Tue. Apr 23rd, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…

விடியல் ஆட்சியில் ஒவ்வொரு நாள் விடியலிலும் கிடைக்கிற தகவல்களால் ஏற்படுகிற விரக்தியை தவிர்க்க முடியவில்லை. வைகறை நேரத்தில் விழிப்பு ஏற்பட்டவுடன் தலைதூக்கும் விரக்தியையோ, சோகத்தையோ புறம்தள்ள டிவிட்டர் பக்கத்தில் பார்வையை படரவிடுவதுதான் அன்றாட பணியாக மாறியிருக்கிறது.

பூஸ்டோ, ஹார்லிக்ஸோ பருகினால் கூட கிடைக்காத புத்துணர்வு, வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூவின் டிவிட்டர் பதிவுகளை பார்க்கும் போது மனசு பட்டாம்பூச்சிப் போல பறக்க தொடங்கிவிடும். திரைஇயக்குனர் பாலுமகேந்திராவின் ரசனைக்கு துளியும் குறையாமல் கலை ஆர்வம் கொண்ட ஐஏஎஸ் அதிகாரியின் ஒவ்வொரு பதிவும், சொர்க்கத்தின் திறவுகோல் போல அமைந்துவிடுகிறது. இயற்கை காட்சிகளோ, வன விலங்குகளோ அவரின் பார்வையில் அதிசயமாக தோன்றி, அந்த அழகியலை அப்படியே டிவிட்டரில் பதிவேற்றுவதை பார்த்து பார்த்து வியந்திருக்கிறேன்.

அதுவும் ஞாயிற்றுக்கிழமை என்றால் அதிகாலை நேர கடற்கரை காட்சிகள், மிதிவண்டி பயணம், யோகா பயிற்சி என ஒவ்வொன்றும் வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் ரசித்து ரசித்து, அனுபவித்து வாழ வைக்கும் விதமாக அமைந்திருக்கும்.

கால் ஆட்டிக் கொண்டு சாப்பிட மட்டும் பணம் இருந்தால் ஐஏஎஸ் அதிகாரியின் டிவிட்டர் பக்க பதிவுகளிலேயே வாழ்ந்துவிடலாம். எப்போர்ப்பட்ட வரம் வாங்கி வந்திருக்கிறார் சுப்ரியா சாஹூ என்று பொறாமை பட வைக்கும் விதமாக, அவர் பார்க்கும் உலகமே அதிசயமாக,அற்புதமாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு துளியையும் ரசனையோடு பார்ப்பவரின் மனமும், குணமும் இளகியதாகதானே இருக்கும் என்று நினைத்தால், அப்படியெல்லாம் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் சிலர்.

அரசுப் பணியில் கறார் அதிகாரி என்று பெயரெடுத்தவர் சப்ரியா சாஹூ ஐஏஎஸ் என்கிறார்கள். தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இருந்து சட்டப்பேரவை அமைந்திருக்கிற வளாகத்திற்கு அவர் நடந்து செல்கிற வேளையில் ஒன்றிரண்டு முறை பார்த்திருக்கிறேன். உடன் பிறந்த சகோதரி போல எளிமையாக காட்சியளிக்கும் அவர், அரசு நிர்வாகத்தில் கில்லி போல சுற்றி சுற்றி வருபவர் என்பதாலேயே முதல்வர் அலுவலகத்தின் நெம்பர் 1 செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரிடம் அவருக்கு நற்பெயர் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

வனத்துறையின் முதன்மைச் செயலாளராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்ரியா சாஹூ பணியிட மாற்றம் செய்யப்பட்டபோதே, அந்த துறையின் அதிகாரிகள் மட்டுமல்ல, அந்த துறையின் அமைச்சரான குன்னூர் ராமச்சந்திரன்கூட அதிர்ந்துதான் போனார் என்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள் பலர்.  சட்டத்திற்கு அப்பாற்பட்டு சிறிய அளவிலான செயல் என்றால் கூட சமரசம் செய்து கொள்ளமாட்டார் என்றும் சிபாரிசு என்ற வார்த்தையே அவருக்கு மன்னிக்க முடியாத குற்றம் போல கடுமை காட்டுவார் என்கிறார்கள்.

இப்படிபட்ட சிறப்பு குணம் படைத்த ஐஏஎஸ் அதிகாரியை வேலை வாங்குவது மட்டுமல்ல, வழி நடத்துவது என்பதே சிரமம் என்பதை துவக்கத்திலேயே புரிந்து கொண்டதால்தான், வனத்துறையில் பணியிட மாற்றம் உள்ளிட்ட எந்தவொரு உத்தரவையும் வனத்துறை செயலாளருக்கு பிறப்பிக்க முடியாமல், புலம்பி வருகிறார் வனத்துறை அமைச்சர் குன்னூர் ராமச்சந்திரன் என்கிறார்கள்.

கடந்த பல மாதங்களாகவே இருவருக்கும் இடையே பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்து வருவதாக கூறும் வனத்துறை அலுவலர்கள் சிலர், முதன்மைச் செயலாளர் அசந்த நேரத்தில் அடித்து ஆடுவதைப் போல மாபெரும் காரியத்தை சாதித்துக் கொண்டார் அமைச்சர் குன்னூர் ராமச்சந்திரன் என்று பொடி வைத்து பேசுகிறார்கள்..

அப்படி என்ன முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் ? என்று கேட்டபோது விரிவாக எடுத்துக் கூறினார்கள் அவர்கள்.

வனத்துறையின் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரியா சாஹூ வசம்தான் இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருந்த நேரத்தில், அவரின் விருப்பத்திற்கு மாறாக, திண்டுக்கல், தேனி, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் உள்ள புலிகள் சரணாலயம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த சரணலாயங்கள் அடங்கிய மண்டலத்தை கவனிக்க, டெபுடேஷன் பணியில் தமிழகத்திற்கு மாறி வந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரி என்.செந்தில்குமாரை கன்சர்வேட்டராக நியமித்து, தன் விருப்பப்படி வனத்துறையை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ராமச்சந்திரன் என்கிறார்கள்.

என் செந்தில்குமார் ஐ.எஃப்.எஸ்..

பரந்து விரிந்து இருக்கும் வனத்துறை என்றால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  கொடைக்கானல், தேனி மாவட்டத்தில் மேகமலை, விருதுநகர் மாவட்டம் சதுரகிரிமலை, மதுரை மாவட்டத்தில் அழகர் மலை என தென் மாவட்டங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் வன விலங்குகள் அதிகமான நடமாட்டம் கொண்டவையாக இருக்கின்றன. மேலும், அரியவகை மரங்களும் உள்ளன. இவற்றைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை  புலிகள் காப்பகம், ஆசியாவில் மிகவும் புகழ்வாய்ந்த ஒன்றாகும்.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்…

அண்மையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்தையும் தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ளது. எட்டு மாவட்டங்களுக்கும் ஒரே ஒரு கன்சர்வேட்டராக பணியாற்றி வரும் என் செந்தில்குமார் ஐ.எஃப்.எஸ், முழுக்க, முழுக்க அமைச்சர் ராமச்சந்திரனின் தேர்வு என்றே சொல்கிறார்கள்.

இவைகள் தவிர, பறவைகள் சரணாலய பட்டியலில், திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம், மதுரை மாவட்டம் கஞ்சிரன் குளம் பறவைகள் சரணாலயம், சிவகங்கை மவாட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் என புகழ்பெற்ற பல சரணாலயங்கள் தென்மாவட்டத்தில் அதிகமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் கண்காணிக்கிற பொறுப்பு மட்டுமல்ல, பாதுகாக்கிற கடமையும் வனத்துறைக்கே இருக்கிறது.

வனவிலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கிற அதேநேரத்தில் வனப்பகுதிகளில் உள்ள அரிய வகை மரங்களையும் பாதுகாக்கிற பொறுப்பும் வனத்துறைக்கே உண்டு.

உலகம் முழுவதும் இன்றைக்கு வனத்தை முழுமையாக பாதுகாக்க வேண்டும். வனம் அழிக்கப்பட்டால் மனிதன் வாழ்வதற்கே தகுதியில்லாத நிலப்பரப்பாக பூமி மாறிவிடும் என்று இயற்கை ஆர்வலர்கள் உரத்த குரல் எழுப்பி வருகின்றனர்.

இப்படிபட்ட நேரத்தில், 3 ஐ எஃப் எஸ் அதிகாரிகள் கன்சர்வேட்டராக பணிபுரிய வேண்டிய 8 மாவட்டங்களில் ஒரே ஒரு கன்சர்வேட்டராக, அதுவும் டெபுடேசனில் நாகாலாந்து மாநில கேடர் ஐ.எஃப்.எஸ் அதிகாரியான என்.செந்தில்குமாரை நியமித்து, அவரையே தொடர்ந்து பணியாற்றும் வகையில் உத்தரவு பிறப்பித்தது மட்டுமின்றி அவரது கட்டுப்பாட்டின் கீழ் 8 மாவட்ட வனத்துறையும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுத்தது ஏன்? ஒரே ஒரு கன்சர்வேட்டரால் 8 மாவட்ட வனத்துறையையும் கண்காணிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பும் இயற்கை ஆர்வலர்கள், இவரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏதாவது ஒரு வனப்பகுதியில் அபூர்வ மரங்களை வெட்டி கடத்தப்பட்டாலே  பலநூறு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக வருமானத்தை ஈட்டலாம் என்று கூறப்படும் நேரத்தில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி என்.செந்தில்குமார் மூலம் ஆதாயம் பெறும் உந்துதல் அமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறதா? இல்லை நேர்மையின் சின்னமாகவும் கறார் ஆபிசர் என்று பெயர் எடுத்து இருக்கிற முதன்மைச் செயலாளருக்கு ஏற்பட்டிருக்கிறதா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி தவறு செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறும் இயற்கை ஆர்வலர்கள், அவர் முழுமையாக நம்பும் லாப நோக்கத்தை மட்டுமே முதன்மையாக கொண்டு செயல்படும் என்.ஜி.ஓ., அமைப்பினர் யாராவது ஆதாயம் பெறும் நோக்கத்தோடு முதன்மைச் செயலாளரை பயன்படுத்தி கொண்டார்களா-? என்றும் சந்தேகத்தை கிளப்புகிறார்கள்.

என்.செந்தில்குமாரை போல ஐ.எஃப்.எஸ் படித்த உயர் அதிகாரிகள் பலர் தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றுக் கொண்டிருக்கும் போது, அவர்களை எல்லாம் முக்கியத்துவம் இல்லாத துறைகளில் பணியமர்த்திவிட்டு, என்.செந்தில்குமாரை மட்டும் கொண்டாடுவதன் மர்மம் என்ன? என்று ஆழ்ந்த கவலையோடு கேள்வி எழுப்புகிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.