Fri. Mar 29th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்….

அமித்ஷாவை போய் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதைப் பார்த்து, ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இப்படியொரு தகவல் கிடைத்த நேரத்தில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் நல்லரசுவை இன்று காலை தொடர்புக் கொண்டு தனது மனதில் எழுந்திருக்கும் உற்சாகத்தை பகிர்ந்து கொண்டார். 30 நிமிடங்களுக்கு மேலாக பேசியதை சுருக்கி அப்படியே அவரது வாக்குமூலமாக தருகிறோம்…

“அதிமுகவை உருவாக்கிய மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், அவரது வழியில் அதிமுகவை தேசிய பார்வையில் அசைக்க முடியாத சக்தியாக வளர்த்தெடுத்த மறைந்த புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் காட்டிய வழியில் இருந்து அதிமுக தடம் மாறிச் செல்கிறதே என்ற வேதனை என்னைப் போன்ற லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

அம்மா மறைவுக்குப் பிறகு இரட்டை தலைமையில் அதிமுகவின் நான்காண்டு கால ஆட்சி செம்மையாக நடந்தாலும் கூட, 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஓ.பி.எஸ். ஸுக்கும் இ.பி.எஸ்.ஸுக்கும் இடையே ஒருமித்த உணர்வு இல்லாததால், அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டது ஒரு வகையில் நிம்மதியாகதான் இருக்கிறது.

அன்றைக்கு அதிமுக தோல்விக்கு இபிஎஸ்ஸே காரணம் என்று தென் மாவட்ட அதிமுகவின் குரலாக ஓங்கி ஒலிக்க வைக்கப்பட்டது. இபிஎஸ்ஸின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுரையை மீறி அமமுகவை கூட்டணியில் சேர்க்காதது மட்டுமின்றி வன்னியருக்கு வழங்கப்பட்ட தனி உள்ஒதுக்கீடு விவகாரத்தையும் பரப்புரை ஆக்கினார்கள். இதன் காரணமாக இபிஎஸ்ஸுக்கு எதிராக தென் மாவட்டங்களில் எதிர்ப்பலை உருவானது.

இதன் காரணமாகவே தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சாதிகளில் ஒன்றான முக்குலத்து மக்கள், இபிஎஸ்ஸை விரோதியாக பார்க்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால், பாஜகவுடனான கூட்டணியை அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் ஒருவர் கூட விரும்பவில்லை என்பதை தெள்ளத்தெளிவாக உணர்ந்த பிறகும்கூட ஓபிஎஸ் தப்பித்தவறி ஒரு வார்த்தை கூட வெளிப்படுத்தாமல், இபிஎஸ்ஸுக்கு எதிரான பகைவுணர்வை மீண்டும் மீண்டும் அதிகரிக்கவே செய்து வந்தார்.

இன்றைக்கு இபிஎஸ்ஸுக்கு எதிராக கூறப்பட்ட இரண்டு விவகாரங்களும் முழுமையாக அடிபட்டு போய்விட்டன. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட தனி இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், தேவர், நாடார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட அனைத்து சமுதாயத்தினரையும் பாதிக்கும் வகையிலான பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஓபிஎஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தால் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடம் என்பதால், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை மட்டும் விடுத்து ஒதுங்கி கொண்டார். உண்மையிலேயே பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்திற்குச் சென்று தனது எதிர்ப்பை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அதிமுகவிற்கு மிகப்பெரிய வலிமை கிடைத்திருக்கும். இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் இரட்டை வேடம் போடுகிறாரா ? என்று தென் மாவட்ட அதிமுகவினரே கோபமாக கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.

தேவர் சமுதாயத்தின் ஆபத்பாந்தவர்களாக ஓபிஎஸ், டிடிவி தினகரன், வி.கே.சசிகலா ஆகியோரை முன்னிலைப்படுத்தும் நேரத்தில், மத்திய பாஜக அரசின் தகிடுதத்தங்களால் மூவர் அணியிடம் அதிமுக சேதாரம் இல்லாமல் ஒப்படைக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் இந்த மூவரும் ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா? என்ற கேள்வி அந்த சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக முன்னணி நிர்வாகிகளிடமும் இப்போது எழுந்திருக்கிறது.

மூவர் அணி மட்டுமல்ல, இபிஎஸ்ஸும் பாஜகவுக்கு பல்லக்கு தூக்குகிறாரே, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழியில் அதிமுக தனித்த இயக்கமாக நடை போடுவதற்கு வாய்ப்பே இல்லையா? என்று ஏங்கி தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பு மிகுந்த சந்தோஷத்தையும், நிம்மதியையும் தந்துள்ளது.

எனக்கு மட்டுமல்ல, என்னோடு தொடர்பு கொண்ட கிளைக்கழக, ஒன்றியக் கழக, மாவட்ட கழக அதிமுக நிர்வாகிகள், என்னங்க எடப்பாடியார், அமித்ஷாவை அசால்ட்டாக தூக்கியெறிந்துவிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் என்று கூட அமித்ஷாவை சொல்லவில்லை. அவரை சந்திக்க வேண்டிய அவசியமே இல்லை என்றுகூறிவிட்டார்.

கொங்கு மண்டலத்தை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகியோரை பாதுகாக்கும் வகையிலேயே மத்திய பாஜக அரசோடு இணக்கமாக இருக்கிறார். முந்தைய அதிமுக ஆட்சியில் சம்பாதித்த பணத்தை எல்லாம் காப்பாற்றவே பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் காவடி தூக்குகிறார் எடப்பாடியார் என்று நாம்தானே கிண்டல் அடித்தோம்.

இப்போது மத்திய பாஜக அரசு மீதான பயம் எடப்பாடியாருக்கு எப்படி போனது? அமித்ஷாவுக்கு எதிரான பேச்சை வைத்து எடப்பாடியார் சுயநலத்துடன் நடந்து கொள்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்கிறார்களே? என்றெல்லாம் என்னிடம் ஆதங்கத்துடன் கருத்துகளை தெரிவித்தார்கள் அதிமுக நிர்வாகிகள் பலர். அதே எண்ணம்தான் எனக்கும்.

ஒரு மாதத்திற்கு முன்பு யூ டியூப்பில் ஒரு வீடியோ பார்த்தேன். அதில் பேசிய துக்ளக் மூத்த நிருவர் ரமேஷ், இன்றைய எடப்பாடியாரின் முடிவை முன்கூட்டியே கணித்து ஆரூடம் போல ஒன்றை கூறியிருந்தார். அந்த ஆரூடம் உண்மையாகிவிடும் போல என்பது போலத்தான் எடப்பாடியாரின் பேட்டியும் அமைந்திருப்பதுதான் ஆச்சரியம்.

துக்ளக் மூத்த ஊடகவியலாளர் ரமேஷ்… நன்றி சமயம்.காம்…

ஓபிஎஸ் உள்ளிட்ட மூவரை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று பாஜக தலைமை அழுத்தம் கொடுத்தால், பாஜகவுடனான கூட்டணியைக் கூட உதறிவிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி என்று கூறியிருந்தார் துக்ளக் மூத்த நிருபர் ரமேஷ்..

அவரின் வாய்க்கு சர்க்கரையை அள்ளிதான் போட வேண்டும்.. அமித்ஷாவைப் பற்றி எடப்பாடியார் பேசிய வீடியோவை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. எடப்பாடியாரை தென் மாவட்ட அதிமுகவினரும் கொண்டாட தொடங்கிவிட்டார்கள். தென் மாவட்ட அதிமுகவினரிடம் இப்படியொரு மாற்றம், அதுவும் ஒருநாளில் ஏற்பட்டிருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.. அதற்கும் காரணம் இருக்கிறது.

எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொங்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மட்டும்தான் ஊழல் செய்தார்கள். தென் மாவட்டம், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் எல்லாம், ஊழலே செய்யவில்லை., பாவம். இபிஎஸ் தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்களாக தொடர்ந்தவர்கள் அனைவருமே, அம்மா காலத்து ஆட்சியைவிட அதிகளவு பணம் சம்பாதித்தார்கள் என்பதை கீழ்மட்ட தொண்டர்களே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

இன்றைக்கும்கூட கிராமங்கள், நகரங்கள் என்று வேறுபாடு இல்லாமல் இபிஎஸ் தலைமையிலான நான்காண்டு கால ஆட்சிப் பணிகளை, சாதனைகளை நினைவுக்கூர்ந்து நன்றியுடனேயே இருக்கிறார்கள். ஒரே ஒரு சாதனை போதுமே., மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் போட்டாரே இபிஎஸ். இன்றைக்கு அந்த சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான, எளிய கிராமத்து மாணவ, மாணவியர்கள் மருத்துவப் படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்களே..ஏழை குடும்பத்து வாரிசு மருத்துவர் என்பது சாதாரண விஷயமா., என்ன…

அதிமுகவில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு உள்ள ஒரே விருப்பம், எதிர்பார்ப்பு, பாஜக நிழலில் அதிமுக இருக்கக் கூடாது என்பதுதான். அடிமட்ட அதிமுக தொண்டர்களின் ஆதங்கத்தை காலம் தாழ்ந்து புரிந்து கொண்டுள்ள இபிஎஸ், பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்து அதிமுகவை மீட்க துணிந்து விட்டார் என்ற எண்ணமே எங்களுக்கு எல்லாம் மிகுந்த சந்தோஷத்தை தந்திருக்கிறது.

மத்திய பாஜக அரசை எதிர்த்தால், இபிஎஸ் மட்டுமின்றி அவருக்கு மிகமிக நெருக்கமான முன்னாள் கொங்கு அமைச்சர்களும் வருமான வரித்துறை சோதனை, வழக்கு, கைது, சிறை தண்டனையை அனுபவிப்பார்கள் என்று அதிமுகவின் மூத்த தலைவர்களே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சொந்த கட்சியினரின் எதிர்பார்பபை எல்லாம் உணர்ந்திருந்தும் கூட, அவர்களின் கனவிலும் இடியை இறக்கியதைப் போல, பாஜகவின் பிடியில் இருந்து அதிமுகவை மீட்க தயாராகிவிட்டார், இபிஎஸ். உண்மையிலேயே தில்லான தலைவர்தான் இபிஎஸ் என்ற உணர்வு நேற்று முதல் எழுந்துவிட்டது.

இன்றைய தேதியில் நாடாளுமன்றத் தேர்தல் அதிமுகவுக்கு முக்கியம் கிடையாது. 2026 ல் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல்தான் வாழ்வா, சாவா போராட்டம். எம்.பி. தேர்தலில் பாஜக சொல்கிறபடி ஆடினால், எதிர்காலத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று ஒரு பேச்சுக்குக் கூடச் சொல்ல முடியாது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து எடப்பாடியார் முன்னெடுக்கும் அரசியல் யுக்திகள் உண்மையிலேயே அதிமுகவுக்கு மறுமலர்ச்சியாகதான் இருக்கும். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் ஆன்மாக்களும் மகிழ்ச்சியடையும். இருவரின் ஆசிகளும் எடப்பாடியாருக்கு கிடைக்கும்.

பிரதமர் மோடியை எதிர்த்தோ, அமித்ஷாவை எதிர்த்தோ, ஓபிஎஸ்ஸால் ஒரு வார்த்தைக் கூட பேச முடியாது.. டிடிவி தினகரனும் விகே சசிகலாவும் கூட மத்திய பாஜக அரசைக் கண்டு பயந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அதிமுகவுக்கு உள்ள ஒரே ஆபத்பாந்தவனாக இபிஎஸ்தான் கண்களுக்கு தெரிகிறார்.

அச்சம் என்பது மடமையடா..

அஞ்சாமை திராவிடர் உடமையடா…

ஆறிலும் சாவு… நூறிலும் சாவு… தாயகம் காப்பது கடமையடா…

இப்படிபட்ட உணர்வோடு அதிமுகவை வழிநடத்த வேண்டும் இபிஎஸ் என்பதுதான் எம்ஜிஆர் காலத்து அதிமுக தொண்டர்களின் ஒரே எண்ணம் என்று ஒரே மூச்சில் கூறி பேச்சை நிறைவு செய்தார் தென்மாவட்ட அதிமுக நிர்வாகி…

இபிஎஸ்ஸின் ராஜதந்திரம் வெற்றிப் பெறுமா.. அதிமுக அடிமட்ட தொண்டர்களின் மனங்களை ஒட்டுமொத்தமாக வெல்வாரா? காலம்தான் பதில் சொல் வேணடும்…