Mon. Aug 8th, 2022

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே….

மறைந்த திமுக தலைவர், முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தன் வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாத்து வந்த சமூக நீதிக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.

திமுகவின் எதிரிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகளிடம் இருந்து அல்ல., உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை வசம் இருந்தே ஆபத்து ஏற்படுத்தப்படுகிறது என்பதை யாராவது உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தார்களா?

இந்த நிமிடம் வரை நீங்கள் மௌனமாக இருப்பதன் மூலமே, சமூக நீதிக்கு பெரும் கேடும் விளைவிக்கும் விவகாரத்தில் கூட உங்களால் அக்கறை செலுத்த முடியாத அளவுக்கு, அரசு அதிகாரிகள் உங்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை நினைக்கும் போது உங்களின் நிலையை எண்ணி பரிதாபம் மட்டுமே ஏற்படுகிறது.

உங்கள் ஆட்சிக்கு மத்திய பாஜக அரசு முடிவு காட்ட வேண்டியதில்லை. நீங்கள் பெரிதாக நம்பியிருக்கும் காவல்துறையே உடனிருந்து பள்ளம் தோண்டி, உங்களையும் திமுக ஆட்சியையும் குழியில் தள்ளி மண் அள்ளி போட்டு மூடி புதைத்து விடும் ஆபத்து உள்ளது. எச்சரிகையாக இருக்க வேண்டிய நேரம் மட்டுமல்ல, விழித்துக் கொள்ள வேண்டிய நேரமும் இதுதான்.

சமூக நீதிக்கு வெடி வைத்து தகர்க்கும் குரூரச் செயலை, திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எச்சரித்து 12 மணிநேரத்திற்கு மேலாகிவிட்டது. ஆனால், அவரும் கூட தமிழக காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளின் முகத்திரையை முழுமையாக கிழித்து எறியாமல், பட்டும்படாமலேயே சுட்டிக்காட்டியிருக்கிறார். சாதிகளை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களிடம் சாதி பகைமையை விதைக்கும் விஷ விதைகளை உளவுத்துறை தூவியுள்ளதை மிகுந்த வேதனையோடு சுட்டிக்காட்டியுள்ளார் தொல் திருமாவளவன்.

கணியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தையொட்டி தமிழக உளவுத்துறையின் உயரதிகாரி, காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள எச்சரிக்கை கடிதத்தில் சாதி தொடர்பாக குறிப்பிட்ட வார்த்தைகளை, அச்சு ஊடகங்களோ, காட்சி ஊடகங்களோ இந்தளவுக்கு குரோதத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளிப்படையாக பயன்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை.

ஆனால், ஸ்ரீமதியின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு பதிலாக, அந்த பகுதியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சாதி மோதலை உருவாக்கக் கூடிய விஷமத்தனத்தை, அறிவுரைகளை கூறியுள்ளது தமிழக உளவுத்துறை. இதை சதி என்று ஒற்றை வார்த்தையில் சுட்டிகாட்டியுள்ளார் தொல் திருமாவளவன்.

ஆனால், த ஹிந்து ஆங்கில நாளிதழிலில் வெளியிடப்பட்ட இந்த செய்தியால் ஏற்படவுள்ள பேராபத்தை, இரண்டு, மூன்று மணிநேரத்திற்குள்ளாகவே மூத்த ஊடகவியலாளர் (ஏஎன்ஐ) மணி நேற்று காலையிலேயே யூ டியூப் நிறுவனம் ஒன்றுக்கு விரிவான பேட்டியாக வழங்கியுள்ளார். அவரின் பேட்டியை பார்த்தாவது தமிழக அரசின் உயரதிகாரிகள் விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.

அரசு விழாக்களில். விளம்பர படங்களிலும் மட்டுமே தலை காட்டினால் போதும் என்று விமர்சனம் செய்யப்படும் அளவிற்கு முதல்வரை பழக்கப்படுத்தி வைத்திருக்கும் முதல் அமைச்சர் அலுவலகத்தின் நான்கு செயலாளர்கள், குறிப்பாக நெம்பர்1 செயலாளராக இருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸுக்காவது, நேற்றைய ஹிந்து நாளிதழின் செய்தி ரத்தத்தை சூடாக்கியிருக்க வேண்டும்.
பாவம், அவருக்கு இதையெல்லாம் கவனிப்பதை விட வேறு முக்கியமான அலுவல்கள் நிறைய இருக்கின்றன போல..

ஆட்சியாளர்கள்தான் கற்பனை உலகில் மிதத்து கொண்டிருக்கிறார்கள் என்றால், மூத்த ஊடகவியலாளர் ஏ.என்.ஐ மணி பேட்டியளித்து 24 மணிநேரங்கள் கடந்த பிறகும் கூட, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாதி மோதலை உருவாக்கும் வகையிலான உளவுத்துறையின் அறிக்கை தொடர்பாக, ஆளும்கட்சியான திமுக முன்னோடிகளோ, தோழமைக் கட்சிகளான இடதுசாரிகளோ கொதித்து எழுந்த மாதிரி தெரியவில்லை.

சக்தி மெட்ரிக் பள்ளி மீதான தாக்குதல் அனைத்திற்கும் ஆதி திராவிடர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களும்தான் காரணம் என்று கூறுகிறது உளவுத்துறையின் அறிக்கை. இதுதொடர்பாக செய்தி வெளியாகி 30 மணிநேரம் கடந்த பிறகும் சமூக நீதியை கொண்டாடிய மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி கட்டி காப்பாற்றிய திமுகதானா, இன்றைய திமுக என்று எழும் கேள்வியை தவிர்க்க முடியவில்லை.
மூத்த ஊடகவியலாளர் ( ANI) மணி….

தமிழக காவல்துறையின் கீழ் உள்ள உளவுத்துறையின் உயரதிகாரியாக இதுவரை இருந்த எந்தவொரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகளும் செய்ய துணியாத கொடுமையை இன்றைய உளவுத்துறையின் உயரதிகாரி செய்துள்ளார்.

ஸ்ரீமதி சமுதாயத்தைச் சேர்ந்த அகமுடையார் (முக்குலத்தோர்) சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆதி திராவிடர் சமுதாயத்தினருடன் கை கோர்க்கும் சூழல் உள்ளது. இதேபோல, சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளின் சமுதாயமான வெள்ளாள கவுண்டர்கள், தங்களுக்கு எதிராக ஓரணியில் திரளும் ஆதிதிராவிடர், முக்குலத்தோர் கூட்டணியை எதிர்கொள்ள வன்னியர் சமுதாயத்தினருடன் கைகோர்க்க வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை உயரதிகாரி, கணியாமூர் பள்ளி கலவரங்களின் விசாரணையை மேற்பார்வையிட்டு வரும் வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி ஐபிஎஸ், மத்திய மண்டல ஐஜி சந்தோஷ் குமார் ஐபிஎஸ் ஆகியோருக்கு ரகசிய அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளதாகவும் ஹிந்து ஆங்கில நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முக்குலத்தோர், வெள்ளாள கவுண்டர் ஆகிய இரண்டு சமுதாயமும் பெரும்பான்மையானவர்களாக இல்லை. ஆதிதிராவிடர் மற்றும் வன்னியரும் பெரும்பான்மையாக இருந்தாலும், இந்த நான்கு சமுதாய மக்களுடன் முதலியார், உடையார் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்களும் நிறைந்திருக்கிறார்கள். கடந்த காலத்தில் இந்த மாவட்டத்தில் சாதி மோதல் என்பதே இல்லை என்று சொல்லும் அளவுக்குதான் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இப்படிபட்ட நேரத்தில் நான்கு சாதிகளுக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஒருவர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே…

கலைஞர் மு கருணாநிதி இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் இப்படியொரு செய்தி கண்ணில் பட்ட அடுத்த நிமிடமே இப்படியொரு எச்சரிகையை விடுத்த உளவுத்துறை உயரதிகாரிகளை தண்ணீர் இல்லாத காட்டிற்கு பந்தாடி இருப்பார். 30 மணிநேரத்திற்கு மேலாக உளவுத்துறை உயரதிகாரியின் உத்தரவு உயிரோடு இருந்து கொண்டிருக்கும் வேளையில் கலைஞரின் ஆத்மா நிம்மதியாக இருக்க முடியுமா?

கலைஞரின் ஆத்மாவை துடிதுடிக்க வைக்கும் அளவுக்கு, சமூக நீதிக்கு பெருங்கேடு விளைவிக்கும் வகையிலான எச்சரிக்கையை அறிக்கையாகவே வெளியிட்ட உளவுத்துறை உயரதிகாரியும், அவரின் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய காவல்துறை உயரதிகாரியும், அவரவர் பதவிகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், நிமிடத்திற்கு நிமிடம் நீங்கள் உச்சரிக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு துளியளவு பெருமையும் இல்லை என்று குமறுகிறார்கள் சாதியை வேரோடு களைய போராடிக் கொண்டிருக்கும் தமிழ் சமூக உணர்வாளர்கள்.

One thought on “கலைஞரின் ஆத்மா நிம்மதி கொள்ளுமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் விழித்து கொள்ள வேண்டும்….”

Leave a Reply

Your email address will not be published.