தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்..
மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலேயே திமுகவின் அடுத்த தலைவர் யார் என்ற போட்டியில், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்றைய தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி ஆகியோரின் பெயர்கள் விவாதிக்கப்பட்டும், இருவர் இடையே கடும் போட்டியும் நிலவி வந்ததாக திமுக முன்னணி தலைவர்களே வெளிப்படையாக கூறிக் கொண்டிருந்தனர்.
மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி கருணாநிதி ஆகியோர் இடையே நேருக்கு நேர் போட்டி நிலவுவதற்கு முன்பாக, இந்த போட்டியில் மு.க.அழகிரியும் இருந்தார். இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அவர் நேரடியாக மோதியதால் கனிமொழி கருணாநிதி 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார். ஆனால், திமுகவில் இருந்து மு.க.அழகிரி ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்ட பிறகு, மு.க.ஸ்டாலின் தனித்த ஆளுமையாக திமுகவில் வளர்ந்தபிறகும் கூட அவருக்கு போட்டியாகவே கனிமொழி கருணாநிதியை முன்னிறுத்தும் பணிகளில் திமுக முன்னணி நிர்வாகிகள் மட்டுமல்ல, அடிமட்ட தொண்டர்களில் ஒரு பிரிவினர் முனைப்பு காட்டினர்.

கனிமொழியின் அசுர வளர்ச்சி, திமுக கட்சிக்குள் மு.க.ஸ்டாலினின் தலைமை பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கலைஞர் குடும்பத்து உறவுகளில் பலர் தூபம் போட்ட நேரத்தில், அவரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே உதயநிதி ஸ்டாலினை, திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவியில் நியமித்து, அவருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் காலத்தில் உதயநிதி ஸ்டாலினின் பரப்புரைக்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த தலைவர் உதயநிதி ஸ்டாலின்தான் என்பதை திமுகவினரிடம் மட்டுமின்றி தமிழக மக்களிடமும் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை இளைஞரணி அணி நிர்வாகிகள் துணிந்தே செய்தனர். திமுக நிர்வாகிகள் மத்தியில் திமுகவின் அடுத்த வாரிசு உதயநிதி ஸ்டாலின்தான் என்ற முழக்கங்கள் உரக்க ஒலிக்க துவங்கிய அதேகாலகட்டத்தில் கனிமொழி கருணாநிதியின் பங்களிப்பு திமுகவிற்கு இனிமேல் தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தின் கடைக்கோடி தொகுதியான தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி போட்டியிட்டதும் கூட, அவரை ஒரு எல்லைக்குள் நிறுத்தி முடக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்று கூறுவோரும் இன்றைக்கும் திமுகவில் இருக்கிறார்கள்.
திமுக எம்பி ஆக கனிமொழி கருணாநிதி செயல்பட துவங்கிய நாள் முதலாகவே அவரின் செயல்பாடுகள் தூத்துக்குடி தொகுதிக்குள்ளேயே முடங்கி போகும் அளவுக்கு திமுக தலைமையும் திட்டங்களை வகுத்து செயல்படுத்தியதாக அவரது விசுவாசிகள் வருத்தப்பட்டனர்.
கலைஞரின் வாரிசுப் பட்டியலில் இருந்த கனிமொழி எம்பி, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக முன்னணி பிரமுகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தையும் இழக்கும் வகையில் நிகழ்ச்சி நிரல்கள் வகுக்கப்பட்டு, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியை கடந்து மாநிலத்தின் பிற பகுதிகளில் கூட கனிமொழி கருணாநிதிக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடாத வகையில் திமுக தலைமை செயல்பட்டு வருவதாக, கலைஞர் காலத்து விசுவாசிகள் கவலையோடு பார்க்க தொடங்கினர்.
திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வரும் மரியாதை, புகழ்பாடும் பஜனை ஆகியவற்றில் சிறு துளியளவுக்கும் குறைவில்லாமல் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் முதன்மையானவருக்கு நெருக்கமான அமைச்சர் பெருமக்கள் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர்.
கட்சி செயல்பாடுகளிலும், ஆட்சி நிர்வாகத்திலும் கனிமொழி கருணாநிதியை புறக்கணிக்கும் மனநோய், அரசு அதிகாரிகளிடமும் பரவிவிட்டதே என்று மனம் நொந்து பேச தொடங்கிவிட்டனர்.

அமைச்சர்கள்,முன்னணி திமுக நிர்வாகிகள் எண்ணவோட்டத்திற்கு ஏற்ப, அரசு நிர்வாகமும் செயல்பட துவங்கிவிட்டது என்று வருத்தத்தோடு கூறும் கனிமொழி கருணாநிதி எம்பியின் தீவிர விசுவாசிகள், செய்தித்துறை சார்பில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வே சிறந்த உதாரணமாக இருக்கிறது என்கிறார்கள்
இலங்கைக்கு நேற்று மூன்றாவது முறையாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு கொடியசைத்து கப்பலை வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்ட இந்த நிகழ்வு குறித்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக்குறிப்பில் கனிமொழி கருணாநிதி எம்பியின் பெயரோ, அமைச்சர்களின் பெயரோ குறிப்பிடப்படவில்லை.
அதைவிட இருட்டடிப்பு செய்யும் விதமாக, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வு குறித்த புகைப்படங்களை அந்த துறைக்கு உரிய டிவிட்டர் பக்கத்திலும் இடம் பெறவே இல்லை.

கனிமொழி கருணாநிதி எம்பி இருட்டடிப்பு திட்டமும் திராவிட மாடல் ஆட்சியில் ஒன்றா? என்ற கேள்வியை முன்வைக்கிறோம்.
திமுகவின் முதன்மையானவரின் குடும்பத்திற்குள் உருவாகிவிட்ட மாற்றாந்தாய் மனப்பான்மை, அரசு அதிகாரிகளிடமும் ஊடுருவி விட்டதோ?
நிறைவாக, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குள்ளும் கனிமொழி கருணாநிதி எம்பியால் நிம்மதியாக நடமாட முடியவில்லை என்று கூறும் அவரது ஆதரவாளர்கள், திமுக தலைமையின் எண்ணவோட்டத்திற்கு ஏற்ப, மாவட்ட அமைச்சர்களில் ஒருவரான கீதா ஜீவனும், அவ்வப்போது எம்பியை நோகடிக்கும் வகையிலான சில செயல்களை அண்மைகாலமாக துணிந்தே செய்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள் வேதனைக்குரலில்….
Itís nearly impossible to find experienced people on this subject, but you sound like you know what youíre talking about! Thanks