Fri. May 3rd, 2024

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை, டெல்லி மேலிட தலைவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை.

டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய அண்ணாமலை, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நேரத்தில், 5, 6 தொகுதிகளில் பாஜக நிச்சயம் வெற்றிப் பெறும். இப்போது நான் சொல்வதை காகிதத்தில் வேண்டுமானால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உறுதியாக பாஜக வெற்றி பெறும் என்று கூறிய அண்ணாமலை, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய தொகுதிகளில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.


அண்ணாமலையின் பல்லவிக்கு கடந்த பல மாதங்களாக மூத்த செய்தியாளர் துக்ளக் ரமேஷ், மோடி ஊடகங்கள், பாஜக ஆதரவு யூ டியூப்பர்கள் ரங்கராஜ் பாண்டே, மாரிதாஸ், கோலாகல சீனிவாசன் உள்பட பல பிரபலங்கள் தமிழகத்தில் பாஜக அபார வளர்ச்சி பெற்றிருக்கிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், கோவை,நீலகிரி என பத்து எம்பி தொகுதிகளில் பாஜகவின் வாக்கு சதவீதம் இரட்டை இலக்கத்தை எட்டியிருக்கிறது என்று பாண்டே உள்பட பிரபல ஊடகவியலாளர்கள் கூறிவருகிறார்கள்.

கடந்த ஓராண்டாகவே, அண்ணாமலை தலைமையிலான பாஜக தமிழகத்தில் அதிவேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அதிமுகவின் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில், இந்து மத ஆதரவாளர்கள், அதிமுகவுக்குதான் பெருவாரியாக வாக்காளித்தார்கள். செல்வி ஜெயலலிதா இப்போது உயிரோடு இல்லாததால், அவரது தலைமையிலான அதிமுகவுக்கு வாக்களித்து வந்த இந்து மத ஆதரவாளர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குதான் வாக்களிப்பார்கள். அண்ணாமலையின் பிரசாரமும், செயல்பாடுகளும் இந்து மத ஆதரவாளர்களிடம் பெருவாரியான உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாண்டே, மாரிதாஸ், கோலாகல சீனிவாசன் உள்ளிட்ட பிரபல யூ டியூப்பர்கள் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாகவே பேசி வருகிறார்கள்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த பாஜக, 5 தொகுதிகளில் போட்டியிட்ட போதும், அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. 5 எம்பி தொகுதிகளிலும் மொத்தமாக பாஜக பெற்ற வாக்குகள் 15 லட்சத்து 51 ஆயிரத்து 924 மட்டுமே ஆகும். வாக்கு சதவீதம் 3.66 என்ற அளவுக்குதான் இருந்தது.


2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடியா.. லேடியா என்ற முழக்கத்துடன் அதிமுக தனித்து போட்டியிட்டு, 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. அப்போதைய தேர்தலில் முதல்முறையாக பிரதமர் பதவிக்கு மோடி போட்டியிட்ட போது, நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசிய போதும், தமிழ்நாட்டில் பாமக, தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய பாஜக, கூட்டணி பலத்தோடு 8 தொகுதிகளில் போட்டியிட்டபோதும், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வாக்குகள் 22 லட்சத்து 23 ஆயிரத்து 566 ஆகவும் வாக்கு சதவீதம் 3 புள்ளி 21 ஆகவும் இருந்தது.
2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்ற போதும், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிரான அலை அதிகமாக இருந்ததால், 4 சதவீத வாக்குகளை கூட பெற முடியவில்லை.

பத்தாண்டு கால பாஜக ஆட்சிக்குப் பிறகு பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலை பாஜக எதிர்கொள்ளும் இன்றைய தேதியில் அண்ணாமலையின் தலைமையை ஏற்று தேர்தலை சந்திப்பதற்கு, தமிழகத்தில் செல்வாக்கு மிகுந்த எந்தவொரு அரசியல் கட்சியும் பாஜக கூட்டணியில் இணையவதற்கு இன்றைய தேதி வரை ஆர்வமே காட்டவில்லை.

தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருந்து வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இரண்டொரு நாளில் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்து விடும் என்று அரசியல் திறனாய்வாளர்கள் தகவல் தெரிவித்து வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் 5 சதவீத வாக்குகள் கொண்ட கட்சி இணையவில்லை என்றாலும் கூட, கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு தான் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக தான் அதிக எம்எல்ஏக்களை கைப்பற்றியது. அதுவும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக 9 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தயவால் ஒரு தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் செல்வாக்கு இன்றைய தேதியிலும் கூட குறைந்துவிடவில்லை. கோவை மாவட்டம் மட்டுமின்றி நீலகிரி மாவட்டமும் எஸ்.பி.வேலுமணி கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. தனிப்பட்ட முறையில் தமிழக பாஜக தலைவர்களுடனும், டெல்லி பாஜக மேலிட தலைவர்களுடனும் எஸ்.பி.வேலுமணி நெருக்கம் காட்டி வந்தாலும் கூட, தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரமாக உள்ள கோவை மாவட்டத்தில் அதிமுக பலவீனமடைவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் எஸ்.பி.வேலுமணி என்கிறார்கள் கோவை மாவட்ட அதிமுக மூத்த தலைவர்கள்.

அதேபோல, பொள்ளாச்சி எம்பி தொகுதியிலும் 2019 ல் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். 2019 ல் நீலகிரியில் திமுக முன்னாள் அமைச்சர் ஏ.ராஜா 2 லட்சத்து 5 ஆயிரத்து 823 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இதேபோலதான், திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியும் 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

அண்ணாமலை திட்டவட்டமாக கூறும் நீலகிரி, பொள்ளாச்சி, கோவை, ஈரோடு ஆகிய 4 எம்பி தொகுதிகளிலும் அதிமுகவும், திமுகவும் தான் செல்வாக்கு மிகுந்த கட்சிகளாக இன்றைக்கும் இருந்து வருகிறது. ஆளும்கட்சியான திமுக மீதான அதிருப்தி அலை நான்கு தொகுதிகளிலும் அதிகமாக இருந்தாலும் கூட திமுக கூட்டணி வேண்டாம் என்று வாக்காளர்கள் தீர்மானித்தால், அடுத்த வாய்ப்பாக அதிமுகவைதான் தேர்வு செய்வார்கள். ஒரு எம்பி தொகுதியில் 10 லட்சம் வாக்குகள் இருக்கும் பட்சத்தில், அதில் சரிபாதியான வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள் என்பதெல்லாம், சாத்தியமான ஒன்றே அல்ல என்கிறார்கள் பிரபல கருத்து கணிப்பு நிபுணர்கள்.

தமிழ்நாடு பாஜகவுக்கு அண்ணாமலை தலைவராக பொறுப்பு ஏற்ற இரண்டே வருடங்களில் பாஜகவுக்கு அபரிதமான செல்வாக்கு கூடிவிட்டது என்று கடந்த ஆறு மாதமாக சாணக்யா டிவி நிறுவனர் பாண்டே திரும்ப திரும்ப கூறி வந்தார். பாண்டேவின்பல்லவியைதான் இன்றைக்கு தந்தி டிவியும், புதிய தலைமுறை டிவியும் 18 சதவீதத்திற்கு மேல் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கிறது. 5,6 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தனியார் நிறுவனம் எடுத்த கருத்து கணிப்புகளை அடிப்படையாக வைத்து பரப்புரை செய்தி வருகின்றன.

அண்ணாமலையின் திட்டவட்டமான பேச்சு, பாண்டே, மாரிதாஸ் உள்பட பிரபல யூ டியூப்பர்களின் தொடர்ச்சியான பரப்புரை, பிரபல தொலைக்காட்சிகளான தந்தி டிவியும் புதிய தலைமுறை டிவியும் கருத்து கணிப்புகளை வெளிட்டு, தமிழ்நாட்டில் 5,6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று கூறுவதையும், பிரதமர் மோடி, நாடு முழுவதிலும் பாஜக 370 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று உரக்க கூறி வருவதையும் ஒப்பிட்டால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய பாஜக அரசு, மிகப்பெரிய மாயாஜாலத்தை நிறைவேற்றப் போகும் மறைமுக திட்டத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா என்று சந்தேகம் எழுப்புகிறார்கள் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர்கள்.

அதிநவீன தொழில் நுட்பத்தில் வியக்க தகுந்த மாற்றங்களை அடிக்கடி ஏற்படுத்தி வரும், உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் கூட இன்றைக்கும் வாக்குச்சீட்களை பயன்படுத்தி தான் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், இந்தியாவில் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யலாம் என்று உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர்கள், புகழ் மிகுந்த அறிவியலாளர்கள் செய்முறை விளக்கம் மூலமே, மின்னணு எந்திரங்கள் நம்பத்தகுந்தது இல்லை என்று நிரூபித்திருக்கிறார்கள்.

பத்தாண்டு கால மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் மௌனமான முறையில் உருவாகியிருக்கும் அதிருப்தி அலை, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள். 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான வலுவான கூட்டணி அமையாத போதும், 2024 தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி வலுவாகி வருகிறது. பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு என கிட்டதட்ட 200 எம்பி தொகுதிகளில் ஆளும்கட்சியான பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியும் வலுவாகவே உள்ளது.

இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்திய தீர வேண்டும் என்று சபதம் எடுத்திருக்கும் நிலையில், மூன்றாவது முறையாகவும் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற தீவிரத்துடன் இருந்து வரும் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தேர்தல் ஆணையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இவிஎம் எனும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்வதற்கு கூட அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள் பிரபல ஜனநாயகவாதிகள்.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் எண்ணவோட்டத்தை நன்கு அறிந்து வைத்திருக்கும் அண்ணாமலை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தமிழ்நாட்டில் 5 இடங்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு ரகசியமாக திட்டம் போட்டுவிட்டாரா என்ற அச்சத்துடன் கேள்வி கேட்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித்தலைவர்கள். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக நாடு முழுவதும் பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என்பதும் தமிழகத்தில் 5 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று அண்ணாமலை கூறிக் கொண்டிருப்பதும் வாக்காளர்களை மூளை சலவை செய்யும் செயல் என்று எச்சரிக்கிறார்கள் பகுத்தறிவுவாதிகள். பாஜக தலைவர்களின் தில்லுமுல்லுகளுக்கு திராவிட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலியாகிவிடக் கூடாது என்று உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கிறார்கள்.

அகில இந்திய பாஜக தலைமை, தமிழ்நாடு பாஜக தலைமையின் ரகசிய திட்டமாக இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் மீது ஆளும்கட்சியான திமுக தலைமையும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் திராவிட சித்தாந்தவாதிகள், எந்த விலை கொடுத்தாவது பாஜகவின் மோசடி திட்டத்தை உடைத்து எறிவதற்கு திராவிட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எச்சரிகை செய்து, நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போதும் வாக்கு எண்ணிக்கையின் போதும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மன்றாடுகிறார்கள்.

நன்றி நண்பர்களே மற்றொரு சிறப்பு செய்தி தொகுப்புடன் மீண்டும் சந்திக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *