Sun. Aug 7th, 2022

தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்…

இப்படியொரு தலைப்பில் தப்பித்தவறி கூட செய்தி வெளியிட்டு விடக் கூடாது என்பதில் திடமாக இருந்து வந்தேன். ஆனால், தூண்டிவிடும் வகையில் இரண்டு அம்சங்கள் எழுந்ததையடுத்து, 15 நாட்களுக்கு முன்பு உயர் காவல்துறை அதிகாரிகளிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவலை பதிவு செய்யவே இந்த கட்டுரை..

ஒன்று, நேற்றிரவு சிபிசிஐடி தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை.

மற்றொன்று சத்யம் டிவிக்கு சவுக்கு சங்கர் அளித்த நேர்காணல்…

கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 17 வயது மாணவி இறந்தது தொடர்பாக செய்தி வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்தே, அதாவது ஜூலை 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி காலை வரை கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர்  மாவட்டங்களில் மட்டுமே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு அறவழியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மக்களின் அறச்சீற்றத்திற்கு உரிய முறையில்  காவல்துறை தீர்வு கண்டிருந்தால் திமுக அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில்  ஜூலை 17 ஆம் தேதி வன்முறையே நிகழ்ந்து இருக்காது.

முந்தைய அதிமுக ஆட்சிக்கு தூத்துக்குடி கலவரம் எப்படியொரு களங்கமாக அமைந்ததோ அதேபோல, கனியாமூர் பள்ளி கலவரம் திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தி விட்டது. முந்தைய களங்கத்தில் முழு அவப்பெயரும் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது விழுந்த நிலையில், நல்லவேளையாக கனியாமூர் கலவர நிகழ்வில், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது விழவில்லை.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும் ஜூலை 17 ல் நண்பகலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் மூலம் வெளியிட்ட அறிவிப்பு, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்களுக்கு நிம்மதியை தந்தது. ஆனால், அதே நேரத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் அளித்த பேட்டி, போராட்டக்காரர்களை ஆத்திரம் மூட்டும் வகையில் அமைந்தது. இதன் பிறகுதான், ஒட்டுமொத்த மக்களின் கோபம்,  திமுக அரசு மீது விழாமல் காவல்துறை மீதே திரும்பியது.

கனியாமூர் கலவர நிகழ்வில், காவல்துறையும், உளவுத்துறையும் படுதோல்வி அடைந்துவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் அனைத்து தரப்பினராலும் எழுப்பப்பட்டுவிட்டது.

கனியாமூர் விவகாரத்தில் திமுக அரசுக்கு தனிப்பட்ட முறையில் எந்தவொரு உள்நோக்கமே இல்லை என்று நான் மட்டுமல்ல, இதுபோன்ற நிகழ்வில் களத்தில் நின்ற அனுபவம் கொண்ட ஊடகவியலாளர்கள் அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் நக்கீரன் யூடியூப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த பிரபல ஊடகவியலாளர் எஸ்.பி.லட்சுமணனின் வாதத்தை எடுத்துக் கொள்ளலாம்.  

கனியாமூர் கலவரம் தொடர்பாக நல்லரசுவும் செய்தி வெளியிட்டது. தமிழகத்தில் எந்த ஊடகமும் முன் வைக்காத கருத்துகள் நல்லரசு செய்தியில் இடம் பெற்றது. கலவரமாக, வன்முறையாக பார்ப்பதற்காக பதிலாக, அதை விரும்பதகாத நிகழ்வாகவே நல்லரசு பார்த்தது.

சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தின் மீது அந்த பகுதி மக்களுக்கு குறிப்பாக பெற்றோர்களுக்கு இருந்த கோபமே, வன்முறை நிகழ்வுக்கு வித்தாக அமைந்துவிட்டது என்பதை வெளிப்படுத்தினோம்.

இப்போதும் கூட ஒருபிரிவினர் மட்டுமே சட்டத்தை கையில் எடுத்தார்கள் என்று குற்றம் சாட்ட நல்லரசுக்கு விருப்பமே இல்லை.

மேலும், கலவரத்தில் கைது செய்யப்படுவோரில் பெரும்பான்மையானோர் அப்பாவி இளைஞர்கள், அவர்களின் கைதைக் கண்டித்தும் அவர்களின் விடுதலைக்காகவும் மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் நல்லரசு கோரிக்கை வைத்தது.

புகழ்பெற்ற வழக்கறிஞர் பால் கனகராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக இருந்த காலத்தில், இருதரப்பினருக்கு இடையேயான வர்த்தக ரீதியிலான தகராறுக்குகூட 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் சென்னையில் இருந்து மாவட்டங்களுக்கே நேரில் சென்று ஒருதரப்புக்கு ஆதரவாககூட போர்க்குரல் எழுப்பியுள்ள நிலையில், கனியாமூர் கலவர வழக்கில் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நேரத்தில், அவரிடம் அறச்சீற்றமே எழவில்லை என்பது வேதனையளிக்கிறது.

17 வயது பெண் குழந்தையை பறிகொடுத்த பெற்றோருக்கோ, பாதிக்கப்பட்ட மக்களுக்காகவோ பால் கனகராஜ் ஒரு வார்த்தை கூட கூறாதது அதிர்ச்சியை அளிக்கிறது. போராட வேண்டியவர்கள் எல்லாம் மௌனமாக இருப்பதற்கான காரணம் புரியவில்லை.

ஆனால், ஊடகத் தர்மத்தோடு நக்கீரன் ஆசிரியர் கோபால், கடந்த பல நாட்களாக கனியாமூர் கலவரத்தை அக்குவேர், ஆணிவேராக பிரித்து மேய்ந்து விட்டார். அவர் வெளியிட்ட வீடியோக்கள் மக்களை சென்றடைந்ததைப்போல வேற எந்தவொரு வீடியோவும் மக்களிடம் பேராதரவு பெற்றதாக தெரியவில்லை.

பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்புவின் நேர்காணல் உள்பட நக்கீரன் வெளியிட்ட அனைத்து வீடியோக்களும், செய்திக் கட்டுரைகளையும் கனியாமூர் பள்ளி மாணவியின் மரணம், கொலைதான் என்று அடித்து கூறிவிட்டது.

இதேபோல, அறம் இணைய தள ஆசிரியர் தோழர் சாவித்திரி கண்ணனின் செய்திக் கட்டுரைகள், பள்ளி மாணவி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று அழுத்தம் திருத்தமாகவே வாதிட்டிருக்கிறது. 

பிரபல யூடியூப் சேனல்களும், கனியாமூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுவதை ஏற்று கொள்ள முடியாத அளவுக்கு சந்தேகங்கள் நிறைய எழுந்திருக்கின்றன என்று திரும்ப திரும்ப கூறிவந்தன.

மாணவி மரணம் தொடர்பான விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பிறகும்,  பள்ளி கலவரம் குறித்து போலீஸ் டிஜஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்ட பிறகும்தான், நக்கீரன் மற்றும் யூ டியூப் சேனல்கள் உள்பட சமூக ஊடகங்களில் கனியாமூர் கலவரம் தொடர்பாக பல்வேறு தரவுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது.

இவற்றையெல்லாம் உள்வாங்கி கொண்ட தமிழக மக்கள், மாணவி தற்கொலைதான் செய்துகொண்டிருப்பார் என்று நம்புவார்களா, என்ன?

ஆனால், தமிழகத்தில், இந்தியாவில், ஏன் உலகத்திலேயே ஒரே ஒரு நபர் மட்டும் இந்த நிமிடம் கூட பள்ளி மாணவி தற்கொலைதான் செய்து கொண்டார் என்று அடித்து கூறிக் கொண்டிருக்கிறார்.

அவர் யார் என்றால் சவுக்கு சங்கர்..

மாணவி இறந்ததாக கூறப்பட்ட நாளான ஜூலை 13 ஆம் தேதியே பள்ளி வளாகம் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. கலவர நாளான 17 ஆம் தேதிக்குப் பிறகு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவினர் வசம் சென்றுவிட்டது.

இரு பிரிவுகளின் கட்டுப்பாட்டின் கீழ் பள்ளி வளாகம் வந்த பிறகுதான் அந்த பள்ளியை கள ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற சவுக்கு சங்கருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை துணையுடன் அந்த பள்ளியை அவர் பார்வையிட்டிருக்கிறார். இந்த தகவலை சத்யம் டிவி தொலைக்காட்சி நேரலையில் நேற்றைய தினம் அவரே கர்வத்தோடு கூறியிருக்கிறார்.

கனியாமூர் கலவர விவகாரத்தில் காவல்துறை மீது விழுந்த களங்கத்தை துடைத்தெறிய சவுக்கு சங்கரை, தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ்ஸும், உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ்ஸும் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் 15 நாட்களுக்கு முன்பே நல்லரசுக்கு கிடைத்ததால்தான், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய வடக்கு மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி) தேன்மொழி ஐபிஎஸ், மௌனத்தை உடைப்பாரா? என்று நல்லரசு செய்தி வெளியிட்டது.

கலவரத்தின்போது, பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட டிஜஜி பாண்டியன் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்பி செல்வகுமார் காயமடைந்தார். இவர்களை எல்லாம் வழிநடத்த கூடிய ஐஜி தேன்மொழி ஐபிஎஸ் எங்கே இருந்தார்? மாணவி இறந்த நாள் முதல் கலவரம் நடந்த நாள் வரை அவருக்கு கிடைத்த தகவல்கள் என்ன? அவர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்த தகவல்கள் என்னென்ன? பதில் கூறுவாரா ஐஜி என்பதுதான் அந்த கட்டுரையின் நோக்கமாக இருந்தது.

பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக சவுக்கு சங்கர் தனி வீடியோ வெளியிட்டதன் பின்னணில் ஐஜி தேன்மொழி ஐபிஎஸ்தான் இருந்திருக்கிறார். தமிழ்நாடு காவல்துறை மீதான களங்கத்தை துடைக்க சவுக்கு சங்கரை, ஐஜி தான் பயன்படுத்திக் கொண்டார் என்பது காவல்துறை உயரதிகாரிகளிடம் இருந்து பத்து நாட்களுக்கு முன்பாகவே நல்லரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இப்படியொரு தகவலை உதாசீனப்படுத்தாமல் போனதற்கு முக்கிய காரணம், கலவரம் நடந்த நாள் முதல் தொடர்ச்சியாக பேட்டியளித்த சங்கர், வன்முறைக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம், எம்எல்ஏக்கள் பள்ளி நிர்வாகத்திடம் 30 லட்சம் ரூபாய் மிரட்டி வாங்கி விட்டார்கள் என்றெல்லாம் கூறி வந்தவர், அந்தர்பல்டி அடிக்கும் வகையில் கள ஆய்வுக்குப் பிறகு துளியும் மனசாட்சியின்றி பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசியதுடன், மாணவி மீதும் பெற்றோர் மீதும் அவதூறு பரப்பியதுதான் கவலையை ஏற்படுத்தியிருந்தது.

சவுக்கு சங்கர் மீது நல்லரசுக்கு உள்ள ஒரே கோபம்.. பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட இடத்தை, காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும்கூட சங்கர் பார்வையிடுவாராம். ஆனால் பத்து மாதம் பெற்றெடுத்த குழந்தையை பறிகொடுத்த தாய், பார்க்க வேண்டும் என்று கேட்டால், அவர் என்ன சிபிசிஐடி ஐஜியா? என்று திமிரோடு கேட்கிறார் என்றால்., இவரெல்லாம், ஊடகவியலாளர் என்று தன்னை அழைத்துக் கொள்வதற்கு தகுதியானர்தானா?

நிறைவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரே வேண்டுகோள்தான்….

கனியாமூர் கலவர வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிவிடுங்கள். ஜனநாயகத்தை மதிப்பவர் என்ற முறையில் நாட்டு மக்கள் உங்களை பாராட்டுவார்கள்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணையத்திற்கு வெட்டியாக மக்கள் வரிப்பணத்தை செலவழித்துக் கொண்டிருப்பதை போல, கனியாமூர் கலவர வழக்கை விசாரிப்பதற்கும் மக்களின் வரிப்பணத்தையும் வீணாக்காதீர்கள்.

காவிரி கரையோர மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் துயரை துடைக்க, கனியாமூரில் உண்மையை தேடிக் கொண்டிருக்கம் காவல்துறையை அனுப்பி வைத்தால், தமிழக அரசுக்கு நல்ல பெயராவது கிடைக்கும்…

Leave a Reply

Your email address will not be published.