Sun. May 19th, 2024

சேலம் மாநகர காவல்துறை, பிற மாவட்ட தலைநகரங்களுக்கு முன்னோடியாக நவீனமயமாகி வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு இணையாக தொழில் நுட்பத்தை அதிவேகமாக பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது.

மாநகரில் குற்றச் செயல்களை குறைக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், நகரின் பல பகுதிகளில் கண்காணிப்பு கேமிரா எனப்படும் சி.சி.டி.வி. கேமிராக, பரவலாக பொருத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக ரோந்து செல்லும் போக்கவரத்து காவலர்கள், குற்றச் செயல்களை வீடியோ வடிவில் நிகழ்விடங்களிலேயே பதிவு செய்யும் வகையில், ரோந்து போலீஸாருக்கு சட்டையில் பொருத்தும் கேமராக்களை அதிகளவு மாநகர காவல்துறை தருவித்துள்ளது. அதன் ஒன்றின் மதிப்பு ரு..21 ஆயிரம் ரூபாய் ஆகும்.

குற்றச் செயல்களை துல்லியமாக பதிவு செய்யும் பட்டன் வடிவிலான அதிநவீன கேமிராவை, ரோந்து போலீஸாரின் சீருடையில் பொருத்தும் பணி, சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) சந்திரசேகரன் முன்னிலையில், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார். காவலர்களின் சீருடையில் பொருத்தி, ரோந்து பணியை துரிதப்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், மாநகர ஆணையர் சந்தோஷ்குமார் பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினார்.

பணியின்போது, எவரேனும் தகாத முறையில் பேசினாலும், குற்றவாளிகளை தேடிச் செல்லும்போது அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடும்போதும், கேமரா மூலம் நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும். இது விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக அமையும்.

மேலும், போலீஸார் அவதூறாக பேசியதாக எவரேனும் மோசடியாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும்போது, கேமரா பதிவின் மூலம் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்கட்டமாக 9 காவல் நிலையங்களுக்கு தலா 3 கேமராக்கள் வழங்கப்பட்டன.சேலம் மாநகரம், அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட 9 காவல் நிலையங்களைச் சேர்ந்த ரோந்து காவலர்களுக்கு வழங்கபபட்டது.

இதேபோல, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முக்கிய நிகழ்வுகளின் போதும் பயன்படுத்துவதற்கு வசதியாக மைக்குடன் கூடிய ஸ்பீக்கர் செட்டும் வழங்கப்பட்டன.