Sat. Nov 23rd, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்….

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பதவியேற்றவுடன் முதல் அமைச்சர் அலுவலக செயலாளர்களாக நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

நெம்பர் 1  செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ், நெம்பர் 2 இடத்தில் டாக்டர் உமாநாத் ஐஏஎஸ், நெம்பர் 3 இடத்தில் சண்முகம் ஐஏஎஸ், நெம்பர் 4 இடத்தில் அனு ஜார்ஜ் ஐஏஎஸ்ஸும் பணியாற்றி வருகிறார்கள்.

தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் நான்கு செயலாளர்களுக்கும் அலுவலகம் உண்டு. முதல்வர் துயில் கொள்ளும் நேரத்தை தவிர எஞ்சிய நேரங்களில் இந்த நான்குச் செயலாளர்களும் முதல்வரின் இல்லம் அல்லது தலைமைச் செயலகம் என எங்கு முதல்வர் இருக்கிறாரோ அங்கு இவர்கள் பணியாற்றி கொண்டிருப்பார்கள்.

நெம்பர் 1 உதயச்சந்திரன் ஐஏஎஸ் – நெம்பர் 2 மருத்துவர் உமாநாத் ஐஏஎஸ்…

தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள 50 க்கும் மேற்பட்ட துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளின் செயல்பாடுகள், கண்காணித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நால்வர் அணிதான் மேற்கொண்டு வருகிறது. இந்த நான்கு அதிகாரிகளின் பார்வைக்கு வராமல் எந்தவொரு அரசு கோப்பும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு செல்லாது என்பதால், முதல் அமைச்சர்களின் செயலாளர்கள் என்ற அந்தஸ்தில் நான்கு அதிகாரிகளுக்கும் மூத்த அமைச்சர்களுக்கு கிடைக்கும் மரியாதைக்கு இணையாகவே கிடைத்து வருகிறது என்கிறார்கள் தலைமைச் செயலக அலுவலர்கள்.

அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு அவரது நான்கு செயலாளர்களின் அதிகாரமும், இதற்கு முந்தைய திமுக ஆட்சிகளில் இல்லாத அளவுக்கு கொடி கட்டி பறக்க தொடங்கி விட்டதாகவும், அதுவும் நெம்பர் 1 செயலாளரான உதயச்சந்திரன் ஐஏஎஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இணையான அதிகாரம் படைத்தவராகவே மாறிவிட்டார் என்றும் அவரை விட பணிமூப்பு அடிப்படையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான பலர், கடந்த ஆண்டு முதலே புகார் படலம் வாசித்து வருகின்றனர்.

இவர்களைப் போல, ஜுனியர் அமைச்சர்கள், குறிப்பாக முதல்முறையாக அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளவர்கள், தத்தம் துறை ரீதியிலான செயல்பாடுகள், புதிய திட்டங்களை அமல்படுத்துதல், புதிய பணியாளர்கள் பணி நியமனம், பதவி உயர்வு வழங்குதல், பணியிட மாற்றம் என அன்றாட நடவடிக்கைகளுக்குக் கூட உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் அனுமதியை பெற்றால்தான், அவரவர் துறையில் எந்தவொரு திட்டங்களையும் நிறைவேற்ற முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளதால், உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் பெயரைக் கேட்டாலே ஜுனியர் அமைச்சர்கள் அலறுகிறார்கள் என்கிறார்கள் துறைச் செயலாளர்கள்.

சுதந்திரமாக செயல்பட முடியாததால் மனம் வெறுத்து போயிருக்கும் ஜுனியர் அமைச்சர்கள், முதல்வருக்கு மிகமிக நெருக்கமான மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு உள்ளிட்டோரிடம் தங்களுக்கு உள்ள இடர்பாடுகளைச் சொல்லி ஆதங்கப்பட்டுள்ளனர்.

தனித்த அதிகாரம் படைத்தவராக தன்னை காட்டி கொள்ளும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் செயல்பாடுகளை, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், ஜுனியர் அமைச்சர்கள் மூலம் கேட்டறிந்த மூத்த அமைச்சர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு சந்தர்ப்பங்களின் போது ஆழ்ந்த கவலையோடு விவரித்துள்ளனர். அதன் பிறகும் கூட உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை.

ஆட்சி நிர்வாகம் என்பது வேறு, கட்சி நிர்வாகம் என்பது வேறு என்பதை உணர்ந்து கொள்ளாத உதயச்சந்திரன் ஐஏஎஸ், ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து மனுஷனை கடித்த கதையாக, மூத்த அமைச்சர்களான துரைமுருகன் முதல் எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் வரை முதல்வருக்கு மிகமிக நெருக்கமான அமைச்சர்களின் துறைகளிலும் மூக்கை நுழைத்ததால், அவருக்கு எதிரான கோபம் பன்மடங்கு அதிகரிக்க தொடங்கியது.

திமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் திமுக அமைச்சரவையில் இரண்டாம் இடம் வகித்து வரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் துறையிலேயே உதயச்சந்திரன் ஐஏஎஸ் துணிச்சலாக தலையிட்டு, எந்தவொரு மாற்றம் என்றாலும், அதுதொடர்பான கோப்புக்கு தனது பரிந்துரை இன்றி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்புதல் பெற்றுவிட முடியாது என்ற நிலையை உதயச்சந்திரன் ஐஏஎஸ் உருவாக்கியதை கண்டு கொந்தளித்துவிட்டார் அமைச்சர் துரைமுருகன் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான விசுவாசிகள்.

இவரைப் போலவே, உதயச்சந்திரன் ஐஏஎஸ் என்ற பெயரைக் கேட்டாலே கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிடுகிறார் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி என்று கூறும் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர், ரேஷன் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப, புதிய பணியாளர்களை தேர்வு செய்வது தொடர்பான பணிக்கு ஒப்புதல் தராமல் 2 மாதத்திற்கு மேல் உதயச்சந்திரன் ஐஏஎஸ் இழுத்தடித்து வருவதால், தலைமைச் செயலகத்திற்கு வருவதையே அமைச்சர் ஐ.பெரியசாமி குறைத்துக் கொண்டார் என்கிறார்கள்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி…

அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி ஆகியோரின் வரிசையில் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் அவரவர் பங்கிற்கு உதயச்சந்திரன் ஐஏஎஸ் பற்றி புகார் பட்டியலை முதல்வரிடம் வாசித்துள்ளனர்.

இதன் பிறகும் கூட, தன் வழி தனி வழி என்று உதயச்சந்திரன் ஐஏஎஸ் செயல்பட்டு வருவதைப் பார்த்து கொதித்து எழுந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை31) முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து, உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் அதிகார மீறல்களை புகாராக வாசித்து, தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது உதயசூரியன் ஆட்சியா.. அல்லது உதயச்சந்திரனின் ஆட்சியா ?-என்று குமறியுள்ளார்.

அமைச்சர்கள் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்பதற்காகதான் அவரவர் துறைகளில் திறமைமிக்க அதிகாரிகளை நியமித்து இருக்கிறோம் என்று கூறும் உதயச்சந்திரன் ஐஏஎஸ், தலைமைச் செயலகத்தில் முக்கியமான துறைகளில் முதன்மைச் செயலாளராகவும், கூடுதல் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றுபவர்களில் எத்தனை பேர் நேர்மையான அதிகாரிகள் என்று கூற முடியுமா?  

முந்தைய அதிமுக ஆட்சியில் முக்கிய துறைகளில் பணியாற்றி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள்தானே திமுக ஆட்சியிலும் முக்கிய துறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் என ஆவேசத்தை வெளிப்படுத்திய அமைச்சர் துரைமுருகன், தனது துறையில் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் தலையீட்டால் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்தும் பட்டியலை நீட்டியதுடன், திமுக ஆட்சியில் அனைத்து அதிகாரங்களும் தன்னிடம் மட்டுமே உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ள உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸை அடக்கி வைக்க வில்லை என்றால் திமுக ஆட்சிக்கு மிகப் பெரிய அவப்பெயர் ஏற்பட்டு விடும் என்று பொரிந்து தள்ளியதாக கூறுகிறார்கள்.

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்….

தனது தந்தையும் மறைந்த திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியிடம் கூட இப்படி துரைமுருகன் ஆவேசம் காட்டியது இல்லையே? என்று கவலையில் ஆழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், நெம்பர் 1 செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் ஆகியோரை அழைத்து, மூத்த தலைவர் துரைமுருகனை நேரில் சந்தித்து பேசி, அவரது மன வருத்தத்தை போக்கி, அவரது அறிவுரைகளை கேட்டுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதன்பேரில், தலைமைச் செயலாளரும், நெம்பர் 1 செயலாளரும் அமைச்சர் துரைமுருகனை சந்தித்து சாந்தமாக பேசி, அவரை அமைதிபடுத்தியதுடன் அவர் கூறிய அறிவுரைகளை ஏற்றுக் கொள்வதாக கூறிவிட்டு திரும்பியதாகவும் தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.