தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க அரசு அதிகாரிகள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
அவர்களை வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆய்வுகளை மேற்கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்தி வருகிறார். விவசாயிகள், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் துயரங்களை கேட்டறிவதுடன், அவர்களின் துயர் துடைக்கும் வகையில் நிவாரண உதவிகளையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த மாதத்தின் இறுதியில் இருந்து முதுகுவலியால் அவதிப்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது உடல்வலியையும் பொருட்படுத்தாமல் வெள்ளப் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு வருகிறார்.
இப்படிபட்ட இக்கட்டான நேரத்தில் முதல்வருக்கு உறுதுணையாகவும், அவரின் சுமையை குறைப்பவராக இருக்க வேண்டிய மாநில திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள், திமுகவுக்கு மட்டுமின்றி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அவப்பெயரைத் தேடி தரும் வகையில் இருப்பதாக நொந்து கொள்கிறார்கள் திராவிட பற்றாளர்கள்.
தனியார் ஊடகத்திற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த நேர்காணலை சுட்டிக்காட்டி குமறும் அவர்கள், தமிழ்நாட்டில் மழை பெய்துக் கொண்டிருப்பதே தெரியாது என்று கூறுகிறார் என்றால் அவர் எந்த உலகத்தில் இருந்து கொண்டிருக்கிறார் என்று ஆவேசமாக பொங்குகிறார்கள்.
திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை அவமானப்படுத்தும் வகையில், அடுத்த தலைவர், அடுத்த முதல்வர் என்று உதயநிதி ஸ்டாலினை கடந்த பல ஆண்டுகளாக இளைஞரணி நிர்வாகிகள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், மிகுந்த பக்குவத்துடன் உதயநிதி நடந்து கொள்ள வேண்டாமா? என்று கேள்வி எழுப்புவதுடன், அவரது தொகுதியான சேப்பாக்கத்தில் எங்குமே தண்ணீர் தேங்கவில்லை என்று காமெடி செய்வதும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு மழை நீர் தேங்கியிருந்ததும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள்ளேயே வெள்ளம் புகுந்ததையும் ஊடகங்கள் திரும்ப திரும்ப ஒளிபரப்பியதை எல்லாம் உதயநிதி பார்வைக்கே போகவில்லைப் போல என்று கூறி கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இன்றைய தேதியில் உண்மையாக எதிர்க்கட்சியான அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆளும்கட்சியான திமுகவின் குற்றம் குறைகளை கண்கொத்தி பாம்பாக பார்த்து, துணிச்சலாக விமர்ச்சித்து கொண்டிருக்கும் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு, திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் அன்றாட செயல்பாடுகளே கருப்பொருளாக அமைந்துக் கொண்டிருக்கிறது.
திமுக முன்னணி நிர்வாகிகளின் அநாகரிக நடவடிக்கைகளால் தன்னால் நிம்மதியாக தூங்கவே முடியவில்லை என்று அக்கட்சியின் பொதுக்குழுவில் மனம் நொந்து பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதற்குப் பிறகும் கூட அவருக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்ட சிலரின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. தன்னைச் சுற்றி இருப்பவர்களால் மட்டுமின்றி, அவரது புதல்வரான உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளும் கூட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திமுகவுக்கும் மிகப்பெரிய அவப்பெயரை தேடித் தரும் வகையில்தான் இருந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் திமுக ஆதரவு நிலையில் உள்ள மூத்த ஊடகவியலாளர்கள் சிலர்.
“பகல், இரவு பாராமல் ஓடிக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சற்று இளைப்பாறும் வகையில் லவ் டூடே திரைப்படம் பார்த்ததில் ஒன்றும் தவறு இல்லை. அவர் குடும்பத்தினரோடு படம் பார்த்தது பற்றி பொதுவெளியில் அதிகமாக பேசப்படாத போது, அவரது புதல்வரான உதயநிதி ஸ்டாலின், அந்த விவகாரத்தை பெருமிதமாக ஊடக நேர்காணலில் பகிர்ந்து கொண்டதை பார்க்கும் போது, திமுகவுக்கு அஸ்திவாரமாக இருக்கும் இளைஞரணிக்கு செயலாளராக பொறுப்பு ஏற்ற பிறகும், சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றுக் கொண்டிருக்கும் போதும் கூட பக்குவம் இல்லாமல், விளையாட்டுப் பிள்ளை போலதான் இருந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது” என்கிறார்கள்.
“இன்னும் சில ஆண்டுகளில் அரசுப் பணியில் இருந்து ஓய்வுப் பெறப் போகிற, 55 வயதுக்கு மேல் நெருங்கிவிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளான சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகத்துறையின் செயலாளரான கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஷிவ்தாஸ் மீனா, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் கடந்த பல மாதங்களாக சென்னையில் மழைநீர் வடிகால் பணியை மேம்படுத்துவதில் பகல், இரவு பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும், ககன் தீப் சிங் பேடி, மாநகரின் பல பகுதிகளுக்கு பல இரவுகள் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். அரசு உயரதிகாரிகளின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துவதுடன் மட்டுமின்றி அவர்களின் அனுபவங்களை நேரில் பார்த்து அறிந்து கொள்ளும் அக்கறையுடனாவது உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ செயல்பட்டிருக்கலாம்.
இதுபோன்ற வாய்ப்பு வேறு எந்தவொரு திமுக எம்எல்ஏவுக்கும் எளிதாக கிடைத்து விடுமா? முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இணையாக மதிப்பளித்து திமுக நிர்வாகிகளின் இல்லத் திருமணங்களை நடத்தி வைப்பதற்கு உதயநிதி ஸ்டாலினை மிகுந்த உள்ளன்போடு உடன்பிறப்புகள் அழைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திமுகவின் அடுத்த முகவரியாக பார்க்கப்படும் உதயநிதி ஸ்டாலின் திரைத்துறைக்கு மட்டுமே அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பது எந்தவகையில் நியாயம்?”என்று மிகவும் மனம் நொந்து பேசுகிறார் இளம் திமுக எம்எல்ஏ ஒருவர்.
நிறைவாக, திருக்குறள் சுட்டிக்காட்டும் அறநெறிக்கு ஏற்ப, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இனிவரும் நாட்களிலாவது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் முன்னணி நிர்வாகிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்…….
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்….
திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எட்டுமா..?
[…] […]