Thu. Nov 21st, 2024

தமிழ்நாட்டின் அடையாளமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தலைநகரான சென்னையை சிங்கப்பூருக்கு இணையாக, சிங்கார சென்னையாக்குவது என்பது முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாரக மந்திரம். 27 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மேயராக ஆட்சி புரிந்த போதே, அதற்காக கடுமையாக உழைத்தார். ஆனால், அப்போது அவரின் கனவு நிறைவேறவில்லை. 2009 முதல் 2011 வரை துணை முதல்வராக பணியாற்றிய போதும், சிங்கார சென்னை கனவு கைகூடவில்லை.

பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக அரியணையில் ஏறிய நிலையில், தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப் புரிந்து வரும் இந்த காலத்திலாவது சென்னை மாநகரம், சிங்கப்பூருக்கு இணையாக வளர்ச்சிப் பெற்ற நகராக மாற வேண்டும் என்பதுதான் சென்னை வாழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
மழைக்காலங்களில் மிதக்கும் சென்னை மாநகரை, அந்த ஆபத்தில் இருந்து மீட்டு, ஒரு சொட்டு மழைநீர் கூட பருவ காலங்களில் தேங்காத வகையில் மாற்றியமைக்கும் சவால் மிகுந்த பணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

முதல்வர் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்வுகளிலும் ஒரு சபதம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி காட்டுவோம் என்பதுதாகும். அதற்கு ஏற்ப அரசுத்துறை செயலாளர்களை விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருக்கும் அதேவேளையில் சென்னை மாநகருக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவித்து, பொலிவு மிகுந்த நகராக மாற்றியமைக்கும் பணிகளிலும் அரசு அதிகாரிகள் முழு மூச்சாக களமாடி வருகிறார்கள்.


நகரின் இதயப்பகுதிகளாக அடையாளப்படுத்தப்படும் இடங்கள் மட்டுமின்றி புறநகர்களிலும் பாதாள சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் கால்வாய், தார்ச்சாலை புனரமைப்பு என சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டுகின்றன. இதன் காரணமாக அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக இருந்தாலும் கூட, மழைக்கால ஆபத்தை உணர்ந்து வாகன ஓட்டுனர்கள் அன்றாடம் தாங்கள் அனுபவிக்கும் வேதனைகளை பொறுத்துக் கொண்டு ஒவ்வொரு நாளையும் கடந்து செல்கிறார்கள்.

இதேபோன்ற வேதனையுணர்வுடன்தான் பிராட்வே பேருந்து நிலையத்திற்கும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். கோயம்பேடு பேருந்து நிலையம் உருவாக்கப்பட்ட பிறகும் கூட நூற்றாண்டு கால பெருமை கொண்ட பிராட்வே பேருந்து நிலையத்தின் இன்றைய நிலை, அபலை பெண் போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.


பாரிமுனை வந்து விட்டால், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் மலிவு விலையில் வாங்கிச் செல்லலாம் என்பதே, பிராட்வே பேருந்து நிலையத்திற்கு தனி அந்தஸ்தை பெற்று தந்துகொண்டிருக்கிறது. அதைவிட முக்கியமாக, இங்கிருந்து மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்துப் பகுதிகளுக்கும் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், ஒரு மணிநேரத்திற்கு மேலாக பயணம் செய்து கூட பொதுமக்கள் பிராட்வே வந்து செல்கின்றனர்.
இப்படிபட்ட பேருந்து நிலையத்தின் இன்றைய நிலை ரத்தக்கண்ணீர் வடிக்கும் நிலையில்தான் உள்ளது.

தரைதளம் முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதுடன், திரும்பிய திசையெங்கும் குப்பைமேடாக காட்சியளிக்கிறது. சுகாதாரம் என்ன விலை என்று கேட்கும் நிலைதான் உள்ளது. பேருந்துக்களுக்காக காத்திருப்பவர்கள் கால்கடுக்க பல மணிநேரம் நின்று கொண்டிருக்கிறார்கள். மூதாட்டிகளின் நிலையோ பரிதாபம். சிறிதுநேரம் இளைப்பாறுவதற்கு கூட இருக்கை வசதிகள் இல்லை.
பாரம்பரியம் மிகுந்த பேருந்து நிலையத்தின் அவல நிலையை கண்டு சென்னையின் பூர்விக குடிகளே மனம் நொந்து போய்வுள்ளனர்.


பிராட்வே பேருந்து நிலையம் அருகே உள்ள சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாள்தோறும் வந்து செல்லுவோரும், ஒருவர் மீது ஒருவர் மோதிவிடாமல் பாதுகாப்பாக செல்வது என்பது சர்க்கஸ் வித்தைக்கு சமமான சவலாகவே இருந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் தலைநகராக திகழும் மாநகரை சிங்கார சென்னையாக மாற்றுவதற்கு முன்பாக, பிராட்வே பேருந்து நிலையம் போல பல்லாயிரக்கணக்கானோர் கூடும் இடங்களை சுகாதாரமாகவும், நவீன வசதிகள் கொண்ட இடமாக மாற்றுவதும் தான் தமிழக அரசின் தலையாய பணியாகும்.
சும்மா நகைக்சுவைக்காக சொல்வது என்றால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான கே.என்.நேரு, பல கோடி ரூபாய் செலவு செய்து வெளிநாட்டில் இருந்து அதிநவீன வசதிகள் கொண்ட சொகுசு காரை இறக்குமதி செய்தார் அல்லவா, அந்த காருக்கு செலவு செய்த தொகைக்கு சமமாக ரூபாய் செலவிட்டிருந்தால் கூட பிராட்வே பேருந்து நிலையத்தின் தரம் உயர்ந்து, தரை தளம் மட்டுமின்றி நடைமேடைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் பொலிவு பெற்றிருக்கும்.


ஆட்சியாளர்கள் தங்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்திக் கொள்வதைப் போல, மேலும் மேலும் தங்களை பொலிவு படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதைப் போல, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களையும் மேம்படுத்த, அனைத்து வசதிகளுடன் கூடிய மையமாக மாற்றினால், சென்னை வாழ் மக்கள் மட்டுமல்ல, பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து செல்லும் மக்களும் கூட நிம்மதியடைவார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினை மனதார பாராட்டுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சென்னையும், சிங்கப்பூருக்கு இணையான நகரமாக நவீனத்துவத்திற்கு மாறிவிடும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

2 thoughts on “சிங்காரச் சென்னையின் அவமானச் சின்னமா, பிராட்வே பேருந்து நிலையம்?”
  1. நல்லரசு ஆசிரியர் ஐயா அவர்களுக்கு என்ன ஆயிற்று? எந்த பதிவும் வெளிவரவில்லை..
    தங்களுக்கு உடல் நிலை ஏதாவது கோளாறா அல்லது பதிவு இட வேண்டாம் என்ற நோக்கத்தில் உள்ரா என்று தெரியவில்லை தங்கள் பதிவை எதிர்நோக்கி தினம் தினம் தங்கள் வலைப்பக்கத்தில் வருகை புரிந்து வரும் உங்கள் வாசகர்களுக்கு ஏமாற்றம் அளிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

    1. யூ டியூப் வாயிலாக செய்திகளை பகிர்வதற்கு முன்னேற்பாடுகள் செய்ததால் தாமதம் ஏற்பட்டு விட்டது.. இனிமேல் செய்திகள் நாள்தோறும் வெளியாகும்.. நன்றி????

Comments are closed.