Mon. Aug 8th, 2022

சென்னை மாமல்லபுரத்தில் ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெறவுள்ள சர்வதேச செஸ் விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் முழுவீச்சில் தயாராகி வருகிறது. துவக்க விழா மற்றும் சர்வதேச செஸ் விளையாட்டுப் போட்டியையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை மாநகர் முழுவதும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிழற்படம் இடம் பெற்றுள்ள நிலையில், அதில் பிரதமர் மோடி நிழற்படம் இடம் பெறாதது ஏன்?என பாஜக முன்னணி தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் காவல் அலுவலர்கள் பாதுகாப்ப பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவற்றில் ஈடுபட முயற்சிக்கும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் எச்சரித்துள்ளார்.

அவரின் எச்சரிகையை மீறியும் கோ பேக் மோடி என்ற எதிர்ப்பு வாசகம் இதற்கு முன்பு பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தியதோ, அதற்கு இணையாகவே டிவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு வாசகங்களை பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

டிவிட்டரில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி எதிர்ப்பு வாசகங்கள் வேகமாக பதிவு செய்யப்பட்டு வரும் நேரத்தில், பிரதமரின் வருகையை வரவேற்று பாஜக தரப்பிலும் டிவிட்டரில் வாசகங்கள் பதியப்பட்டு வருகின்றன. மேலும், தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகைகளில் பிரதமர் மோடியின் நிழற்படத்தை ஒட்டும் பணிகளில் பாஜக நிர்வாகிகள் துவக்கியுள்ளனர். பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, சென்னையில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளில் பிரதமர் மோடியின் நிழற்படத்தை ஒட்டினார். அவரைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் பலர், வரவேற்பு பதாகைகளில் பிரதமரின் நிழற்படத்தை ஒட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.


இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத், மதுரையில் வீடு தோறும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்று வரும் வேளையில், அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த செஸ் போட்டி விளம்பர பதாகையில் பிரதமர் மோடியின் நிழற்படத்தை தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஒட்டினார். இப்படி பாஜக முன்னணி நிர்வாகிகள் தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகைகளில் பிரதமரின் நிழற்படத்தை ஒட்டி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், பிரதமரின் நிழற்படத்தை சாயம் பூசி அழிக்கும் பணியில் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளனர்.


இதுபோன்ற நிகழ்வுகளால் இருதரப்பும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுவிடுமோ? என்று விளையாட்டு ஆர்வலர்கள் கவலையுடன் கேள்வி எழுப்புகிறார்கள்.


இதனிடையே, செஸ் போட்டி முழுக்க முழுக்க தமிழக அரசின் சொந்த நிதியான ரூ.100 கோடியை செலவழித்து நடைபெறுகிறது. மரியாதை நிமித்தமாகதான் பிரதமர் மோடியை துவக்க விழாவுக்கு அழைத்துள்ளோம் என திமுக துணை செய்தித் தொடர்பாளர் ராஜிவ் காந்தி காணொளி வாயிலாக அளித்த விளக்கமும், வரவேற்பு பதாகை விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுள்ளது என்று கூறும் விளையாட்டு ஆர்வலர்கள், பிரதமர் மோடியை வரவேற்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு உண்மையிலேயே இருக்குமானால், தமிழக அரசின் வரவேற்பு பதாகையை போல தயாரித்து அதில் பிரதமர் மோடியின் நிழற்படத்தை அச்சடித்து சென்னை மாநகர் முழுவதும் வைத்து கொள்ள வேண்டுமே தவிர, அதைவிடுத்து திமுக நிர்வாகிகளை வம்புக்கு இழுக்கும் வகையில் பாஜக நிர்வாகிகள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்றும் தமிழக அரசின் வரவேற்பு காணொளியைப் போலவே, பிரதமர் மோடியின் புகழ் பாடும் காணொளியை தயாரித்த அமர் பிரசாத் ரெட்டிக்கு, வரவேற்பு பதாகை தயாரிப்பதா சிரமமாக இருக்கப் போகிறது என்று ஆவேசமாக குரல் எழுப்புகிறார்கள்.

பாஜக, திமுகவினரிடையான மோதலை முளையிலேயே கிள்ளி எறியுமா., சென்னை பெருநகர காவல் துறை?

One thought on “செஸ் போட்டி விளம்பர பதாகைகளில் மோடி படம்? திமுகவை வம்புச் சண்டைக்கு இழுக்கும் பாஜக….”

Leave a Reply

Your email address will not be published.