Mon. Aug 8th, 2022

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்….

பள்ளி நிர்வாகிகளை உடனடியாக கைது செய்யக்கூடாது என உத்தரவுப் போட்டது யார்?

ஸ்ரீமதியின் கடைசி நிமிட சிசிடிவி காட்சிகளை வெளியிடாமல் தடுத்த சக்தி எது?

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தில் மறைந்திருக்கும் சந்தேகங்களுக்கு 10 நாட்கள் எட்டிய நிலையிலும் பதில் கிடைக்கவில்லை.

ஜூலை 17 க்கு முன்பு பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக புறந்தள்ளும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக, ஸ்ரீமதி படித்த சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு ஆதரவை திரட்டும் வகையிலும், காவல்துறை தலைமை மீது எந்த தவறும் இல்லை என்று  நற்சான்றிதழ் வழங்கும் வகையிலும் பரப்புரை வேகமெடுத்துள்ளது.

இந்த பரப்புரையின் மீது நல்லரசுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை முன்வைக்கிறோம்.

ஸ்ரீமதி மரண நிகழ்வு நடந்து 5 நாட்களுக்குப் பிறகும், அதாவது ஜூலை 17 அன்றுகூட ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு உரிய விளக்கம் காவல்துறையினரால் நேரடியாக அளிக்க முடியாத நிலையிலும், காவல்துறையின் செயல்பாடுகளை  நியாயப்படுத்தும் வகையிலும் பள்ளி நிர்வாகத்தின் மீது பரிதாபம் ஏற்படும் வகையிலும் பல்வேறு கட்டுக்கதைகள் சமூக ஊடகங்களில் அவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

காவல்துறைக்கு எதிராக இரண்டே இரண்டு கேள்விகள்தான்… இவை சாதாரணமானவைதான்.

பள்ளி நிர்வாகிகளை காவல்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த நாள் ஜூலை 13.

ஸ்ரீமதியின் உடல், உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நாள் அன்றே (ஜூலை 13) பள்ளி வளாகத்தையும் அதன் நிர்வாகிகளையும் காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபோது, மர்ம மரணத்திற்கு எதிரான குரல்கள் வலுக்க தொடங்கிய நேரத்திலேயே,  சிசிடிவி காட்சிப் பதிவுகளை உடனடியாக வெளியிடாமல் தவிர்த்தது, தாமதித்தது ஏன்?

இந்த கேள்விக்கு இந்த நிமிடம் வரை பதில் இல்லை. அன்றைய தினமே சிசிடிவி காட்சிகளை வெளியிட்டிருந்தால், பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளும் எழாமல் பதற்றத்தை தணித்திருக்க முடியும்

இரண்டாவது கேள்வி… ஸ்ரீமதி தற்கொலையே செய்து கொண்டிருந்தாலும், தற்கொலைக்கு தூண்டிய காரணத்திற்காக பள்ளி நிர்வாகிகள் ரவிக்குமார், சாந்தி, முதல்வர் ஆகிய 3 பேரை கைது செய்திருக்க வேண்டும்.

கைது செய்வதற்கு முகாத்திரம் இருப்பதை உறுதி செய்வதற்கான ஆவணமாக மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதத்தையே காட்டியிருக்கலாம்.

இதுபோன்று நடவடிக்கைகளை உடனடியாக  எடுக்காமல், பள்ளி நிர்வாகிகளை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்ட சக்தி எது? சட்டப்படி செயல்பட முடியாமல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் கைகளை கட்டிப் போட்ட சக்தி எது?

இந்தநேரத்தில்தான், 2001 ஆம் ஆண்டில் தமிழகத்தையே உலுக்கியெடுத்த வரலாற்று நிகழ்வு ஒன்றில் காவல்துறை எப்படி செயல்பட்டது என்பதை நினைவுக் கூர்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது.

2001 ஜுன் 30 ல் திமுக தலைவர், முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியை நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து சென்னை மாநகர காவல்துறையினர் கைது செய்கின்றனர். விடிந்த பிறகு அவர் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார் என்பதே தெரியாததால் திமுக முன்னணி தலைவர்கள் ஆவேசத்துடன் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியதுடன், கடும் எச்சரிக்கையும் விடுத்தனர். அதே நேரத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பான கலைஞர் கைது காட்சிகளில், கொல்றாங்கப்பா என்று அவர் உயிர் பயத்தில் அலறுவது போன்ற கரகரப்பான குரல், மாநிலம் முழுவதும் திமுக தொண்டர்களிடம் மட்டுமல்ல, ஆதரவுக் கூட்டத்தினரையும் கொதிக்க வைத்து, சாலை மறியல் போராட்டத்தை நோக்கி இழுத்துச் சென்றது.

காலை 11 மணியளவில் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது என்று தகவல் கிடைத்தவுடன் சென்னை எழும்பூரில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்புக்கான அவசர அழைப்பை அப்போதைய காவல் ஆணையர் முத்துக்கருப்பன் ஐபிஎஸ் விடுத்தார். அந்த சந்திப்பில், காவல்துறை தரப்பில் கலைஞர் கைது செய்யப்பட்ட  போது எடுக்கப்பட்ட வீடியோவை ஒளிப்பரப்பினார்கள். அந்த காட்சிகளில், கொல்றாங்கப்பா என்று கலைஞர் கூறவில்லை. டப்பிங் செய்யப்பட்டுதான் ஒளிப்பரப்பட்டு வருகிறது என்று முத்துக்கருப்பன் ஐபிஎஸ் விளக்கம் அளித்தார். அப்போது சன் டிவி செய்தியாளரான டி.ஆர்.பாலு எம்பியின் புதல்வி மனோன்மணி, கலைஞரின் கையை பிடித்து இழுப்பதே சட்ட மீறல், மனித உரிமைக்கு எதிரானது என்று கடுமையாக வாக்குவாதம் செய்தார். அதன் காரணமாகவே பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு ஆணையர் முத்துக்கருப்பன் வெளியேற, செய்தியாளர்கள் சந்திப்பு முழுமையடையவில்லை.

கலைஞர் கைது செய்யப்பட்ட நிகழ்வின் வீடியோ பதிவுகளையே சில மணிநேரங்களில் காவல்துறை வெளியிட்டு விளக்கிய நிலையில், கலைஞர் கைதில் இல்லாத மர்மங்களா ஸ்ரீமதி பற்றிய சிசிடிவி கேமிரா பதவிகளில் மர்மங்கள் நிறைந்திருந்தன?.

உயிரிழப்புக்கு முதல்நாள் பள்ளி விடுதியில் ஸ்ரீமதி நடமாடிய கண்காணிப்பு கேமிரா பதிவு காட்சிகளை வெளியிடாமல் காலம் தாழ்த்தியதற்கான காரணம் என்ன ? என்பதை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை மட்டுல்ல, தமிழ்நாடு காவல்துறைக்கு தலைமை வகித்துக்கொண்டிருக்கும் தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ்ஸும் விளக்க வேண்டும் என்பதுதானே பெரும்பான்மையானோரின் கேள்வியாக இருந்து கொண்டிருக்கிறது.

ஊடகங்கள் உண்மையை பேசினாலோ, அரசுக்கு எதிராக கேள்வி கேட்டாலோ, அரசின் அராஜகத்தை வெளிப்படுத்தினாலோ, காவல்துறை அதிகாரியான சைலேந்திரபாபு ஐபிஎஸ்ஸுக்கு எப்போதுமே பிடிக்காது, நெற்றிக்கண்ணை திறந்துவிடுவார் என்கிறார் சாத்வீகமான மனப்போக்கு கொண்டகாவல்துறை அதிகாரிகள் சிலர். அதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும், கலைஞர் கைது நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான கண்டனப் பேரணியை, அப்போது அண்ணா அறிவாலயத்தில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்த சன் டிவி, இடைவிடாமல் நேரலையாக ஒளிப்பரப்பிக் கொண்டிருந்து. அதைப்பார்த்து அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா எரிச்சல் அடைகிறார் என்ற தகவல் கிடைத்தவுடன், அன்றைக்கு சென்னை காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்த சைலேந்திரபாபு ஐபிஎஸ் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் உதாரணமாக முன்வைக்கிறார்கள்.

அவரது தலைமையின் கீழ் பணியாற்றிய காவல்துறை அலுவலர்கள் அண்ணா அறிவாலயத்திற்குள் நுழைந்து சன் டிவி அலுவலகத்திலேயே தாக்குதல் நடத்திய கொடூர செயல்களை எல்லாம் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தார் என்கிறார்கள் அந்த நிகழ்வினால் ஏற்பட்ட காயங்களை இன்றைக்கும் மறக்க முடியாத மூத்த ஊடகவியலாளர்கள். 

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதைவிட, அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு உயிர் பயத்தை காட்ட வேண்டும் என்பதில்தான் குறியாக இருப்பார் என்று விமர்ச்சிக்கும் அளவுக்கு பெயரெடுத்துள்ள டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ், கனியாமூர் பள்ளி நிர்வாகிகளை உடனடியாக கைது செய்யாமல் இருக்க, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்தறை அதிகாரிகளின் கைகளை கட்டிப் போட்டிருப்பாரா? என்று கனியாமூர் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

ஏன் இந்த பேச்சு முக்கியமானதாக படுகிறது என்றால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உள்ளடக்கி 10 மாவட்டங்களுக்கு உயரதிகாரியாக இருப்பவர் தேன்மொழி ஐபிஎஸ்.  வடக்கு மண்டல ஐஜி ஆக பதவி வகித்து வரும் அவர், மிகமிக கண்டிப்பானவர், நேர்மையான அதிகாரி என்று ஐஜி அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளே பெருமிதமாக சொல்கிறார்கள். மேலும் கடமை என்றால் துளியளவு கூட சமரசம் செய்து கொள்ள மாட்டார் என்றும் காவல்துறையின் கண்ணியத்திற்கு களங்கும் ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளில் காவல்துறை அலுவலர்கள் நடந்து கொண்டால், முதலில் எச்சரிப்பார்..அப்போதும் திருந்திக் கொள்ளவில்லை என்றால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனக்கு மேல் உள்ள உயரதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமான அறிக்கையை அனுப்பி வைக்கும் அளவுக்கு உறுதியான மனநிலை கொண்டவர் என்றும் கூறுகிறார்கள் சக அதிகாரிகள்.

அப்படிபட்ட ஐஜி தேன்மொழி ஐபிஎஸ், ஸ்ரீமதி விவகாரத்தில் என்னென்ன உத்தரவுகளை பிறப்பித்தார்? கடந்த 13 ஆம் தேதி முதல் கலவரம் நடந்த 17 ஆம் தேதி வரை உயரதிகாரிகளுக்கு அவர் அனுப்பி வைத்த தகவல்கள் என்ன? பரிந்துரைகள் என்ன? டிஜிபி, உள்துறைச் செயலாளர் ஆய்வின் போது அவர் அளித்த விளக்கம் என்ன? என்பதெல்லாம் மர்மமாகவே இருக்கிறது என்று கூறும் கள்ளக்குறிச்சி சமூக செயற்பாட்டாளர்கள், வரலாறு காணாத கலவரம் என்று விமர்ச்சிக்கப்படுகிற நிகழ்வில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் கூடுதல் காவல்துறை இயக்குனர் (சட்டம் ஒழுங்கு) தாமரைக்கண்ணன் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்வி எல்லாம்  கேட்க தெரிந்தவர்களுக்கு, நிகழ்வு நடத்த இடம் உள்பட 10 மாவட்டங்களின் பொறுப்பு அதிகாரியான தேன்மொழி ஐபிஎஸ் எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி யாருமே வாய் திறக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? என்கிறார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றும் வகையிலும், காவல்துறை மீது எந்த தவறும் இல்லை என்ற வகையிலுமான செய்திகள், சமூக ஊடகங்களில் பரப்பும் பணி முழு வீச்சில் நடக்கிறது.

இதன் பின்னணியில் காவல்துறையில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் இருக்கிறார். தன் மீது விழுந்துள்ள கறையை துடைத்து கொள்ள படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் சந்தேக குரலில் பேசுகிறார்கள் கள்ளக்குறிச்சி சமூக செயற்பாட்டாளர்கள்.

நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்துள்ள ஐஜி தேன்மொழி ஐபிஎஸ், ஸ்ரீமதி மர்ம மரண விவகாரத்தில், காவல்துறை மீது சுமத்தப்பட்டிருக்கும் களங்கத்தை துடைக்க தன் மௌனத்தை கலைப்பாரா?

2 thoughts on “ஐஜி தேன்மொழி ஐபிஎஸ் மௌனத்தை கலைப்பாரா?”

Leave a Reply

Your email address will not be published.