Sat. Apr 20th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக கோலோச்சிக் கொண்டிருக்கும் வி.செந்தில்பாலாஜியின் அன்றாட வித்தைகளைப்  பார்த்து, அரசியல் விளையாட்டுகளில் சகலகலாவல்லவரான நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பலரே விக்கித்து நிற்கின்றனர்.

அரசியல் வானவேடிக்கைகளில் மட்டுமின்றி, ஆட்சி நிர்வாகத்திலும் அனைத்துப் பக்கமும் கொம்பு வீசுகின்ற ஆய கலைகள் அனைத்துமே திமுக பாசறை தளபதிகளுக்கு மட்டுமே கைவந்த கலை என்பதை தூக்கி சாப்பிடும் வகையில், அதிமுகவில் இருந்து திமுகவில் ஐக்கியமான ஜுனியர் செந்தில்பாலாஜி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் புதிய பாதையை வகுத்துவிட்டார்.

அவரின் தடம் ஒற்றிதான் திமுகவிலேயே காலம் காலமாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும்  முன்னோடிகளும் இன்றைக்கு பயணப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், செல்வாக்கு மிகுந்த இரண்டு துறைகளை வைத்திருக்கும் இரண்டு அமைச்சர்களில் ஒருவரான அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை கையாளும் வித்தையைப் பார்த்து எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல ஆளும்கட்சியினரே கொந்தளித்து போய் நிற்கின்றனர் என்கிறார்கள் திமுக உட்கட்சி விவகாரத்தை நன்கறிந்தவர்கள்.

திமுகவில், முதன்மையானவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் விருப்பத்தையும் முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான விமர்சனங்கள்தான் பொதுவெளியில் ஒவ்வொரு நாளும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

அட்சய பாத்திரமான டாஸ்மாக் மதுபானக் கடைகளின் ஏலத்தில் தொடங்கி, பார்களுக்கு உரிமம் வழங்குவது முதல் அனைத்து விதமான வேட்டைகளிலும் திமுக முன்னணி நிர்வாகிகளின் தலையீடு துளியும் இல்லாமல் தனியொருவராக சாதித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி என்பது அன்றாடம் பரபரப்பு செய்தியாகிக் கொண்டிருக்கிறது.

அதேபோல, மின்சாரத்துறையில் ஒப்பந்ததாரர்கள் தேர்வு உள்ளிட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் கூட மூத்த அமைச்சர்களின் பரிந்துரைகளை புறம்தள்ளிவிட்டு, அவரே தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறார் என்பதும் பிரதானமான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு எதிராக ஆளும்கட்சிக்குள்ளேயே அதிருப்தி அலைகள் அதிகமாகி கொண்டிருக்கும் நேரத்தில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையும், கண்கொத்தி பாம்பாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை கண்காணிப்பு வளையத்திற்குள்ளேயே வைத்திருக்கிறார்.

அமைச்சரைச் சுற்றி நெருப்பு வளையம் பின்னப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்த போதும்கூட, அவருடைய செயல்பாடுகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தனி ராஜியம்தான் நடத்திக் கொண்டிருக்கிறார் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி என்று புலம்பும் மாவட்ட அளவிலான திமுக நிர்வாகிகள், மதுபான உரிமையாளர்கள் உள்ளிட்டோர், காசு,பணம், துட்டு மணி மணி என்பதுதான் அமைச்சரின் தாரக மந்திரமாக இருக்கிறது என்கிறார்கள் வேதனையுடன்.

மின்சாரத்துறையில் பணியிட மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் செல்லும்போதெல்லாம் கறாராக அன்பளிப்பு கேட்கப்படுகிறது என்று வருத்தப்படும் திமுக நிர்வாகிகள், லட்சங்களில் பணம் கொடுத்தால்கூட பணியிட மாற்றம் விரைந்து நடப்பதில்லை என்றும் குற்றம் சுமத்துகிறார்கள்.

மின்சார வாரியத்தின் சேர்மனாக இருக்கும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், தனக்குரிய அதிகாரத்தை கூட செலுத்த முடியாத அளவுக்கு அவரது கைகள் கட்டி போடப்பட்டிருக்கிறது என்ற சோக கீதமும் மின்சார வாரியத்தின் தலைமை அலுவலக வளாகத்திற்குள் கேட்டுக் கொண்டிருக்கிறது.  

இப்படி திருமகளே துணை என்ற மந்திரத்தையே எப்போதும் முழங்கிக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்படும் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியிடம், கல்லுக்குள் ஈரம் போல மனிதநேயம் தலை தூக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆனந்த கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள் மின்வாரியத்துறையில் உள்ள மூத்த பொறியாளர்கள்.

மின்வாரியத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொறியாளர்களுக்கு, கீழ்நிலை முதல் மேல்மட்டம் வரை பதவி உயர்வு, பணியிட மாற்றம் வழங்கும் பணி சத்தமில்லாமல் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செயற் பொறியாளர் அந்தஸ்திலான பதவிகளுக்கு பணியிட மாற்றமும், நிர்வாக பொறியாளர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றமும் வழங்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பணியிட மாற்றத்திற்கும் குறைந்தது 5 லட்சம் ரூபாய் அன்பளிப்பு(!), பதவி உயர்வுக்கு குறைந்தபட்சமாக பத்து லட்சம் ரூபாய் அன்பளிப்பு என்பது சர்வசாதாரணமாக வசூலிக்கப்படும்.

இப்போதைய திமுக ஆட்சியில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய ஆட்சிகளிலும் பதவி உயர்வுக்கும், பணியிட மாற்றத்திற்கும் லட்சங்கள் அன்பளிப்பு கொடுப்பது வழக்கமான ஒன்றுதான்.

இந்த நடைமுறையை தகர்த்து, அவரவர் விரும்பும் இடத்திற்கு பணியிட மாற்றம் வழங்கியும், பதவி உயர்விலும் எந்த குளறுபடியும் நடந்து விடாமல், நியாய, தர்மத்திற்கு உட்பட்டு ஒத்த பைசா கூட அன்பளிப்பாக வசூலிக்காமல் நிர்வாக பொறியாளர்கள் (Executive Engineer) மற்றும் செயற் பொறியாளர்கள் ( Superintendent Engineer) ஆகிய பதவிகளுக்கான பணியிட மாற்றமும், பதவி உயர்வும் கிட்டதட்ட 100 அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மின்சார வாரியம் வெளியிட்ட உத்தரவைப் பார்த்து பதவி உயர்வும், பணியிட மாற்றம் கிடைத்த பொறியாளர்கள், உற்சாகத்தில் துள்ளி குதித்துள்ளனர்.

எப்படிபார்த்தாலும் 5 கோடி ரூபாய்க்கு மேல் அன்பளிப்பை வாரி சுருட்டி இருக்க கூடிய விஷயத்தில், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, போனால் போகட்டும் போடா என்ற மனநிலையில்,  அன்பளிப்பே வேண்டாம் என்று கூறியதைப் பார்த்து, அமைச்சர் நல்லவரா? கெட்டவரா? என்று விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் மின்சார வாரியத்தின் தலைமைப் பதவிகளில் உள்ள அதிகாரிகள்.

நமக்கும் அதே சந்தேகம்தான்..

அமைச்சர் வி.செந்தில்பாலாஜி.. நல்லவரா, கெட்டவரா..?