Mon. Aug 8th, 2022

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…

காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் எப்படியெல்லாம் தரம் தாழ்ந்துவிட்டன என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி. ரமணா முன்வைத்த விமர்சனங்களின் சூடு இன்னும் குறையவில்லை. அதற்குள்ளாகவே, யார் யாரெல்லாம் எப்படியெல்லாம் காறி துப்பினாலும் ஊடக தர்மத்தை பற்றி எங்களுக்கு கவலையில்லை. தொடர்ந்து ஜனநாயகத்திற்கு விரோதமாகதான் செயல்படுவோம், ஒருபோதும் தங்கள் செயல்பாடுகளை திருத்திக் கொள்ள மாட்டோம் என்று சத்தியம் செய்யும் வகையில்தான் தமிழகத்தில் உள்ள ஊடகங்களின் நிலை இருக்கிறது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5 நாள் பயணமாக டெல்லி சென்றார். பிரதமர், உள்துறைச் அமைச்சர் ஆகியோரை  சந்திக்க  நேரம் கேட்டபோதும், ஒதுக்காமல் உதாசீனப்படுத்தியதால், எடப்பாடி பழனிசாமி அசிங்கப்பட்டு அவசரமாக சென்னைக்கு திரும்பி விட்டார் என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சமூக ஊடகங்கள் செய்தி பரப்பின என்றால், பொதுமக்களின் நம்பகத்தன்மையை பெற்றுள்ள தொலைக்காட்சிகளும் அதே சிந்தனையோடுதான் செய்தியை வெளியிடுகிறது என்று சொன்னால், ஊடக தர்மம் எங்கே இருக்கிறது? 

பொதுமக்களுக்கு 5 பைசாவுக்கு பயனளிக்காத விவாதங்களை மேற்கொள்வது, பொது வாழ்வில் துளியளவும் நேர்மையை கடைப்பிடிக்காதவர்களை அழைத்து விவாதங்களில் மணிக்கணக்கில் கத்த விடுவது போன்ற அறமற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தொலைக்காட்சிகள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. வெறும் ஊதியத்திற்காக மட்டுமே, கூடுதலாக சொல்ல வேண்டும் என்றால் தங்களின் அதிமேதாவிதனத்தை வெளிப்படுத்தும் விதமாக நெறியாளர்கள் சிலர் விவாதங்களின் போது பேசும் கருத்துகளை கேட்டு, அவர்களுக்கு எதிராக சராசரி மனிதர்கள் கூட முகம் சுழிக்கிறார்கள்.

யார் எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன? எங்கள் பிழைப்பில் மண் விழாமல் இருந்தால் போதும் என்ற நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவாதங்கள், அறிவார்ந்த பார்வையாளர்களால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

இப்படிபட்ட மதிப்பீடுகள் பொதுமக்களிடம் எழுந்துள்ள நிலையில், சன் நியூஸ் ஊடக தர்மத்திற்கே கொள்ளி வைக்கும் வகையில், அண்மைக்காலமாக விவாதங்களை முன்னெடுத்து வருவதும் குறிப்பாக, அதிமுகவின் உட்கட்சிக்குள் நடந்து கொண்டிருக்கும் பிரச்னையை ஊடகத் தர்மத்தோடு அணுகாமல், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற விமர்சனமும் பொதுதளத்தில் உரக்க கேட்டுக் கொண்டிருக்கிற வேளையிலும், அதைப்பற்றி எல்லாம் துளியும் கவலை கொள்ளவில்லை என்பதுதான் சோகமானது.

தங்களின் பணி ஓபிஎஸ்ஸை நேர்மையான அரசியல்வாதி என்ற பிம்பத்தை கட்டியெழுப்பி, இபிஎஸ் ஆதரவு அணியில் இருக்கும் நிர்வாகிகளை அவர் பக்கம் சாய வைப்பதும்,  பொதுமக்கள் மனதில் திணிப்பதும்தான் என்ற லட்சிய நோக்கத்தோடு சன் நியூஸ் அன்றாடம் செய்திகளையும் பரப்பிக் கொண்டிருக்கிறது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்த, ஜூலை 11 ஆம் தேதி காலை ஓ.பன்னீர்செல்வம் அடியாட்களோடுதான் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார் என்று அதிமுக எதிர்ப்பிலேயே ஊறித் திளைத்த நக்கீரன் இதழே கூறிய போதும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டில் நின்றுதான் சன் நியூஸ் செய்திகளை ஒளிப்பரப்பியது. அதைவிட கொடுமையாக, நேர்மையின் சின்னம் ஓபிஎஸ் என்பதை போலவும், ஊழல் என்ற வார்த்தைக்கே அவருக்கு அர்த்தம் தெரியாது என்பதை போலும், முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஓபிஎஸ் எந்தவொரு ஊழலிலும், முறைகேட்டிலும் ஈடுபட்டதே இல்லை என்பதை போலவும் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவு அமைச்சர்களும்தான் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், பொது சொத்தை கொள்ளையடித்ததை போலவும் எடப்பாடி பழனிசாமியையும், அவரது தலைமையை ஏற்றிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் குற்றவாளி கூண்டில் நாள்தோறும் நிறுத்தி, நடுநிலை என்பதெல்லாம் எங்களுடைய பாதை இல்லை என்பதை சன் டிவி நிர்வாகம் அழுத்தம் திருத்தமாக சொல்கிறதோ என்ற அச்சம் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துவிட்டது.

சன் டிவி செய்திப்பிரிவுக்கு கடந்த கால நிகழ்வுகளை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இருக்காது. இருந்தாலும் நினைவூட்டுவது நல்லரசுவின் கடமையாகும்.

கடந்த 2009 ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்த போது, டெல்லி சென்றிருந்த அப்போதைய திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியை எந்தளவுக்கு காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் அசிங்கப்படுத்தினார்கள்?

திமுகவுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்குவதற்கு எம்பிக்களின் அடிப்படையில் காங்கிரஸ் முன்வைத்த ஃபார்முலாவை கேட்டு கண்கள் சிவந்து, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு பதவியேற்பு விழாவிலேயே கலந்துகொள்ளாமல் கலைஞர் மு.கருணாநிதி கோபித்துக் கொண்டு சென்னை திரும்பியதை, வடமாநில ஊடகங்கள், ஹிந்தி, ஆங்கிலம் என்ற மொழி வேறுபாடில்லாமல் கேவலமாக செய்தி ஒளிப்பரப்பியதை பார்த்து அன்றைய திமுக முன்னணி நிர்வாகிகள் எந்தளவுக்கு ரத்தம் கொதித்தார்கள்?

ஒட்டுமொத்த தமிழகத்தின் மானம், நாடு முழுவதும் காற்றில் பறக்க விடப்பட்டுதே? என்று குமறியவர்கள் அரசியலைக் கடந்த தமிழ் உணர்வாளர்கள் ஏராளம், ஏராளம். அன்றைய தினம், எதிர்க்கட்சியாக இருந்த அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, திமுகவுக்கு, கலைஞர் மு.கருணாநிதிக்கு ஏற்பட்ட அவமானத்தை கிண்டலடித்தோ, நக்கல் செய்தோ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

தமிழ்நாட்டில் அண்ணன் தம்பிகளாக தமிழர்கள் மோதிக் கொள்ளலாம். ஆனால், டெல்லியில், வட இந்தியாவில் தமிழருக்கு ஒரு அவமானம் என்றால் அதை ஒட்டுமொத்த தமிழகமும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானமாக கருத வேண்டும். தமிழர்களை அவமானப்படுத்தியவர்களை காலம் முழுவதும் புறக்கணிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட வேண்டும்.

இதையும் கடந்து சுட்டிக்காட்ட ஒன்றிருக்கிறது.

பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா நேரம் ஒதுக்காமல் புறக்கணித்ததால், டெல்லியிலேயே தங்கி, கெஞ்சி கூத்தாடி, கூழைக் கும்பிடு போட்டு எடப்பாடி பழனிசாமி காரியம் சாதித்துக் கொள்ளவில்லை. தோழமைக்கட்சி என்ற உணர்வோடு சந்தித்து பேச விருப்பப்பட்டிருக்கலாம். நேரம் ஒதுக்குவதும் மறுப்பதும் தேசிய கட்சிகளின் உரிமை. காங்கிரஸாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் அவர்கள் அதிகார மமதையில் இருக்கும் போது மாநிலக் கட்சிகளான திமுகவையும் ஒரு பொருட்டாக மதித்தது இல்லை, அதிமுகவையும் ஒரு பொருட்டாக மதித்தது இல்லை.

நிறைவாக, இரண்டு அம்சங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்…

முதலாவதாக, பிரதமர் மோடி எந்தளவுக்கு மாண்புக்குரியவர் என்பதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு  வழங்கிய பிரியா விடை நிகழ்வின் வீடியோ காட்சிகள் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன. கூப்பிய கையோடு நிற்கும் இந்தியாவின் முதல் குடிமகனை, அற்ப உயிர் போல உதாசீனப்படுத்தும் மாமனிதர் பிரதமர் மோடியை சந்திக்காமலேயே சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமியின் தைரியத்தை போற்றுவோரும் தமிழகத்தில் இருக்கதான் செய்கிறார்கள்.  

சுயமரியாதையுடன் நடந்து கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமியை பாராட்டக் கூட வேண்டாம். இகழ்ந்து பேசி இன்பம் காணும் எண்ணத்தை கைவிடுங்கள்.

இரண்டாவதாக, இபிஎஸ்ஸின் டெல்லி பயணம் குறித்து சன் நியூஸ் கேவலப்படுத்துகிறதே? என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கேட்டபோது, ஆவேசத்துடன் அவர்கள் கூறிய கருத்துகள் அதிர்ச்சியளிக்க கூடியவை. அவர்களின் வாக்குமூலத்தை அப்படியே இங்கு பதிவு செய்கிறோம்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை தயாநிதிமாறன் நம்புகிறார். அதனால் அவரது உறவினரை அனுப்பி நேரில் வாழ்த்துச் சொல்ல வைத்திருக்கிறார். கடந்த 11-ந்தேதி அண்ணா தி.மு.க பொதுக் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அன்று மாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ரோகித் ரமேஷ் என்ற இளைஞர் தன் மனைவியுடன் இபிஎஸ்ஸை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். “விரைவில் நீங்கள் ஆட்சியை பிடித்து முதல்வர் ஆவீர்கள்” என்றும் கூறினார்.

இவர் இந்து தமிழ் நாளிதழின் பொறுப்பாளர்..இந்து ரங்கராஜனின் பேரன்.. ரமேஷ் ரங்கராஜனின் மகன்.. ரோகித்தின் தாய் யார் தெரியுமா?
தயாநிதிமாறன் மனைவியின் சகோதரி..அதாவது தயாநிதி ரோகித்துக்கு சித்தப்பா?
மு.க. ஸ்டாலின் இனி தேறமாட்டார் என்று மாறன் சகோதரர்கள் முடிவெடுத்துவிட்டு வெளிவேஷம் கட்டுகிறார்கள்.

ஊடக பலம் இருக்கிறது என்பதற்காக தர்மத்திற்கு எதிராக பேசினால், எதிர்தரப்பும் மறைக்கப்படும் உண்மைகளையும் ஊரறிய சொல்லும் என்பது இபிஎஸ் தரப்பினரின் கருத்துகள் மூலம் நிரூபணமாகிறதோ.!

அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு இடையே, ஊடக தர்மத்தை பேணிக் காப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு ஊடகத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கும் சன் டிவி தலைமை செய்தி ஆசிரியர் குணசேகரனின் தலைமையில் இயங்கும் சன் நியூஸ் தடம் மாறி போவதைதான் ஜீரணிக்க முடியவில்லை.

One thought on “டெல்லியில் கலைஞரை அவமானப்படுத்திய நிகழ்வு மறந்து போய்விட்டதா? ஊடக தர்மத்தில் கொள்ளி வைக்கும் சன் நியூஸ் தொலைக்காட்சி?”

Leave a Reply

Your email address will not be published.