Thu. Apr 18th, 2024

மின்கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. முதற்கட்டமாக சென்னையில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் அனல் பறந்துள்ளது. ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர்கள் மற்றும் மின்சார வாரிய உயரதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொழில்துறையினர், வர்த்தகர்கள், வணிகர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மின்சாரக் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் மின்சாரக் கட்டண உயர்வு முடிவை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில், அனைவரின் பாராட்டுகளையும் ஒருசேர பெறும் வகையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ஆவேச பேச்சு அமைந்திருந்தது. மின்சார வாரியம் கடந்த 2005 ஆம் ஆண்டில் லாபத்தில் இயங்கிய நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்றால் இந்த நட்டத்தை ஏற்படுத்தியவர்கள் யார்? அரசியல்வாதிகளா? மின்சார வாரிய அதிகாரிகளா? யார் என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு இருக்கிறது.

பொது மக்களாகிய நுகர்வோர்கள் அனைவரும் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு உரிய கட்டணத்தை செலுத்திய பிறகும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நட்டம் என்றால் இதற்கு மின்சார வாரிய அதிகாரிகள் தானே பொறுப்பு ஏற்க வேண்டும்.. சிறு,குறு தொழில் நிறுவனங்களின் வேதனைக் குரல்கள் உங்களின் செவிகளுக்கு எட்டியிருக்கிறதா? அனைத்துத் தரப்பு மக்களையும் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு மின்சார வாரிய அதிகாரிகள் எல்லாம் நிம்மதியாக இருக்க முடிகிறது? உங்களின் சம்பளத்தில் ஒரு பைசா கூட குறையப் போவதில்லை. ஆனால் மக்கள் மட்டும் மின்கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால், உங்களுக்கு எல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா? இன்றைக்கு உள்ள சேர்மன் உள்பட கடந்த 15 ஆண்டுகளில் பதவியில் இருந்த சேர்மன்கள் மீதும் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று நரம்பு புடைக்க முழங்கினார், திருமுருகன் காந்தி.

அவரின் ஆவேசக் குரலுக்கு அரங்கில் இருந்த ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் மின்சார வாரிய அதிகாரிகளும் ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினர்களும் பதில் சொல்ல முடியாமல் திணறினர். திருமுருகன் காந்தியின் கிடுக்குப்பிடி கேள்விகளால் நிம்மதியடைந்த தொழில்துறையினர், தறிகெட்டு ஓடும் மின்சார வாரியத்தை கடிவாளம் போட்டு நிறுத்தும் வகையில் திருமுருகன் காந்தியின் பேச்சு அமைந்திருந்தது என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

இத்தனை நாட்களாக எதேச்சாதிகாரப் போக்கில் செயல்பட்டு கொண்டிருக்கும் மின்சார வாரிய அதிகாரிகளின் கொட்டத்தை அடக்க யார் வருவார் என்று ஏங்கிய நேரத்தில் பூனைக்கு மணிகட்டுவதைப் போல திருமுருகன் காந்தி வந்து ஊழலில் திளைத்து கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் ஆவேசத்தை வெளிப்படுத்தியது உண்மையிலேயே வரவேற்கக் கூடிய ஒன்று என்றனர்.

திருமுருகன் காந்தியைப் போல சிறு குறு தொழில்களை பாதிக்கும் வகையில் தான் புதிய மின் கட்டண உயர்வு அமைந்திருப்பதாக அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர் குற்றம் சாட்டுகிறார்கள்.. புதிய மின் கட்டண உயர்வில் மறைமுகமாக உள்ள கட்டண முரணபாடுகளை விவரித்து தொழில் முனைவோர் ஒருவர் பேசியுள்ள ஆடியோ அந்த துறையில் ஈடுபட்ட உளளவர்களிடம் தீயாக பரவியுள்ளது…