Sun. Nov 24th, 2024

திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்த கலகலப்பை மேலும் மேலும் ஊதி பெரிதாக்கும் வகையில், கூட்டத்தினரை துள்ளி குதிக்கும் வகையில் யாருக்கும் பயப்படாமல் உட்கட்சி பிரச்னையைக் கூட உரக்கக் கூறுவதை வழக்கமாக வைத்திருப்பவர் துரைமுருகன். அவரின் கிண்டலான பேச்சு பல்வேறு நேரங்களில் விவகாரமாகிவிடுவதும் உண்டு….

அப்படிபட்ட அமைச்சர் துரைமுருகனுக்கே அவரது சொந்த மாவட்டத்தில் மூத்த நிர்வாகி ஒருவர் தண்ணீ காட்டி, வியர்வை சிந்த வைத்துவிட்டார் என்பதுதான் சுவாரஸ்யமான ஒன்று.

அதுவும் மேடையில் அமைச்சர் துரைமுருகன் அமர்ந்து கொண்டிருக்கும் போதே திமுக ஆட்சியில் ஒரு லட்சம் ரூபாய் ஒப்பந்த பணிக்கு 12 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள் என்று ஆவேசமாக கூறியதைக் கேட்டு, திமுக தொண்டர்கள் உற்சாகமாக கரவொலி எழுப்ப, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளுக்கு வியர்த்து விட்டது.

அப்படி என்னதான் நடந்தது…

வேலூர் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் காட்பாடி அருகே உள்ள  லத்தேரியில் நேற்று நடைபெற்றது. மத்திய மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் எம்பி, மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ, அமைச்சர் துரைமுருகனின் மகனும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர்ஆனந்த், திமுக எம்எல்ஏக்கள் வேலூர் கார்த்திகேயன், குடியாத்தம் அமலு விஜயன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் ஒன்றிய, நகர அளவில் செல்வாக்குமிக்க நிர்வாகிகளுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஜனநாயம் என்ற பெயரில் பேச அனுமதிக்கப்பட்டதுதான் மிகப்பெரிய தவறு என்பதை கூட்டத்திற்கு தலைமை வகித்தவரும், முன்னிலை வகித்தவர்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடந்து விட்டது.

மூத்த திமுக நிர்வாகியான அவரின் பெயர் பிகே புரம் ராஜேந்திரன். கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளர்.

ஒன்றிய திமுகவில் முக்கிய பதவி வகித்து வரும் ராஜேந்திரன், மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் துரைமுருகனுக்கே  பயப்படாமல், திமுக அரசில் முக்கிய பதவிகளில் அமர்ந்திருப்பவர்களின் எதேச்சதிகாரப் போக்கை தோலுரித்து தொங்கவிட்டார். அவரின் பேச்சை அரங்கத்தில் திரண்டிருந்த ஒட்டுமொத்த தொண்டர்களும் ஆரவாரமாக கைதட்டி வரவேற்றதால் ஆடிப்போனார் அமைச்சர் துரைமுருகன்.

தேர்தலில் கட்சி நிர்வாகிகள் வெற்றிப் பெற கடுமையாக உழைக்கிறோம்.

ஜெயிச்ச பிறகு காரில் ஏறி போய்விடுகிறார்கள்.

நாம் வண்டிக்கு பெட்ரோல் போட காசு இல்லாமல் திண்டாடுகிறோம்..

அவர்களுடைய வீட்டுக்குச் சென்றாலும் பார்க்க முடியவில்லை.

சென்னைக்கு சென்றாலும் கூட சாப்பிட்டியா என்று கேட்பதில்லை.

40 வருஷத்திற்கு மேலாக திமுகவில் இருக்கிறேன். என் மகனும் கட்சியில் தான் இருக்கிறார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பாக 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான கான்ட்ராக்ட் ஒன்றை தருவதாகவும், அதற்காக ஒரு லட்சத்திற்கு 12  சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்று கேட்கிறார்.

நான் எப்படி 12 சதவீதம் கமிஷன் தர முடியும்? திமுக ஆட்சியில் இல்லாத பத்து வருடத்தில் எனது சொந்த காசை எவ்வளவு செலவழித்து இருப்பேன் என குமறலோடு பி.கே. புரம் ராஜேந்திரன் பேச பேச, மேடையில் இருந்த அமைச்சர் துரைமுருகன் உள்பட அனைத்து பிரமுகர்களும் அரண்டு போனார்கள்.

துரைமுருகனுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சி..

கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சிலர் கூறியதுதான் அதிர்ச்சி ரகமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நேரம் அவரை பேச விட்டிருந்தால், அமைச்சர் துரைமுருகனுக்கும், அவரது மகன் கதிர் ஆனந்தத்திற்கும் தர்ம சங்கடமாக போய் இருக்கும். 12 சதவீதம் கமிஷனையும் அமைச்சர் துரைமுருகன்தான் கேட்க சொன்னார் என்று ஒரே போடாக போட்டு இருந்தாலும் அதிர்ச்சியடைவதற்கு இல்லை.

ஆனால், அமைச்சர் துரைமுருகனைப் பொறுத்தவரை வேலூர் மாவட்ட அளவிலான அரசு ஒப்பந்தங்களை திமுகவில் நீண்ட காலம் விசுவாசமாக இருக்கும் நிர்வாகிகளுக்குதான் வழங்க வேண்டும் என்பதில் கண்டிப்பு காட்டி வருபவர்.

அவரது பெயரைச் சொல்லி, கீழ்மட்ட நிர்வாகிகளிடம் முடிந்தவரை கொள்ளையடிப்பதற்கு அவருக்கு நெருக்கமான சில நிர்வாகிகளே மனசாட்சியே இல்லாமல் இருக்கிறார்கள். ஒன்றிரண்டு நிர்வாகிகள் கமிஷன் கேட்பதை வைத்து அமைச்சர் துரைமுருகனே கேட்பதைப் போல, செய்தி பரவுவதற்கும், அவதூறு பரப்புவதற்கும் அமைச்சருக்கும், கதிர் ஆனந்த் எம்பிக்கும் எதிரான திமுக நிர்வாகிகள் பலர் வேலூரிலேயே இருக்கிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் எந்தவொரு நிர்வாகி தப்பு செய்தாலும், முறைகேட்டில் ஈடுபட்டாலும் அவர் அமைச்சர் துரைமுருகனின் ஆள் என்று குற்றம் சுமத்துவதற்கு என்றே ஒரு கூட்டம் வேலூர் திமுகவில் இருந்து கொண்டிருக்கிறது.

அவர்களை எல்லாம் அடையாளம் கண்டு அமைச்சர் துரைமுருகன் ஒடுக்கவில்லை என்றால், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கூடியிருக்கும் பொது நிகழ்வில் ஒட்டுமொத்த திமுகவிற்கு ஏற்படும் அவமானத்தை தடுத்து நிறுத்த முடியாது என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

வேலூர் மாநகராட்சி திமுக மேயர் சுஜாதாவுக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை. சாதி ரீதியாக மேயரை பழிவாங்குகிறார்கள் என்றும் வேலூர் மாநகர செயலாளர் கார்த்திக் எம்எல்ஏவுக்கும், நந்தகுமார் எம்எல்ஏவுக்கும் இடையே மனஸ்தாபம் என்பதால், மத்திய மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வரும் நந்தகுமார் எம்எல்ஏ, கட்சி ரீதியான கூட்டங்களில் மேயர் சுஜாதாவிற்கு முக்கியத்துவம் வழங்காமல் தவிர்த்து வருகிறார் என்று குமறுகிறார்கள் வேலூர் நகர திமுக நிர்வாகிகள்… இது தனி பஞ்சாயத்து…