Fri. Apr 19th, 2024

தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் 35 வது அமைச்சராக பதவியேற்று இருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்லரசு தனது மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

டிசம்பர் 14 ஆம் தேதி காலை 9.30 மணியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஒவ்வொரு அசைவும் விமர்சனத்திற்கு உள்ளாகும்.

திமுக இளைஞரணி செயலாளராக, சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் வலம் வந்தபோது அவர் மீதான பார்வை என்பது அரசியல் சார்ந்து விமர்சிக்கப்பட்டது.

இனிவரும் நாட்களில் அமைச்சருக்குரிய கண்ணியத்தோடு நடந்து கொள்கிறாரா… பேசுகிறாரா என்பதைப் பற்றிதான் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறார்.

தனி மனித வாழ்விலோ, பொது வாழ்க்கையிலோ பாராட்டுகளை எளிதாக புறம்தள்ளிவிட்டு விமர்சனங்களை ஏற்று தன்னை செதுக்கிக் கொள்கிற மனவலிமையுடையவர்களே காலத்தால் போற்றப்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டிய நேரம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இப்போது அமைந்திருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கப் போகிறார் என்ற செய்தி பரவலாக பகிரப்பட்ட போது, பாராட்டுகளை விட அதிகமாக விமர்சனங்கள் தான் புயல் போல மிரட்டிக் கொண்டிருக்கிறது.

விமர்சனங்களின் பின்னணியில் இருக்கும் நோக்கத்தினையும், அதனை எதிர்கொள்கிற மனிதர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உதயநிதி ஸ்டாலினின் கடந்த கால உறுதிமொழிகளை எல்லாம் இப்போது நினைவுக்கூர்ந்து, அவருக்கு எதிராக விமர்சனம் செய்வோரின் எண்ணிக்கைகள் பொது தளத்திலும், சமூக ஊடகங்களிலும் அதிகமாகவே இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்களும் மத்திய பாஜக அரசில் மூத்த அமைச்சர்களாக உள்ளவர்களின் வாரிசுகளுக்கு அரசியலில் கிடைத்து வரும் முக்கியத்துவத்தையும் பட்டியலிட்டு சமூக ஊடகங்களில் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

எதிர்ப்பு மற்றும் ஆதரவு என்ற இருபிரிவினருக்கு இடையே நடுநிலையில் நின்று கருத்து தெரிவிக்க வேண்டிய ஊடகவியலாளர்களும் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்தும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் கடந்து இன்றைக்கு அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், தனக்கு வழங்கப்பட்டிருப்பது பதவியல்ல… வழங்கப்பட்டிருப்பது பொறுப்பு என்ற அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு சேவையாற்றுவேன் என்று அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு தனது நிலையை தெளிவுப்படுத்தியிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

உண்மையாக அக்கறையோடு வாழ்த்துகளை தெரிவிக்கும் ஒன்றிரண்டு ஆன்றோர்களின் கருத்துகளில், கவிப்பேரரசு வைரமுத்துவின் வாழ்த்துகள், ஆழ்ந்த பொருள் பதிந்ததாக வெளிப்பட்டிருக்கிறது.

கவிஞரின் வாழ்த்துகளோடு, தமிழகத்தில் இருந்து வெளியேறி இரண்டு மாநிலங்களில் ஆளுநராக பதவி வகித்து வரும் தமிழிசை சௌந்தரராஜனின் விமர்சனத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு வார்த்தையிலும் எவ்வளவு வன்மம் மற்றும் அரசியல் குரோதம் இருப்பதை சாதாரண மனிதர்கள் கூட உணர்ந்து கொள்வார்கள்.

ஆளுநர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதுவும் தமிழகத்தை கடந்த பிற மாநிலங்களில் ஆளுநராக பொறுப்பு ஏற்று இருப்பவர் எவ்வளவு கண்ணியத்தோடு வார்த்தைகளை உதிர்க்க வேண்டும். எவ்வளவு உயர்ந்திற்கு சென்றாலும் கூட பிறப்பின் வழியாக எஞ்சியிருக்கும் குணத்தின் அடிப்படையில்தான் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள் என்ற விமர்சனத்திற்கு ஆளுநர் தமிழிசையும் விதிவிலக்கல்ல என்பதை உதயநிதி ஸ்டாலின் குறித்து அவரது விமர்சனம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

வாரிசு அரசியலை முன்னிறுத்தும் திராவிட மாடல் ஆட்சியில்தான், சோற்றுக்கே வழியில்லாத காங்கிரஸ் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான குமரி அனந்தனுக்கு இலவச வீட்டு வழங்கி, அவரின் தியாகத்தை போற்றியிருக்கிறது.

கொஞ்சமாவது சூடு, சொரணை இருந்ததால், திராவிட மாடல் ஆட்சியிடம் கையேந்தும் அவலநிலைக்குச் சென்ற தனது தந்தையை ஆளுநர் தமிழிசை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்று அனல் கக்கும் வார்த்தைகளை உதிர்க்கிறார்கள் திராவிட சித்தாந்தவாதிகள்.

காங்கிரஸின் மூத்த தலைவரான குமரி அனந்தனின் பொது வாழ்க்கைக்கே களங்கம் கற்பிக்கும் வகையில் திராவிட சித்தாந்தவாதிகள் உதிர்க்கும் விமர்சனம், கடுமையாக இருக்கிறது.

1996ல் தமிழக காங்கிரஸில், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்வந்த போது, அதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனார் தலைமையில் பெரும்பான்மையான காங்கிரஸார், தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கினார்கள்.

தமிழக காங்கிரஸே ஒட்டுமொத்த அழிந்த போதும், அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை என்று அறிவித்தார் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ். அப்போது காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் குமரி அனந்தன். அப்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து வசூலித்த வேட்புமனுக் கட்டணம் ஒரு கோடி ரூபாய் பணம் பெரும்பாலானவர்களுக்கு திருப்பி தரப்படவேயில்லை என்ற குற்றச்சாட்டு இன்றைக்கும் கூட உயிரோடுதான் இருக்கிறது என்பதை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நினைவில் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள் திராவிட சித்தாந்தவாதிகள்.

விமர்சனம் என்பது இருமுனை கத்தி என்பதை அரசியலில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்ல, பொது வாழ்வில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருபவர்களும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதுதான் திராவிட சித்தாந்தவாதிகளின் கூற்றில் மறைந்திருக்கும் அறிவுரையாக இருக்கிறது.

நிறைவாக, விளையாட்டுப் பிள்ளை., திரைப்படத்திற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்த நல்லரசு இணையதளம்தான், ஒட்டுமொத்த திமுகவில் மூத்த தலைவர்களின் வாரிசுகள் இரண்டாம் கட்டமாக அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அமைச்சராக பதவியேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலினை முழு மனதாக பாராட்டுகிறது.

இதே வேகத்தில் விமர்சனங்களையும் நல்லரசு முன் வைக்க ஒருபோதும் தயங்காது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.