Fri. Apr 26th, 2024

 

கூட்டுறவு துறையில் சாதிக்க முடியாததை ஊரக வளர்ச்சித் துறையில் சாதித்து விடப் போகிறாரா.,?

தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் இரண்டாவது முறையாக செய்யப்பட்டிருக்கும் அமைச்சரவை மாற்றம், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள்.

முதல்வரின் புதல்வரும் திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக  பதவியேற்றுகிறார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அழைக்கப்பட்டாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் வசமிருந்த சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதால், திமுக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினின் பங்களிப்பு சிறப்பு மரியாதையை பெற்றுத் தரும் என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்.

சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்தின் கீழ் தான் திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் அனைத்து புதிய திட்டங்களும் இடம் பெறும் என்பதால்,  கல்வி,சுகாதாரம், தொழில் உள்ளிட்ட அனைத்து முக்கியத்துறைகளின் செயல்பாடுகளிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பங்களிப்பு அதிகளவில் இருக்கும் என்கிறார்கள் உயர் அதிகாரிகள்.

அமைச்சராக பதவியேற்பதற்காக ஆளுநர் மாளிகைக்கு பயணப்பட்ட நேரத்தில், செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சர் பதவி என்பது அலங்காரமாக இருக்காது. மிகுந்த பொறுப்புக்குரிய ஒன்றாகதான் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

அமைச்சர் பதவியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலின், இனிவரும் நாட்களில் பொதுமக்களின் நலனில் முழு கவனமும் செலுத்தும் நிர்வாகியாக அவரின் செயல்பாடுகள் அமையும் என்ற எதிர்பார்ப்பு இளைஞரணி நிர்வாகிகளிடம் உருவாகியிருக்கிறது.  

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதையடுத்து, அமைச்சர்களுக்கான துறைகளில் சிறிய மாற்றத்தையும் செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி வகித்து வந்த கூட்டுறவு துறை மாற்றப்பட்டு, அவருக்கு ஊரக வளர்ச்சித்துறை வழங்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.பெரியகருப்பன் இனி மேல் கூட்டுறவு துறை அமைச்சராக செயல்படுவார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தனின் துறை மாற்றப்பட்டுள்ளது. அவருக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது..

வனத்துறையை கவனித்து வந்த அமைச்சர் ராமசந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவகையில் அமைச்சர் ராமசந்திரன் இனிவரும் நாட்களில் நிம்மதி மூச்சு விடுவார் என்றே கூறுகிறார்கள் நீலகிரி மாவட்ட திமுக உடன்பிறப்புகள்.  

வனத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் துறையின் முதன்மைச் செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகுவிடம்  படாத பட்டுவிட்டார் அமைச்சர் ராமச்சந்திரன் என்கிறார்கள்.

அமைச்சர் வலம் போனால், சுப்பிரியா சாகு ஐஏஎஸ் இடம் போவார் என்பதுதான் வனத்துறையில் அன்றாடம் பேச்சாக இருந்து வந்தது.

ராணிப்பேட்டை அமைச்சர் காந்தியிடம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலததுறை அமைச்சரான ராஜகண்ணப்பனிடம் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டதால் ஏற்பட்ட சரிவை, கூடுதல் துறை மூலம் ஈடுகட்டப்பட்டிருக்கிறது.  

இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மீது இந்துத்துவா வாதிகள் புகார் பட்டியலை வாசிக்காத நாளே இல்லை என்ற வருத்தம் அவரது விசுவாசிகளுக்கு இருந்து வந்தது.  

புகார்களையும் விமர்சனங்களையும் அதிகமாக எதிர்கொண்ட அமைச்சர் பி.கே.சேகர் பாபுவை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் அவருக்கு சிஎம்டிஏ துறையை கூடுதலாக வழங்கியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் இருந்த செல்வாக்குமிக்க துறைதான் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் என்கிற சிஎம்டிஏ. வீட்டுமனைகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் முதன்மையான பணியை மேற்கொண்டு வரும் சிஎம்டிஏ., ஒரு வகையில் பணம் சம்பாதிக்கும் துறை என்ற விமர்சனமும் அடிக்கடி முன்வைக்கப்பட்டு வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வு, திமுக இளைஞரணி நிர்வாகிகளிடம் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த திமுகவிலும் புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளதாக கூறும் இந்த நேரத்தில்  மூத்த அமைச்சர்களிடமும், இரண்டாம் கட்ட திமுக தலைவர்களிடமும் ஒருவித விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்ற தகவலும் தலைமைச் செயலக வளாகத்தில் கசிந்து கொண்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சிகுரிய ஒன்றாக இருக்கிறது.

2021 ம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாளில் இருந்து 2022 ம் ஆண்டு டிசம்பர் 13 ம் தேதி வரை கடந்த 18 மாதங்களில் திமுக அமைச்சரவையில் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தவர் கூட்டுறவுத்துறை அமைச்சரான ஐ.பெரியசாமி.

தனக்கு ஒதுக்கப்பட்ட கூட்டுறவுத்துறையை ஐ.பெரியசாமி முழு மனதாக ஏற்றுக் கொள்ளவே இல்லை என்பதுதான் அன்றாட பேச்சாக இருந்து வந்தது, திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகளிடம்.

2021 மே மாதத்தில் திமுக அமைச்சரவை பதவியேற்கும் விழாவையே புறக்கணிக்கும் எண்ணத்தோடு இருந்த ஐ.பெரியசாமியை சமாதானப்படுத்திதான், அமைச்சராக பதவியேற்க வைத்தது திமுக தலைமை என்று பழைய சோகத்தை நினைவுக் கூறுகிறார்கள் ஐ.பெரியசாமியின் ஆதரவாளர்கள்.

டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றம் கூட ஐ.பெரியசாமிக்கு முழுமையான மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.

வருவாய் துறையை பெரிதும் எதிர்பார்த்தவர் ஐ.பெரியசாமி. ஆனால், அவருக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் ஊரக வளர்ச்சித்துறை என்பது கிராமங்களில் உள்ள பஞ்சாயத்துகள் மற்றும் ஊராட்சி ஒன்றியமன்றங்களை நிர்வகிக்கும் பணிதான்.

இந்த துறையானது முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியின் மூலமே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.     

ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளராக இருப்பவர் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஐஏஎஸ். அமுதா ஐஏஎஸ்ஸின் புகழ் தமிழகம் முழுவதும் பரவியிருப்பதைப் போல, மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் புகழ் பட்டிதொட்டியெங்கும் எதிரொலிக்கிறதா என்றால் சந்தேகம்தான்.

நேர்மை பாதையில் இருந்து இம்மியளவும் தடம் மாறாதவர். அதேபோல, நிர்வாகத்திலும் கண்டிப்பு காட்டக் கூடியவர் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அமுதா.  

ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ், மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் மனவோட்டத்திற்கு ஏற்ப, பணியாற்றுவாரா என்பதும் சந்தேகத்திற்குரியதுதான்.

மத்திய அரசின் நேரடி நிதியுடன் கூடிய பங்களிப்புகள் கிராமபுற மேம்பாட்டிற்காகதான் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பதால், தமிழக பாஜக நிர்வாகிகளும் ஊரக வளர்ச்சித்துறையின் செயல்பாடுகள் மீது அழுத்தமான பார்வையை பதித்தே வருகிறார்கள்.

இப்படிபட்ட பின்னணியோடு ஊரக வளர்ச்சித்துறைக்கு அமைச்சராக பொறுப்பு ஏற்றிருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி,  18  மாத ஓய்வுகாலத்தை ஈடுகட்டும் வகையில் பலமடங்கு பணியாற்றிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அனுபவம் மிக்க உயர் அதிகாரிகள்.

ஊரக வளர்ச்சித்துறையுடன் கூட்டுறவுத்துறையை ஒப்பிடும் போது, அரசு நிர்வாகத்தில் அனுபவம் மிகுந்த மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நல்ல பெயரை பெற்று தரக் கூடிய துறைதான்.

ஆனால், கூட்டுறவுத்துறை மீதான ஐ.பெரியசாமியின் பார்வை மண் குடம் போல வெறுப்பை வெளிப்படுத்தியதால், கோடிக்கணக்கான விளிம்புநிலை மக்களோடு நேரடி தொடர்பு கொண்ட துறையை அமைச்சர் புறக்கணித்து வந்தது துயரமான ஒன்று என்கிறார்கள் கூட்டுறவுத்துறை அதிகாரிகள்.

தமிழ்நாட்டின் இருபெரும் தொழிலான விவசாயம், நெசவு ஆகியவற்றுக்கு பல்லாயிரக்கணக்கில் கூட்டுறவுச் சங்கங்கள் இருக்கின்றன.

அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கான அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கும் பிரிவான ரேஷன் கடைகளும் கூட்டுறவுத்துறை நிர்வாகத்தின் கீழ்தான் வருகிறது.

வீட்டுக்கு வீடு உணவுப் பொருங்கள் வழங்கும் திட்டம், ரேஷன் கடைகளையே சிறிய அளவிலான நியாயவிலை அங்காடியாக மாற்றும் திட்டம், இல்லங்களைத் தேடி கல்வி என்பதை போல, இல்லங்களை தேடி தரம் மிகுந்த, விலை குறைந்த உணவுப்பொருட்களை கொண்டு செல்லுதல் போன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை துவக்கி, பல கோடி மக்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்க கூடிய பொன்னான வாய்ப்பை தவறவிட்டு விட்டார் அமைச்சர் ஐ.பெரியசாமி என்பதுதான் அவரது நலம் விரும்பிகளின் ஆதங்கமாக இருக்கிறது.

உணவு மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளராக உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்., எள் என்று சொன்னால் எண்ணெய்யாக நிற்க கூடியவர். அமைச்சர்களின் மனங்களை படித்து, அதற்கு ஏற்றவாறு செயல்படக் கூடிய ஆற்றல் படைத்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.

அவரின் சிந்தனை ஓட்டத்திற்கு மெருகு ஏற்றும் வகையில் நட்போடு கூட்டுறவுத்துறையில் சிறிய அளவில் அக்கறை காட்டி செயலாற்றி இருந்தால் கூட, திராவிட மாடல் ஆட்சியில் மிகப்பெரிய புகழை பெற்றிருக்க முடியும். ஆனால், அப்படியொரு நல்லதொரு வாய்ப்பை தவறுவிட்டு விட்டவர் மூத்த அமைச்சர் ஐ.பெரியாமி என்கிறார்கள்.

கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பை முழுமையாக உருவாக்குவது என்பது ஆட்சியின் முழு பொறுப்பையும் தன் வசம் வைத்திருக்கும் முதல் அமைச்சருக்கே சாத்திமில்லாதபோது, ஊரக வளர்ச்சித்துறையை வைத்துக் கொண்டு மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி இனிவரும் காலங்களில் தள்ளாட போகிறார் என்கிறார்கள் அவரது வளர்ச்சியில் அக்கறை கொண்ட நலம் விரும்பிகள்.

சாலை வசதி இல்லை., குடிநீர்வசதி இல்லை என்று கிராமங்கள்தோறும் இடைவிடாது எழும் பொதுமக்களின் கோரிக்கைகளை எல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி என்பதுன் மிகப்பெரிய கேள்வியாக எழுந்திருக்கிறது.

திமுக அரசில் இரண்டாவது முறையாக அமைச்சரவையில் நடைபெற்ற மாற்றத்தில் மிகப்பெரிய தியாகி அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்தான். கடந்த 18 மாத கால நிர்வாகத்தில் பெரியளவில் குற்றச்சாட்டுகள் எழாத போதும், அவர் நிர்வகித்து வந்த ஊரக வளர்ச்சித் துறையை தியாகம் செய்திருக்கிறார்.

கொடுத்தவரே பறித்துக் கொண்டார் என்பதை போல, ஊரக வளர்ச்சித்துறையை இழந்து கூட்டுறவுத் துறைக்கு அமைச்சராகி இருக்கிறார் கே.ஆர். பெரியகருப்பன்.

கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள், அடிதட்ட மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் என்பதால், சிறப்பு கவனம் செலுத்தி, துறையின் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸோடு ஒருமித்த உணர்வோடு செயல்பட்டால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு மிகப்பெரிய நற்பெயரை தேடித் தந்துவிட முடியும் என்பதை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் உள்மனதில் ஆழமாக பதித்துக் கொள்ள வேண்டும் என்பதே கூட்டுறவுத்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.