Wed. May 8th, 2024

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற அனைத்து அரசு துறைச் செயலாளர்களுடனான 4 மணிநேர ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அரசு கடந்த 15 மாதங்களில் அறிவித்த மக்கள் நலன் சார்ந்த புதிய திட்டங்களை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், துறை வாரியான செயல்பாடுகள், திட்டங்கள் அமல்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் முதல்வர் தனது அலுவலகத்தில் அமர்ந்தவாறே அறிந்து கொள்ளும் வகையில் புதிதாக நிறுவப்பட்ட டேஸ் போர்டு எனும் மின்னணு இயந்திர தகவல் பலகையில் முழுமையான விவரங்கள் பதிவேற்றப்படாதது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இன்றைய நவீன உலகில் ஊர் பேர் தெரியாதவர்கள் கூட டிவிட்டர், ஃபேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களில் தங்களின் அன்றாட செயல்பாடுகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஆனால், அரசுத்துறையில் உயர் பொறுப்பில் உள்ள ஐஏஎஸ் உயரதிகாரிகளில் பெரும்பான்மையானோருக்கு சமூக ஊடகங்களான டிவிட்டர், ஃபேஸ் புக் போன்றவற்றில் துளியும் ஆர்வம் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.


முதல்வர் சுட்டிக்காட்டிய மற்றொரு குற்றச்சாட்டு, ஒரு துறையில் தலைமை அதிகாரி மற்றும் அவரின் கீழ் பணியாற்றும் கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர், துணை செயலாளர் உள்ளிட்ட அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுடன் கூட சுமூகமாக தொடர்போ, ஒருங்கிணைப்போ இல்லை என்பதும் ஆகும்.


வாட்ஸ் அப் போன் வந்தபிறகு ஒவ்வொரு தனி மனிதரின் செல்போனிலும் 20க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள் உள்ளன. உறவுகள், நண்பர்கள், அலுவலக உறுப்பினர்கள் என்ற தலைப்பில் உள்ள குழுக்களில், விருப்பப்பட்ட தகவல்களை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றால் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து விடுகிறார்கள்.
இந்த மாதிரியான நடைமுறையைக் கூட பெரும்பாலான துறை உயரதிகாரிகள் கடைப்பிடிப்பது இல்லை என்பதுதான் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. வசதி படைத்தவர்கள் வீட்டில் எல்லாம் கையடக்க டேப்லட் (Tablet ) பயன்பாட்டில் உள்ளது. வீடியோ காலில் பேசுவதற்கும், குடும்ப வரவு செலவுகளை சரிபார்க்கவும் கூட டேப்லட்டை பயன்படுத்த துவங்கி பல காலம் ஆகிவிட்டது.

ஆனால், தமிழ்நாட்டை இந்தியாவில் நெம்பர் 1 மாநிலமாக மாற்றுவதே தனது லட்சியம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முழங்கி வரும் நேரத்தில் நேற்று நடைபெற்ற அனைத்துத் துறை செயலாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் முதல் முதன்மைச் செயலாளர்கள் வரை ஒருவரிடம் கூட டேப்லட்டோ, மடிக்கணினியோ இல்லை. அனைவருமே காகித பயன்பாட்டில் உள்ள கோப்புகளை வைத்துதான் புள்ளி விவரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் உயர் அதிகாரியின் வயது ஏறத்தாழ 55 க்கு மேல் இருக்கும். முதன்மைச் செயலாளர்களான ஐஏஎஸ் அதிகாரிகளின் வயது 50 – 55 வயதுக்குள்ளாகதான் இருக்கும். மிகுந்த முதிர்ச்சியடைந்த இந்த வயதினருக்கு தொழில்நுட்பத்தை கையாள்வது என்பது கடினமான ஒன்றே இல்லை. ஆனாலும் கூட ஆர்வம் இல்லாததால் மடிக்கணினியையோ, டேப்லட்டையோ பயன்படுத்தாமல், பழங்கால முறைபடியே காகித பயன்பாட்டைதான் முழுமையாக நம்பியிருக்கிறார்கள். சட்டப்பேரவையில் காகித பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கணினியை வழங்கி புதுமைப்படைத்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுதான்.


இந்த நேரத்தில் முக்கியமாக நினைவுப்படுத்த வேண்டியது என்னவென்றால், முதல்வர் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடனேயே தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளும் காகித பயன்பாட்டை குறைத்துக் கொண்டு மின்னணு கருவியான கணினி பயன்பாட்டிற்கு விரைவாக மாறிவிட வேண்டும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அறிவுறுத்தியிருந்தார். ஓராண்டுக்குப் பிறகும் தலைமைச் செயலகத்தில் கணினி வழியிலான செயல்பாடுகள் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.
இப்படிபட்ட நேரத்தில், கணினி முறையிலான செயல்பாட்டுக்கு ஒவ்வொரு துறையும் வேகமாக மாறியிருந்தால், முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலையோடு கூறியதைப் போல, முதலமைச்சர் தகவல் பலகைக்கு (டேஸ் போர்டு) அனைத்து துறையின் செயல்பாடுகளும் தானியங்கி முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.
ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு, அந்தந்த துறை அமைச்சர்களுக்கே அதிகமாக உண்டு.

ஆனால் முதல்வர் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 33 பேரில், 21 அமைச்சர்கள்தான், சமூக ஊடகங்களை லாவகமாக கையாளும் வித்தையை அறிந்து வைத்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி,வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறுகுறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தித்துறை அமைச்சர் எம்பி சாமிநாதன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கைத்தறி துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போக்குவரத்துறை துறை அமைச்சர் எஸ்எஸ்.சிவசங்கர், , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பி.பழனிவேல்ராஜன், பால்வளத்துறை அமைச்சர் எஸ்எம் நாசர்,, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி. கே.எஸ். மஸ்தான், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ..மெய்யநாதன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், சி.வி.கணேசன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்தி வருவதால், அவர்களின் அன்றாட செயல்பாடுகள் மட்டுமின்றி அவரவர் துறைகளின் செயல்பாடுகளையும் பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது.


குறிப்பாக நாள் ஒன்றுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில், காலை முதல் மாலை வரை வெகு ஆக்டிவ்வாக இருப்பவர்கள் என்ற வரிசையில், மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், க.பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர், முதல்முறை அமைச்சர்களான மா.சுப்பிரமணியம், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சக்கரபாணி ஆகியோரின் வேகத்திற்கு இணையாக வேகம் காட்டி வருகிறார்கள்.

ஆனால், திமுக அமைச்சரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த அமைச்சர்களான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரின் அன்றாட நடவடிக்கைகள் படுமோசம் என்று சொல்கிற அளவுக்குதான் உள்ளது என்பதை அவரவர் டிவிட்டர் பக்கம் மட்டுமல்ல, திமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கமும் வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கிறது.
அதே வரிசையில் வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வீட்டுவசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் ஆகியோரின் செயல்பாடுகளும் படுமந்தமாகவே உள்ளது. செப்டம்பர் மாதத்தில் பாதி நாட்கள் கடந்துள்ள நிலையில், மூத்த அமைச்சர் துரைமுருகன் துவங்கி முதல்முறை அமைச்சரான ஜுனியர் எம்.மதிவேந்தன் வரையில் அன்றாட செயல்பாடுகள் ஒற்றை புள்ளி எண்ணிக்கையிலேயே அடங்கி விடுவதுதான் பரிதாபம்.
அமைச்சர்கள் துவங்கி அரசுத்துறை உயரதிகாரிகளின் அன்றாட செயல்பாடுகள் அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு சென்றால்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு ஏற்படும்.
மூத்த அமைச்சர்களை உள்ளடக்கி மொத்தம் உள்ள 33 அமைச்சர்களை விட முதல்வர் மு.க.ஸ்டாலினின் அன்றாட நிகழ்வுகளை பார்க்கும் போது நாள் ஒன்றுக்கு 5, 6 நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார் என்று தமிழ்நாடு அரசு மற்றும் திமுக டிவிட்டர் பக்க பதிவுகள் தெரிவிக்கின்றன. வாரம் தவறாமல் தனது தொகுதியான கொளத்தூருக்குச் சென்று வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைப்பதுடன் பொதுமக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களோடு கலந்துரையாடுகிறார்.
முதல்வரின் வேகத்திற்கு அமைச்சரவை சகாக்களும், ஐஏஎஸ் அதிகாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டால்தான், முதல்வரின் லட்சியக் கனவான தமிழகம் நெம்பர் 1 மாநிலம் என்ற இலக்கை எட்ட முடியும். இல்லையெனில், முதல்வரின் கனவு கானல் நீராக மாறிவிடும் ஆபத்து உள்ளது.