சென்னை பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிராக பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன்வைத்ததை அடுத்து தமிழ்நாடு பாஜக தொண்டர்கள், மிகுந்த உற்சாகம் அடைந்திருப்பதாக பாஜக மூத்த நிர்வாகிகள் பெருமிதத்துடன் கூறிவருகிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் திமுக தலைமையை, முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தை மோடி வசைப்பாடுவது வழக்கமான ஒன்றுதான் என்று அசால்ட்டாக கடந்து போகும் திமுக மூத்த நிர்வாகிகள், நேர்மையான கட்சியா பாஜக என்பதையும், ஊழலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமே இல்லை என்பதை போல முழங்கும் மோடி, முதலில் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி தேர்தல் நிதி பற்றியும், பிஎம்கேர் ஆப் மூலம் திரட்டப்பட்ட நன்கொடை எவ்வளவு என்பதை பற்றியும் வெளிப்படையாக கூறச் சொல்லுங்கள் என்று பொங்குகிறார்கள்.
அதேவேளையில், சத்தமே இல்லாமல், பிரதமர் மோடிக்கும், தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கும் ஒரேசேர அரசியல் பாடமே நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுகவினர், உற்சாகமாக கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வியப்பிற்குரிய அம்சமாகும்.
வேலூர் மாவட்டத்தில் மேல்மட்ட திமுக தலைவர்களிடம் நிலவி வரும் கோஷ்டிப் பூசலை மறந்து, பிரதமர் மோடியை வரவேற்பதற்கு ராணிப்பேட்டை அமைச்சர் ஆர்.காந்தியை தேர்ந்தெடுத்தற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் முதல்வர் மு.க.ஸ்டாலினை கொண்டாடி வருகிறார்கள்.
திமுக நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு எதிர்க்கட்சியினரால் ஏற்படும் அவமானங்களை தன்னுடைய அவமானமாக கருதி பொங்கி எழுபவர் மு.க.ஸ்டாலின் என்பதற்கு, சென்னை பாஜக பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை, ராணிப்பேட்டை மாவட்ட அமைச்சர் காந்தியை வரவேற்க வைத்து, திராவிட சித்தாந்தத்தின் மாண்பை பட்டுவர்த்தனமாக உணர்த்திவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என குதூகலத்துடன் கூறுகிறார்கள் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள்.
இதென்ன கலாட்டா.. வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் பேசினோம்..
அமைச்சர் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினால் கிடைத்த முக்கியத்துவத்தின் பின்னணி குறித்து மனம் திறந்து விரிவாக பேசினார்கள்.
அகில இந்திய பாஜக தலைவர்களுக்கு மகாத்மா காந்தியை விட சாவர்க்கர் மீதுதான் அபரிதமான மரியாதை இருந்து வருகிறது. மேலும், சாவர்க்கரின் தியாக வாழ்க்கையை விட அகிம்சை வழியிலான காந்தியின் சுதந்திரப் போராட்டத்தை புகழ்ந்து கொள்வதற்கு ஒன்றுமே இல்லை என்பதுதான் பாஜக மேலிட தலைவர்களின் பேச்சாக இருந்து வருகிறது.
உலகளவில் இந்தியாவுக்கு இன்றைக்கும் கிடைத்து வரும் புகழுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருப்பதே, மகாத்மாவின் அஹிம்சை வழியிலான சுதந்திர போராட்ட வேள்விதான். ஆனால், உலகமே மகாத்மாவை போற்றிக் கொண்டிருந்தாலும் கூட, பாஜக மேலிட தலைவர்களுக்கு நாதுராம் கோட்சேவின் மிருகத்தனமான செயலைதான், இந்து மக்களை காப்பாற்றிய மகத்தான சாதனையாக, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து வெளிப்படையாகவே கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். பாஜக மேலிடத் தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை (தமிழ்நாட்டை நீங்கலாக) கோட்சேவுக்கு தரும் மரியாதை அளவுக்கு கூட மகாத்மாவிற்கு தருவதில்லை என்பதுதான் மிகவும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோட்சேவை கொண்டாடும் பாஜகவிற்கு….சாவர்க்கரை கொண்டாடும் பாஜகவிற்கு…. சரியான பாடம் புகட்டும் வகையில், மத்திய பாஜக ஆட்சிக்கு தலைமை ஏற்றிருக்கும் பிரதமர் மோடியை வரவேற்க, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆர்.காந்தியை தேர்வு செய்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மகாத்மாவை கிள்ளுக்கீரையாக பாஜக தலைவர்கள் மதிக்கும் போது, தமிழ்நாடு காலம் காலமாக போற்றிக்கொண்டிருக்கும் தியாகத்தின் மொத்த உருவமான மாபெரும் தலைவர் மகாத்மா காந்தி மீதான மரியாதையை ஒருபோதும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதை பிரதமர் மோடிக்கு நேரடியாகவே சுட்டிக்காட்டும் வகையில்தான் அமைச்சர் ஆர்.காந்தியை அனுப்பி வைத்திருக்கிறார்.
மகாத்மாவின் நினைவுகள் மேலோங்கும் வகையில் அமைச்சர் காந்தியின் வரவேற்பு மூலம் பிரதமர் மோடிக்கு மகாத்மாவின் தியாக வாழ்க்கை ஒருநொடியாவது மனசாட்சியை உலுக்கட்டும் என்று அனுப்பி வைத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பெருமிதத்தோடு கூறுகிறார்கள் மு.க.ஸ்டாலின் பக்தர்களான வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள். பிரதமர் மோடிக்கு திராவிட சித்தாந்தத்தின் அரசியல் பாதையை சுட்டிக்காட்டி பாடம் நடத்தியதைப் போல, தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கும் மேலும் மேலும் ஆத்திரம் அதிகமாகட்டும் என்றுதான் அமைச்சர் காந்தியை வரவேற்க அனுப்பி வைத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பீதியை கிளப்புகிறார்கள் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள். என் மண்..என் மக்கள் எனும் பெயரில் நடைப்பயணத்தை மேற்கொண்ட கே.அண்ணாமலை, ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு வந்த போது, எங்கள் மாவட்ட அமைச்சரான ஆர்.காந்தியை தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
அமைச்சர் ஆர்.காந்தியின் ஆரம்ப கால அரசியலை பற்றி நாலாம் தர அரசியல்வாதிகளே பேசுவதற்கு தயங்கும் போது, அதைவிட தரம் தாழ்ந்து, சாராய வியாபாரியாக இருந்தவர் ஆர்.காந்தி என விமர்சனங்களை முன்வைத்தார் அண்ணாமலை.
தேசிய கட்சியான பாஜகவின் தமிழ்நாட்டு தலைவரான அண்ணாமலைக்கு அரசியல் நாகரிகம் பற்றிய பாடத்தை நடத்தும் வகையில்தான், அமைச்சர் ஆர்.காந்தியை தேர்வு செய்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறும் ராணிப்பேட்டை திமுக நிர்வாகிகள், குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் வருகையின் போது, மாநில அரசுக்குரிய மரபுபடி, அந்தந்த மாநில அமைச்சர்கள்தான் முதலில் வரவேற்க வேண்டும். அதற்குப் பிறகுதான் சமுதாயத்தில் செல்வாக்குப்படைத்த பிரமுகர்கள் வரவேற்க முடியும். அந்தவகையில், சென்னை விமான நிலையத்தில் மோடியை அமைச்சர் ஆர்.காந்தி வரவேற்ற பிறகுதான், கே.அண்ணாமலையே வரவேற்றார்.
அரசியலில் கத்துக்குட்டியான கே.அண்ணாமலை, பொதுவெளியில் எவ்வளவு தரம் தாழ்ந்து பேசினாலும், திமுகவில் அங்கம் வகிக்கும் எந்தவொரு நிர்வாகியையும் எதிர்க்கட்சியினர் கேவலப்படுத்துவதை திமுக தலைமை ஒருபோதும் அனுமதிக்காது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று உள்ளத்தில் பொங்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தமுடியாமல் உற்சாகம் பீறிட உரக்கக் கூறுகிறார்கள் அமைச்சர் ஆர்.காந்தியின் விசுவாசிகள்.
பிரதமர் மோடியை அமைச்சர் ஆர்.காந்தி வரவேற்றதன் பின்னணியில், இவ்வளவு பெரிய தன்மான உணர்வுகள் மறைந்திருக்கிறது. திமுக நிர்வாகி என்று சொல்லிக் கொள்வதற்கு, சின்ன சின்ன அம்சங்களில் கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டும் அக்கறையையும், திமுகவின் சுயமாரிதையை துணிச்சலாக வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்வதால்தான், பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரால் திமுக மீது வீசியெறியும் வசுவுகளை பற்றி கவலைப்படாமல், திமுகவின் விசுவாசமிக்க தொண்டராக, பாரம்பரியமாக பயணிக்க ஊக்கச்சக்தியாக இருக்கிறது என்று மனம் திறந்து பேசினார்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள்..