Mon. Aug 8th, 2022

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்….

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடர்ந்தால்தான் பெரியார் மண்ணான தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது. அந்த ஒரே காரணத்திற்காகதான் தற்போதைய திமுக ஆட்சியில் ஊழல்கள் நடந்தாலும் பொறுத்துக் கொள்கிறோம்.நிர்வாகச் சீர்கேடுகள் தலை தூக்கினாலும் தாங்கிக் கொள்கிறோம் என்று அனுபவம் மிகுந்த ஊடகவியலாளர்களும் தமிழ் சமூக பற்றாளர்களும் நாள்தோறும் முழங்கி வருகின்றனர். அவர்களின் நம்பிக்கைக்குரிய வகையில்தான் திமுக தலைவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களா? என்று கேள்வியை முன்வைத்தால் வாய் விட்டு பலமாக சிரிக்கிறார்கள் தமிழ் தேசியவாதிகள்.

தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்ற நாள் முதலாகவே முன்னாள் காவல்துறை அதிகாரியான ஆர்.என்.ரவி, பாஜகவின் சித்தாந்தத்தையும், மத்திய பாஜக அரசின் கொள்கைகளையும் கடைக்கோடி மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமின்றி மத்திய கல்வி வாரிய நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளிலும் அழுத்தம் திருத்தமாக பதியம் செய்து வருகிறார். அதுவும் தேச பக்திதான் நாட்டிற்கு மாபெரும் வளர்ச்சியை தரும் என்று தேன் கலந்து மாணவர்கள் மனதில் பதிக்கும் வித்தையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கைத் தேர்ந்தவராக இருக்கிறார். தமிழர்களின் பண்பாட்டையே சிதைக்கும் வகையில் ஆளுநர் மேற்கொண்டு வரும் இடைவிடாது பரப்புரையை தடுக்கும் சக்தி அற்றதாக திமுக அரசு, கையறு நிலையில் நிற்பதை பார்த்து ஆவேசப்படுகிறார்கள் தமிழ் தேசியவாதிகள்.

தமிழகத்தில் போர்க் குரல் கொடுத்தார்கள்….நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்பினார்கள்… குடியரசு தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் என இந்தியாவையே ஆட்டிப்படைக்கும் சக்தி மிகுந்த தலைவர்கள் எல்லோரிடமும் கோரிக்கை மனுக்களையும் கொடுத்தும் பார்த்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவியின் தன்னிச்சையான செயல்பாடுகள் மட்டுமின்றி அதிகார வரம்பு மீறிய நடவடிக்கைகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள சக்தி மிகுந்த தலைவர்களில் ஒருவரால் கூட அணை போட முடியவில்லை.

சனாதனம்தான் இந்தியாவின் ஆதிப் பண்பாடு என்று போகும் இடங்கள் எல்லாம் முழங்கிக் கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதைவிட கொடுமையாக, திராவிடர் என்பது இனம், மொழி சார்ந்தது இல்லை என்றும் மண் சார்ந்தது. ஆங்கிலேயர் வருகையால்தான் ஆரியர், திராவிடர் என்ற நிலை உருவாகிவிட்டது என்று வரலாற்றையே திரிக்கிறார் என்று திமுக எம்பி டி.ஆர்.பாலு கடுமையாக குற்றம் சாட்டினார். அதையெல்லாம் துளியும் பொருட்படுத்தாமல் ஆளுநர் ஆர்.என். ரவி, அவரது பாதையிலேயே தனிக்காட்டு ராஜா போல விறுவிறுவென சென்றுக் கொண்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸில் முழுமையான பயிற்சி பெற்று, இளமைக்காலத்திலேயே பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழக பாஜக தலைவராக பொறுப்பு ஏற்று தனது பண்பட்ட குணத்தால் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களுடனும் நல்லிணக்கத்தை பேணி வந்தவரும், இன்றைய மணிப்பூர் ஆளுநருமான இல.கணேசன் கூட சனாதனத்தைப் பற்றியும், ஆரியர், திராவிடர் விவாதத்தையும் அரசு விழாக்களில் பேசுவதற்கு துணியவே மாட்டார். தர்மசங்கடமாக அப்படியொரு நிலை ஏற்பட்டாலும்கூட ஆயிரம் முறை யோசிப்பவர் அவர். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவியோ, தன் கடமையே திராவிடத்தை வேரறுப்பதுதான் என்ற மனஉறுதியோடு ஆளுநர் மாளிகையையும், ஆளுநர் அதிகாரத்தையும் முழுவீச்சில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் தமிழ் பற்றாளர்கள்.

சட்டப்பேரவையும், அமைச்சரவையும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் அரசியல் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவியின் அன்றாட செயல்பாடுகளை, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், இடது சாரிகள் தான் சூட்டுக்கு சூடு என்ற கணக்கில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த கட்சிகள் குரல் கொடுத்த பிறகுதான் திமுக, தன் பங்கிற்கும் ஆளுரை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இப்படி தமிழகத்தில் உள்ள ஆளுநரையையே சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சுயமரியாதை இயக்கமான திமுக, மத்திய பாஜக அமைச்சர்களிடம் மாநில சுயாட்சி கொள்கைக்கு வலு சேர்க்கும் வகையில் எல்லாம் போராடி மாநில உரிமைகளை பெற்று வர முடியாத நிலையில்தான் உள்ளது என்பதை தமிழக அமைச்சர்கள் டெல்லிக்கு மேற்கொள்ளும் அரசு முறை பயணங்களின் போது பட்டுவர்த்தனமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மத்திய பாஜக அரசை எதிர்த்து, அதுவும் குறிப்பாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அடிக்கடி குரல் கொடுத்து வந்ததன் மூலம் மாநில சுயாட்சி கொள்கையில் திமுக உறுதியாக நிற்கிறது என்று பழம்பெரும் திமுக முன்னணி நிர்வாகிகள் நிம்மதியடைந்தனர். யார் கண் பட்டதோ, அவரின் உரிமைக் குரலையும் நெரித்துவிட்டனர்.

அதன் விளைவோ என்னவோ, நேற்றைய தினம் டெல்லிக்கு சென்றிருந்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய பாஜக அரசின் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்க்கும்போது, தமிழக அமைச்சர்களுக்கு தன்மான உணர்வு எப்போதுதான் தலை தூக்கும் என்ற கேள்விதான் எழுகிறது.

அமைச்சர் தங்கம் தென்னரசு வயதிலும், குடும்ப பாரம்பரியத்திலும் உயர்ந்த நிலையில் இருப்பவர். அதிரடி அரசியலுக்குள் நுழையாமல் கண்ணியமாக மக்கள் சேவை ஆற்றி வருபவர். அவரது சட்டமன்றத் தொகுதியான திருச்சூழியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது (2021) வலம் வந்த அனுபவத்தில், தங்கம் தென்னரசு மீதும், அவரது குடும்பத்தின் மீதும் மக்கள் மிகுந்த மரியாதையை வைத்திருப்பதை நேரில் அறிந்து கொள்ள முடிந்தது. சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றிய காலத்தில் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் மக்களின் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றி வைக்கவில்லை என்று குறைபட்டுக் கொண்டோர் கூட, அவரின் அரசியல் வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் புகழ்ந்தே பேசினார்கள்.

அப்படி கண்ணியமிக்க குடும்பத்தின் வாரிசான அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா முன்பு அமர்ந்திருக்கும் காட்சியை பார்க்கும் போது சினம்தான் தலைகாட்டுகிறது. சின்ன வயதான சிந்தியா காட்டும் உடல் மொழியும், கால் மேல் கால் போட்டு, காலா சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் வசனத்திற்கு ஏற்பதான் அமர்ந்திருக்கிறார். ராஜ குடும்பத்து வாரிசு என்றாலும் நாகரிகம் என்று ஒன்றை மாண்புமிகு சந்திப்பின் போது வெளிப்படுத்த வேண்டாமா?

தமிழகத்தின் நிதித்துறையில் அனுபவம் மிகுந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கிருஷ்ணன், தொழில்துறை செயலாளர் அந்தஸ்தில் அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் இணைந்தே சந்தித்து உள்ளார். இவர்களுக்கு வழங்கும் மரியாதை என்பது தமிழக மக்களுக்கு வழங்கும் மரியாதை என்பதை உணர்ந்து கொண்டிருக்க வேண்டாமா ஜோதிராதித்யா சிந்தியா..

இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே பண்பட்ட நாகரிகத்தை பேணி காப்பவர்கள் தமிழர்கள்தான் என்பதை வட இந்தியர்களுக்கு எப்படியெல்லாம் உணர்த்த வேண்டும் என்பதும் இன்னும் எத்தனை காலங்கள் கடந்தாலும், பண்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதும் வட இந்தியர்களுக்கு, குறிப்பாக மத்தியில் ஆளும் கட்சியாக அமர்ப்பவர்களுக்கு படிப்பினையாக அமையுமோ தெரியவில்லை…

தமிழகத்தில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான கோரிக்கை பற்றிய விவாதம் என்றாலும், கரூர் உள்பட எங்கு அமைந்தாலும் அது தனியார் வசம்தான் போகப் போகிறது. மாநிலத்தின் வளர்ச்சிதான் முக்கியம் என்றாலும் கூட தன்மான உணர்வுக்கும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும் என்பதுதான் அவர் மீது அரசியலுக்கு அப்பாற்பட்டு பாசம் பொழிவோரின் ஆதங்கமாக இருக்கிறது.

பாப்பாத்தி.. பாப்பாத்தி.. என்று திமுகவினர் கிண்டலும், கேலியுமாக பேசிய மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் ஆளுமையை பற்றிய நினைவுகள் இந்த நேரத்தில் தலைத் தூக்குவதை தவிர்க்க முடியவில்லை. அவர் உயிரோடு இருந்த காலம் வரை வட இந்தியாவில் கோலோச்சிய அத்தனை ஆளுமைகளும் பெட்டி பாம்பாக அடங்கியிருந்தன. தமிழகம் வந்து சென்ற சுவடே தெரியாமல் அடக்கி வாசித்தன. மாநில சுயாட்சி பற்றியோ, சுய மரியாதை பற்றியோ அவர் உரக்கக்கூட குரல் கொடுத்ததில்லை. ஆனாலும், தன்னுடையே ஆளுமையை சத்தமில்லாமல் செய்கைகள் மூலம் நிலை நாட்டினார்.

உச்சநீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அடையாளப்படுத்தியிருந்தாலும், தமிழ்நாட்டின் மானத்தை காப்பாற்றியவர் என்ற முறையில், அவரின் ஆளுமைக்குணத்தை இனி எந்த அரசியல் தலைவரிடம் காண முடியும் என்ற ஏக்கம் ஏற்படுவதை புறம் தள்ளிவிட முடியவில்லை.

One thought on “தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு சுயமரியாதை எங்கே போனது?”

Leave a Reply

Your email address will not be published.