Sun. May 19th, 2024

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையில் 73 கிலோ எடைகொண்ட கேக்கை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டனர்.

நமது புரட்சித் தலைவி அம்மா என்னும் பெயரிலான சிறப்பு மலரை வெளியிட்டதுடன், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல், இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தனர்.

மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், நவீன தமிழகத்தை வளர்த்தெடுத்த அன்னையாகவும், ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு அம்மாவாகவும் இருந்து எங்களை ஆளாக்கிய அம்மாவின் 73வது பிறந்தநாளில் அவர்களை போற்றி வணங்குகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தியாகராய நகரில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுக்கு மத்தியில் பேசிய சசிகலா,

சட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்.ஜெயலலிதாவின் உடன் பிறப்புகள் மீண்டும் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்று கூறினார்.

இதேபோல, மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.