Wed. Apr 24th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்….

திமுக தலைவர்- முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான விமர்சனத்திற்காகவோ, முதல்முறையாக ஆட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டிலோ சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவில்லை.

நீதித்துறையை விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், கடந்த வாரமே விடுதலையாக வேண்டிய நேரத்தில், சவுக்கு சங்கருக்கு எதிராக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வர முடியாத அளவிற்கு பழிவாங்கும் நோக்கத்துடனேயே திமுக அரசு செயல்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்திருக்கிறது.

சவுக்கு சங்கர் மீது முந்தைய அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில்தான் சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவருக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கே கொண்டு செல்லப்பட்டிருக்காது என்றும் அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இப்படிபட்ட பின்னணியில், முதல்வரின் மருமகன் சபரீசனைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்ததன் காரணமாகவே சவுக்கு சங்கரை விடுதலை செய்யாமல் பழிவாங்கிக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா.

சங்கர் அளித்த நேர்காணலின் சிறு பகுதியையும் அவரது முகநூலில் பகிர்ந்திருக்கிறார்.

https://fb.watch/gQcGps4AAe/

சவுக்கு சங்கரின் நேர்காணல்கள் அனைத்தையும் முழுமையாக நான் பார்த்தது இல்லை. ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயிலில் சபரீசன் யாக வேள்வியில் கலந்து கொண்டது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோக்களில், சபரீசனின் லண்டன் நண்பர், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது விழுப்புரம் மற்றும் சேலம் ஆகிய இரு மாவட்டங்களில் திமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் அவர்தான் முடிவு செய்தார். அதற்காக கோடிக்கணக்கில் பணம் கைமாறியது என்றும் கூறியிருந்தார் சவுக்கு சங்கர்.

சேலம் மாவட்டம் எனது சொந்த மாவட்டம் என்பதால், அங்குள்ள 11 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் பின்னணியும் எனக்கு முழுமையாக தெரியும். சவுக்கு குற்றம் சாட்டியதைப் போல, வேட்பாளர்கள் தேர்வில் லண்டன் நண்பருக்கு எள்ளளவும் தொடர்பில்லை. இங்கு சுட்டிக்காட்டுவதைப் போல, அவரின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக ஐடி விங்க் எந்தவொரு விளக்கத்தையும் முன்வைக்காததால், சவுக்கின் பல தகவல்கள், உண்மையென நம்பும் வகையில் அமைந்துவிடுகிறது.

அதேபோலதான், விழுப்புரம் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் லண்டன் நண்பருக்கும் எந்தவொரு தொடபும் இல்லை. இப்படி, சவுக்கு சங்கரின் பல குற்றச்சாட்டுகளின் உண்மையை தேடினால் அதிர்ச்சிதான் ஏற்படும்.

இருப்பினும் சமூக ஊடகங்களில் சவுக்கு சங்கருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. திமுகவை விமர்சனம் செய்வதை விட பலமடங்கு மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் படுகேவலமாக விமர்சனம் செய்து வந்தவர் சவுக்கு சங்கர்.

பின்விளைவுகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல் சகட்டுமேனிக்கு பேசி வந்தவர் தான் சவுக்கு சங்கர் என்று கூறும் ஊடகவியலாளர்கள் கூட, உச்சநீதிமன்றம் தடை விதித்த பிறகும் அவர் மீது பழைய வழக்குகளை பாய்ச்சுவது ஏற்புடையதாக இருக்காது என்கிறார்கள். சிறை வாசத்தை தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தான் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார் காலம் காலமாக களத்திலேயே நின்று கொண்டிருக்கும் மூத்த ஊடகவியலாளர் சபீர் அஹம்மது. அவர் முன்வைக்கும் வாதமும் அதிர்ச்சிக்குரியதாகவே இருக்கிறது.

சவுக்கு சங்கர் மீது குண்டர் பாய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார் சபீர்.

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தால், இதுவரை மௌனமாக இருப்பவர்கள் கூட திமுக ஆட்சியின் பழிவாங்கும் போக்கிற்கு எதிராக கிளர்ந்தெழுந்து போர்க்குரல் எழுப்புவார்கள் என்பதை திமுக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

சவுக்கு சங்கர் மீது இத்தனை கடுமை காட்டும் திமுக அரசு, தமிழகத்தை தவிர இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் எல்லாம் தேனாறு, பாலாறு ஓடுவதைப் போலவும் திராவிட ஆட்சியாளர்களால்தான் தமிழகம் புதைக் குழிக்குள் சென்று கொண்டிருப்பதைப் போல தொடர்ந்து பேசி வருவதுடன், திராவிட அரசியல் மண்ணோடு மண்ணாக புதைந்து போக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு முழங்கிக் கொண்டிருக்கிறாரே மாரிதாஸ்.. அவர் மீது மட்டும் திமுக அரசு கரிசனம் காட்டுவது ஏன்? என்கிறார்கள் சங்கரின் நலம் விரும்பிகள்.

சவுக்கு சங்கரை விட பன்மடங்கு சாபத்தை திமுக ஆட்சி மீது வெளியிட்டு வருபவர், மாரிதாஸ் என்ற உரையாடல், அரசியல், பொது தளங்களில் மட்டுமல்ல, தலைமைச் செயலகத்திலும் எதிரொலிக்கிறது. முதல்வரின் குடும்பத்தினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திமுக ஆட்சியுமே கொள்ளை அடிக்கிறது என்று கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறாரே மாரிதாஸ்.. இதற்கெல்லாம் ஆட்சியாளர்கள் பதில் சொல்வார்களா? என்று கேட்பவர்கள் நடுநிலையாளர்கள்.

மேல் மட்டத்தில் மட்டுமல்ல கீழ் மட்டத்திலும் ஊழலும், லஞ்சமும் தலை விரித்தாடுகிறது. மக்களிடம் கொள்ளையடிக்கப்படும் லஞ்சப் பணம் முதல்வர் குடும்பத்திற்கே நேரடியாக செல்கிறது என்றெல்லாம் எந்தவிதமான ஆதாரங்களையும் முன் வைக்காமல் படுபயங்கரமான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் மாரிதாஸ்.

பத்திரப்பதிவுத் துறை ஊழல் குறித்து மாரிதாஸ் முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியிடம் பதில் இருக்கிறதா?

லஞ்சம் வாங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை பழிவாங்கும் நோக்கில் இடம் மாற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்துகிறாரே, மாரிதாஸ்.

காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த குற்றச்சாட்டு குறித்து குறைந்தபட்சம் விசாரணை நடத்தி உண்மையை வெளி கொண்டு வரும் வகையில் உத்தரவு பிறப்பிப்பாரா?

முந்தைய திமுக ஆட்சியையும், அப்போதைய முதல்வர் – மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி குறித்தும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார் மாரிதாஸ்.. இவையெல்லாம் அவதூறு கணக்கில் வராதா? இல்லையெனில் அவர் முன்வைத்திருக்கிற குற்றச்சாட்டுகளை எல்லாம் திமுக அரசும், முதல்வரும், அவரது குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்கிறார்களா?

இல்லையென்றால், மாரிதாஸின் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அவதூறு பரப்பும் வகையில்தான் இருக்கிறது என்று கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்து திமுக அரசு சிறையில் அடைக்க வேண்டாமா? என்றும் கேள்விகளை எழுப்புகிறார்கள் திமுக அனுதாபிகள்.

“சவுக்கு சங்கருக்கு எதிராக பதியபட்ட வழக்குகளை எல்லாம் தூசு தட்டியெடுத்து, சிறையிலேயே தொடர்ந்து அடைத்து வைத்திருந்தாலும் அவருக்காக யாரும் களத்திற்கு வந்து போராட மாட்டார்கள். ஆனால், மாரிதாஸை கைது செய்து சிறையில் அடைக்க முயன்றால், பாஜகவினர் பொங்கி எழுவார்கள் என்ற அச்சவுணர்வினால்தான் திமுக அரசு மௌனம் காக்கிறறது”என்கிறார்கள் மாரிதாஸுக்கு நெருக்கமான பாஜக நிர்வாகிகள் கிண்டலாக..

மாரிதாஸின் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிற திமுக அரசும், தமிழக காவல்துறையும், சவுக்கு சங்கரை மட்டும் குறி வைத்து பழிவாங்குவது என்பது ஜனநாயக மரபுக்கு எதிரானது. அறத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

ஆட்சியாளர்களாக இருந்தாலும் அரசு அதிகாரிகளாக இருந்தாலும் அநீதிக்கு எதிரான பாதையை தேர்ந்தெடுத்தால், அவர்களுக்கு எதிரான விமர்சனங்கள் பன்மடங்கு, பல தளங்களில் வீரியமாக எழுவதை தவிர்க்க முடியாது…தடுத்து நிறுத்தவும் முடியாது…

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.