தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…
சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகவே பிறப்பெடுத்த இயக்கம்தான் திராவிட இயக்கங்கள் என்று திமுகவும் அதிமுகவும் ஒவ்வொரு விடியலின் போதும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால், திராவிடக்கட்சிகளில்தான் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக அதிகமாக அநீதிகள் இழைக்கப்பட்டு வருகின்றன என்ற கூக்குரல் பல்லாண்டு காலமாக தமிழகத்தில் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.
முந்தைய ஆளும்கட்சியான அதிமுகவில், தலித் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று அதிமுக நிர்வாகிகளான தலித் தலைவர்களே மனம் நொந்து குமறிய வரலாறுகள் எல்லாம் உண்டு. குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நான்காண்டு கால அதிமுக ஆட்சியில் கொங்கு சமுதாய மக்களின் ஆதிக்கம்தான் தலை தூக்கியிருந்தது என்றும் மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் அருந்ததி சமுதாயத்தினருக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டதாக குமறியவர்கள் ஏராளமானோர் உண்டு.
அருந்ததி சமுதாயத்தை அதிமுக ஒரு போதும் கைவிடாது என்றும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ப.தனபாலுக்கு சட்டப்பேரவைத் தலைவர் பதவியை தந்து அழகு பார்த்தது அதிமுக தான் என்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் அவ்வப்போது முழங்கி வந்தபோதும், ப.தனபாலால் அருந்ததி சமுதாயத்தினருக்கு துளியளவு கூட நன்மை கிடைத்ததில்லை என்ற வருத்தம், அதிமுகவிலேயே தொடர்ந்து கொண்டிருக்கும் அருந்ததி சமுதாய நிர்வாகிகளுக்கு இன்றைக்கும் உண்டு.
இதே மனக்குமறல் திமுகவிலும் நிலவிக் கொண்டிருப்பதுதான் துயரமான அம்சமாகும். ஆளும்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோ தலித் சமுதாயத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக சமூக நீதிதான் தங்களின் உயிர்மூச்சு என்று கூறி வரும் திமுகவிலேயே, தலித் சமுதாயம் பின்னுக்கு தள்ளப்படுவதுதான் மிகப்பெரிய துயரம் என்று கூறும் தலித் முன்னணி நிர்வாகிகள் பலர் இன்றைக்கும் திமுகவில் உண்டு. அதன் வெளிப்பாடுதான் கடந்த வாரத்தில் மேற்கு மண்டலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு மற்றும் கட்சி விழாக்களில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அண்ணா அறிவாலயத்தின் கதவை தட்டும் அளவுக்கு சென்ற அவலமும் நேர்ந்தது.
இப்படிபட்ட பின்னணியில் இன்றைக்கும் திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களாகவும் மூத்த அமைச்சர்களாகவும் உள்ள துரைமுருகன், ஐ.பெரியசாமி எம்ஆர்கே.பன்னீர்செல்வம், ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோரும் தலித் விரோத மனப்பான்மையுடன்தான் நடந்து கொள்கிறார்கள் என்ற வேதனை இன்றைக்கும்கூட மறைந்த பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே திமுகவில் நிர்வாகிகளாக உள்ள மூத்த தலித் நிர்வாகிகளிடம் இருந்து வருவதாக கூறுவோரும் உண்டு.
ஆனால், மூத்த அமைச்சர்களோடு நெருக்கமான நட்பில் இருப்பவர்கள் அல்லது நம்பிக்கை பெற்ற தலித் திமுக முன்னணி நிர்வாகிகள் கூறும் கூற்றோ, தலைகீழாக உள்ளதுதான் ஆச்சரியம்.
தலித் சமுதாயத்தை புறக்கணிக்கும் எண்ணமோ, அவமானப்படுத்தும் குணமோ திமுக முன்னணி நிர்வாகிகளிடம் ஒருபோதும் இருந்ததில்லை. திமுகவுக்கே உரிய பிரத்யேக குணம் என்று சொல்லப்படும் விசுவாசிகளை, தொண்டர்களை ஒருமையில் அழைத்து அதிகாரத்துடன் அன்பு காட்டும் பழக்கத்தினை வைத்து தலித் விரோத செயல்களில் திமுக தலைவர்கள் ஈடுபடுகிறார்கள் என்று இளம்தலைமுறையைச் சேர்ந்த தலித் திமுக நிர்வாகிகளிடம் வெறுப்பை ஊட்டி, அதை பூதாகரமாக்கி உட்கட்சியிலேயே ஆதாயம் தேடி வருபவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்கிறார்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பு ஏற்றப்பிறகு தலித் சமுதாயத் தலைவர்களின் தியாகத்தை போற்றும் வகையில்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, அதனை குறுகிய காலத்திற்குள்ளாகவே நிறைவேற்றும் வகையில், அரசு நிர்வாகத்தை விரட்டிக் கொண்டிருக்கிறார் என்று கூறும் திமுகவில் உள்ள தலித் முன்னணி நிர்வாகிகள், அம்பேத்கர் மணிமண்டபத்தில், அவரின் முழு திருவுருவச் சிலையை அமைப்பது, அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதியை சமத்துவ நாளாக கொண்டாடுவது, அயோத்திதாச பண்டிதரின் 175 ம் ஆண்டின் நினைவாக வடசென்னையில் அவருக்கு மணிமண்டபம் அமைப்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் போன்றவற்றால் மனம் மாறும் தலித் சமுதாய மக்களை திமுக பக்கம் சாய தூண்டுகோலாக அமைந்திருக்கிறது என்று பூரிப்பு காட்டுகிறார்கள்.
திமுக தலித் நிர்வாகிகளைப் போலவே பொதுப்பணித்துறை அதிகாரிகளும் திமுக அரசின் முன்னெடுப்புகளை விவரித்து பேசுவதுதான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக உள்ளது.
முதல்வரின் அறிவிப்புகளை நிறைவேற்றும் வகையில் முழு மூச்சாக களத்தில் குதித்துவிட்டார் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு என்று கூறும் அந்த துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தை கடந்த ஜுன் மாதம் 14 ஆம் தேதி ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மணிமண்டப வளாகத்தில் அம்பேத்கரின் முழு திருவுருவ வெண்கல சிலையை நிறுவுவதற்கான இடத்தையும் பார்வைட்டு ஆய்வு செய்து, வெகு விரைவில் முழு உருவச்சிலையை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்பேரில், அன்றைய தேதியில் இருந்தே பணிகள் வேகமெடுக்க துவங்கிவிட்டது. அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி வழங்குகிறார். அதற்கான பீடம் அமைப்பது உள்ளிட்ட பணிகளை துவக்கி வைக்கும் விதமாக, கடந்த 11 ஆம் தேதி பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு நேரில் வருகை தந்தார். அப்போது அங்கு வந்த தொல் திருமாவளவன் எம்பியுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்திய அமைச்சர் எ.வ.வேலு, திருமாவளவன் கூறிய அனைத்து கருத்துகளையும் கவனத்தில் கொண்டு, அதற்கு ஏற்பவே பொதுப்பணித்துறை அதிகாரிகளான எங்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவச்சிலையை நிறுவதைப் போலவே, மற்றொரு அற்புதமும் அங்கு நிகழப் போகிறது என்பதை அமைச்சர் எ.வ.வேலு நடத்திய ஆலோசனைக் கூட்டங்கள் வாயிலாகதான் பொதுப்பணித்துறை அதிகாரிகளான எங்களுக்கே தெரியவந்தது. அம்பேத்கரின் திருவுருவச்சிலை அருகிலேயே கௌதம புத்தருக்கும் சிலை வைக்கப்படவுள்ளது என்பதுதான் வியப்பிற்குரிய அம்சமாகும்.
கடந்த ஒருமாதமாக அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலை அமைப்பதற்கான பணிகளில்தான் அமைச்சர் எ.வ.வேலு அதிக கவனம் செலுத்தி வருகிறார். பொதுப்பணித்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில், அம்பேத்கர் சிலை நிறுவும் பணி தொடர்பாக அவர் எழுப்பும் கேள்விகளையும், அறிவுரைகளையும் பார்க்கும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினின் எண்ணவோட்டத்திற்கு ஏற்ப வெறித்தனமாக செயல்படுவது இப்படிதானோ என்ற ஆச்சரியம் எங்களுக்கே ஏற்பட்டுவிட்டது.
வரும் 30 ஆம் தேதிக்குள் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு திருவுருவச்சிலையையும் புத்தர் சிலையையும் நிறுவப்பட்டு விட வேண்டும். ஓரிரு நாள் கூட காலதாமதம் ஏற்பட்டு விடக் கூடாது என்று கடுமையான உத்தரவுகளை அமைச்சர் எ.வ.வேலு பிறப்பித்துள்ளார். அதுபோலவே வடசென்னையிலும் அயோத்திதாச பண்டிதருக்கு நினைவு மண்டபத்தை வெகு விரைவாக அமைத்துவிட வேண்டும் என்றும் அதற்கான பணிகளிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முழுமூச்சுடன் செயலாற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்தின் போதும் அமைச்சர் எ.வ.வேலு விரட்டிக் கொண்டே இருக்கிறார்.
அமைச்சரின் ஆர்வத்தை பார்க்கும்போது, அயோத்திதாச பண்டிதரையும் அம்பேத்கரையும் வெறும் தலித் தலைவர்களாக மட்டுமே பார்க்காமல், தமிழ் சமுதாயத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த விளிம்பு நிலை மக்களின் துயரங்களையும் துடைக்க தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்கள் என்ற மனநிலையில்தான் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்பதை உள்வாங்கி கொண்டிருக்கும் அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனைவிட வெறித்தனமாக இருக்கிறாரே அமைச்சர் எ.வ.வேலு என்ற பேச்சு அண்மைக்காலமாக பொதுப்பணித்துறையின் பலமட்டங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்று பெருமூச்சு வாங்க கூறினார்கள் அந்த துறையின் அதிகாரிகள் சிலர்.
சாதிய பாகுபாடு இன்றி முழு ஈடுபாட்டோடு அமைச்சர் எ.வ.வேலு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை என்றால், அவரை தலித் சமுதாய மக்கள் எப்போதுமே கொண்டாடவே செய்வார்கள்..