள் ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் என்கிறார்கள் மும்பையில் உள்ள மூத்த ஊடகவியலாளர்கள்.
மகாராஷ்டிரா அரசியலிலும் மட்டுமின்றி ஆட்சி அதிகாரத்திலும் அமர வைத்து புதுவாழ்வு கொடுத்த பிரதமர் மோடிக்கே எதிர்ப்பு காட்டும் வகையில், ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் போர்க்கொடி தூக்கியிருப்பதை பார்த்து அதிர்ந்து போய்விட்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியில் எழுந்துள்ள சிக்கல்களால், இந்தியா கூட்டணி தலைவர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் சந்தர்ப்பவாத பாஜக கூட்டணியை வீழ்த்திவிட்டு, 30க்கும் மேற்பட்ட எம்பி தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக காங்கிரஸ் மேலிட தலைவர்கள் உற்சாகமாக கூறி வருகிறார்கள்.
தென் தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக பலமாக வீசும் அதிருப்தி அலை, மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியை தோல்வியடைய செய்தாலும் அதிர்ச்சியடைய தேவையில்லை என்கிறார்கள் தேர்தல் கால கருத்துக் கணிப்பு வல்லுநர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *