Thu. May 2nd, 2024

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் மதில் மேல் பூனையாக இருந்து வந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீசிய வலையில், டாக்டர் ராமதாஸும், பிரேமலதா ஆகிய இருவரும் சிக்கிக் கொண்டுவிட்டார்கள் என்று மகிழ்ச்சியாக கூறுகிறார்கள் எடப்பாடியாருக்கு மிகமி நெருக்கமான அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஏழு எம்பி தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 எம்பி தொகுதிகளும் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானநிலையில், அதிமுகவுடனான கூட்டணியை பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தேர்தல் குழு உறுதிசெய்துள்ளது, அக்கட்சித் தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதை பாமகவும் உறுதி செய்துவிட்டதாக கூறும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாமகவும், தேமுதிகவும் ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. பாமகவுக்கு கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்ய சபா சீட் வழங்கப்பட்டதைப் போலவே, தற்போதும் ராஜ்ய சபா சீட் ஒதுக்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், தேமுதிகவுக்கு ராஜ்ய சீட் ஒதுக்குவதில் உள்ள சிக்கல் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் விரிவாக எடுத்துக் கூறிவிட்டார். ராஜ்ய சபா சீட் கிடைக்காது என்கிற போது, அதனை ஈடுகட்டும் வகையில் தேமுதிக தலைமையை சந்தோஷப்படுத்தும் வகையில் சில சலுகைகள் செய்து தருவதற்கும் எடப்பாடியார் முன்வந்திருக்கிறார் என்கிறார்கள் அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள்.
பாமக தலைவர் அன்புமணி, அதிமுக கூட்டணியில் தருமபுரி தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதால், முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போதே, பாமகவுக்கு தருமபுரி தொகுதியை ஒதுக்குவதற்கு எந்தவொரு சிக்கலும் இருக்காது என்று எடப்பாடியார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள்.
அதிமுகவுடன் நடைபெற்றபேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்தது, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்கிற போதும், மத்திய அமைச்சர் பதவி தருவதாக பாஜக உறுதியளிக்கும் என்று மிகவும் எதிர்பார்ப்படன் மருத்துவர் அன்புமணி காத்திருந்தார். அவரின் நம்பிக்கை பொய்க்கும் வகையில், பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரண்டு மாதத்தில் இரண்டு முறை தமிழகம் வந்த பிரதமர் மோடி, பாஜக கூட்டணியில் பாமகவை இணைப்பதற்கு எந்தவொரு முயற்சியும் எடுக்காததால், அன்புமணியும் பாஜக மீது அதிருப்தியடைந்துவிட்டார் என்கிறார்கள்.

அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதில் வெறித்தனமாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை இருந்து வரும் நேரத்தில், அவரது விருப்பத்திற்கு ஏற்பதான் பிரதமர் மோடியின் செயல்பாடுகளும் இருப்பதாக சந்தேகப்படும் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள், அண்ணாமலையின் தலைமையை ஏற்று நாடாளுமன்றத்தை சந்தித்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக அரசியல் களம் முழுமையாக கைவிட்டு போய்விடும் என்ற
அச்சம், ராமதாஸுக்கும் பிரேமலதாவுக்கும் வந்து விட்டது என்று கூறும் அரசியல் திறனாய்வாளர்கள், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்குதான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதை நன்றாகவே ராமதாஸும், பிரேமலதாவும் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவர்களின் எண்ணவோட்டத்திற்கு ஏற்பதான், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியும் தீர்மானித்திருக்கிறார் என்கிறார்கள்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவது என்பது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டுமல்ல, 2026 சட்டமன்றத் தேர்தலின் போதும் அதிமுக தலைமையிலான கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் தான் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள். மார்ச் முதல் வாரத்தில் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், எஸ்டிபிஐ, பார்வர்டு பிளாக்கும், பூவை ஜெகன் தலைமையிலான கட்சியும் இணைந்திருக்கிறது. பாமக இணைவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டால், ஆளும்கட்சியான திமுகவு தலைமையிலான கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணியும் பலம் பொருந்தியாகவே இருக்கும் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.

திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் நேரடி போட்டி. தேர்தல் களத்தில் அதிமுகவே இல்லை என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று எடப்பாடியார் சபதம் எடுத்திருப்பதாக கூறும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தமிழ்நாட்டில் உள்ள 39 எம்பி தொகுதிகளிலும் பாஜக டெபாசிட்டை இழந்து அவமானப்பட வேண்டும். அப்போதுதான் அண்ணாமலையை தமிழ்நாட்டு அரசியலில் இருந்து பாஜக மேலிட தலைவர்கள் அப்புறப்படுத்தவார்கள். அப்படிபட்ட ஒரு நிலையை, நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்துவதற்காக முழு சக்தியையும் பயன்படுத்தி வருகிறார் எடப்பாடியார் என்று கூறும் அதிமுக மூத்த தலைவர்கள், அண்ணாமலையை களத்தில் இறக்கிவிட்டு பூச்சாண்டி காட்டும் பாஜக மேலிட தலைவர்களுக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை புகட்டும் என்று ஆவேசமாக கூறுகிறார்கள்.

அண்ணாமலை தலைமையை ஏற்று, பாஜக கூட்டணிக்கு அதிமுக வர வேண்டும் என்று மத்திய பாஜக அரசில் அதிகார மையமாக இருந்து வரும் இரண்டு தலைவர்கள், தொழில் அதிபார்கள் மற்றும் பிரபல ஜோதிடர்களை தூதுவர்களாக எடப்பாடியாரிடம் அனுப்பி வைத்து, அவரின் மனதை கரைத்து பாஜக கூட்டணிக்கு இழுப்பதற்காக எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டது. கடந்த பத்து நாட்களில் இரண்டு முறை தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்பதற்கோ, வழியனுப்புவதற்கோ, எடப்பாடியார் சிறிதளவும் ஆர்வம் காட்டாததால், மோடி அதிக கோபத்தில் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் வாரங்களில், எடப்பாடியார் மற்றும் அவருக்கு மிகமிக நெருக்கமான அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக உள்ள விசாரணை அமைப்புகள் களம் இறக்கப்பட்டு, எடப்பாடியாரையும், பாஜக கூட்டணிக்கு எதிரான மனப்போக்கை கொண்டிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் கதிகலங்க வைக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து முன்கூட்டியே எடப்பாடியாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் டெல்லி பாஜக மேலிட தலைவர்கள்.
மத்திய பாஜக அரசின் எந்தவொரு மிரட்டலுக்கும் தான் அடிபணிய மாட்டேன் என உறுதிபட கூறி வரும் எடப்பாடியாரை பார்த்து, அவருக்கு மிக மிக நெருக்கமான அதிமுக மூத்த தலைவர்களே வியப்படைந்துவிட்டார்கள். பாஜகவுடன் இணங்கி போவதில்லை என்று உறுதியான நிலைபாட்டை எடப்பாடியார் தொடர்ந்தால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 10 எம்பி தொகுதிகளை உறுதியாக கைப்பற்றும் என்று உற்சாகமாக கூறுகிறார்கள் அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள்.
எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவில் எந்தவொரு கட்சியும் இணைந்து விடக் கூடாது என்பதில் குறியாக இருந்து வந்த அண்ணாமலை, எதிரணி கூட்டணியை உடைக்க, சாம, தான, பேத , தண்டம் என அனைத்து வழியையும் பின்பற்றுவோம் என வெளிப்படையாக கூறியவதை நினைவுக்கூரும் அதிமுக முன்னணி தலைவர்கள், அண்ணாமலையின் மிரட்டலுக்கு மட்டுமல்ல, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பகிரங்க மிரட்டல்களை கூட எடப்பாடியார் எதிர்கொள்ளும் அளவுக்கு துணிந்து விட்டார் என்கிறார்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநிலங்களில் பாஜக அமோகமாக வெற்றிப் பெறும், மீண்டும் மோடியே பிரதமர் பதவியில் அமர்வார் என்று வடஇந்திய ஊடகங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டு வரும் நிலையில் கூட, பாஜக கூட்டணியில் இணைவதற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவே தயாராக இல்லை. கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி, பிரதமர் மோடியின் புகழுரை, மத்திய பாஜக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பத்ம பூசன் விருது ஆகியவற்றுக்கும் கூட மயங்காத பிரேமலதா, கூட்டணி விவகாரத்தில் மோடிக்கே அல்வா கொடுத்ததைதான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எடப்பாடியாரின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து துண்டை காணோம்., துணியை காணோம் என அண்ணாமலை ஓட்டம் எடுப்பது உறுதி என திட்டவட்டமாக கூறுகிறார்கள் இபிஎஸ்ஸுக்கு மிகமிக நெருக்கமான அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *