Thu. Apr 25th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இரண்டாவது முறையாக நாளை மறுநாள் (டிசம்பர் 14) மாற்றியமைக்கப்படவுள்ளது.

முதல்வரின் புதல்வரும் சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

திமுக மேலிட தலைவர்களிடம் அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடியுள்ளார். திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதையடுத்து, அமைச்சரவை மாற்றியமைப்பதற்கான நாளாக டிசம்பர் 14 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய அமைச்சர் மெய்யநாதன் வகித்து வரும் துறைகளான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை உதயநிதிக்கு வழங்கப்படுகிறது.

அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை பொறுப்பை வகிப்பார்.

மேலும் கடந்த ஆண்டு (2021) மே மாதம் 7 ஆம் தேதி திமுக அரசு பதவி ஏற்ற நாள் முதலாகவே தனக்கு ஒதுக்கப்பட்ட கூட்டுறவுத் துறை குறித்து அதிருப்தி தெரிவித்து வந்த மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு  வரும் 14ல் ஊரக வளர்ச்சித்துறையை ஒதுக்கீடு செய்ய முதல்வர் முன் வந்துள்ளார்.

 கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தில் அரசு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் முதல்வர் பயணம் செய்தபோது, அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோரும் பயணம் செய்தனர். இரவுநேர பயணத்தில் அமைச்சரவை மாற்றியமைப்பது குறித்தும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் வழங்குவது குறித்தும் தனது விருப்பத்தை முதல்வர் தெரிவித்துள்ளார்.  

அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பண்ணனுக்கு கூட்டுறவு துறையும் நாமக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் வசம் இருக்கும் சுற்றுலாத்துறை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.ராமச்சந்திரனுக்கு மாற்றி தரப்படும் என்றும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் மதிவேந்தன் வனத்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று வெளியாகியுள்ள தகவல்களை திமுக மேலிட தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், நீண்ட கால அரசியல் பயணத்திற்குப் பிறகு அவரின் 53 வயதில்தான் (2006) அமைச்சராக பதவியேற்றார். ஆனால், அவரது புதல்வரான உதயநிதி ஸ்டாலின் 45 வது வயதிலேயே அமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ளார்..

கடந்த பல மாதங்களாக திமுக இளைஞரணி நிர்வாகிகளிடம் மிகுந்த எதிர்பார்ப்புடன் விசாரிக்கப்பட்டு வந்த உதயநிதி அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி, திமுக ஆட்சி இரண்டாம் ஆண்டை நிறைவு செய்யும் காலத்தில் நிஜமாகவுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்கும் நாளை திமுக இளைஞரணி நிர்வாகிகளும், முன்னணி தலைவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

அமைச்சராக பதவியேற்கும் நாள் உறுதியானதையடுத்து, அன்றைய தினமே தலைமைச் செயலகத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது அமைச்சர் பணியை துவங்கும் விதமாக, அமைச்சருக்கு உரிய அலுவலக அறை துரித கதியில் தயாராகி வருகிறது. பகல்,இரவு பாராமல் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். முதல் அமைச்சர் அலுவலக அறைக்கு அருகிலேயே உதயநிதி ஸ்டாலினுக்கு அலுவலக அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.