Fri. Mar 29th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்….

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில், தமிழக காவல்துறையும் அரசு நிர்வாகமும் தவறு இழைத்திருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் வகையில்தான், கள்ளக்குறிச்சி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் பணியிட மாற்றம் நிரூபித்திருக்கின்றன.

ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றத்திற்குப் பிறகும் தமிழக அரசுக்கு மேலும் மனசாட்சி உறுத்தியிருக்கும் போல..நேற்றிரவு உளவுத்துறையில் ஐஜி அந்தஸ்தில் இருந்த ஆச்சியம்மபாள் என்ற காவல்துறை உயரதிகாரி  பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

கனியாமூர் பள்ளி விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொளி வாயிலாக உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில், தமிழக காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால், கடந்த 17 ஆம் தேதி வரலாறு காணாத அளவுக்கு மக்களின் போராட்டம் வெடித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார் என்றும் அதன் காரணமாகவே, யாருடைய தலையீடு இன்றியும் உயர் பொறுப்பில் உள்ளவர்களைக் கூட தண்டிக்க முதல்வர் தயாராகிவிட்டார் என்கிறார்கள் முதல்வர் அலுவலகத்தோடு நெருக்கமான மூத்த அதிகாரிகள் சிலர். 

ஆனால், கனியாமூரை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்புமே தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ், உள்துறையின் கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.

2005 ஆம் ஆண்டில் சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் வெள்ள நிவாரணம் பெறுவதற்காக திரண்ட விளிம்பு நிலை மக்களில், கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் பரிதாபமாக உயிரிழந்த துயரமான நிகழ்வின்போது, கடமையில் இருந்து தவறிய ஐபிஎஸ் உயர் அதிகாரிதான், எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இன்றி தமிழக காவல்துறையின் தலைமை பதவியை இன்றைக்கு அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, கனியாமூர் நிகழ்வு எல்லாம் தூசு மாதிரிதான்..

42 பேர் பலியான நிகழ்வுக்கு காரணமானவர் என்று கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என்று விடுதலை ஆனவர் கே.கே.நகரைச் சேர்ந்த திமுக முன்னணி நிர்வாகி கே.கே.தனசேகரன். இன்றைக்கு சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலராகவும் கணக்கு நிலைக்குழு தலைவராகவும் இருக்கிறார். அன்றைக்கு அவர் அனுபவித்த துயரத்திற்கு அங்கீகாரமே கிடைக்கவில்லை.

கனியாமூர் நிகழ்வில் அரசு நிர்வாகம் தவறு இழைத்துவிட்டது என்ற குற்றவுணர்வு முதல்வருக்கு ஏற்பட்டிருப்பதை போல, சக்தி மெட்ரிக் பள்ளியின் செயலாளர் சாந்திக்கும் காலம் தாழ்ந்து ஏற்பட்டிருப்பதைதான் உன்னிப்பாக கவனிக்க வேண்டியிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காவல்துறை பாதுகாப்பில் இருந்த நேரத்தில் நிர்வாகி சாந்தி அளித்த தன்னிலை விளக்கத்தின்போது தெறித்து விழுந்த ஆணவப்பேச்சுக்கும், இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தி டிவிக்கு வழங்கிய தனிப்பேட்டியில், கள்ளக்குறிச்சி மக்களின் கோபத்தை தணிக்கும் வகையில், கண்ணீர் துளிர்க்க தழு தழுத்த குரல் பேட்டியும், குற்றம் யார் பக்கம் இருந்திருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

கனியாமூர் நிகழ்வில், அரசு நிர்வாகம்தான் குற்றவாளி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் வகையில் பல்முனைகளில் இருந்து உண்மைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நேற்றிரவு கசிந்த சிசிடிவி கேமிரா காட்சிகள், ஜூலை 17 ஆம் தேதிக்கு முன்பு வெளியாகியிருந்தால், அந்த தேதியை பற்றி யாரும் பெரிதாக பேசாத நிலை கூட உருவாகியிருக்கலாம்.

திமுக அரசை விமர்சனம் செய்தால் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபப்படுவார் என்பதற்காக பட்டும் படாமலும் இதுவரை விமர்சனம் செய்து வந்த மூத்த ஊடகவியலாளர்கள் கூட, கனியாமூர் பள்ளி விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர்.

கலைஞர் எழுதுகோல் விருதுக்கு ஊடகவியலாளரை தேர்ந்தெடுப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம் பெற்றிருக்கும் ஊடகவியலாளர் சமஸ், அரசு மீது விமர்சனம் வைப்பவர்களில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார்.

சமஸை விட மிகுந்த அறச்சீற்றத்துடன், தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்ததுடன் உளவுத்துறை முழுமையக தோல்வி அடைந்துவிட்டது என்று நெற்றிக்கண்ணை திறந்துள்ளார் மூத்த ஊடகவியலாளர் அருள் எழிலன்.

இவர் கலைஞர் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார் என்பதாலேயே அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாக நியூஸ் ஜெ., தொலைக்காட்சி, அருள் எழிலனின் அறச்சீற்றத்தை, திமுக அரசு மீது சேற்றை வாரி வீசுவதற்காக, ஊடக தர்மமின்றி பயன்படுத்திக் கொண்டது.

மக்களிடம் செல், மக்களோடு வாழ் என்று பேரறிஞர் அண்ணா கற்பித்த அரசியல் பாடத்தை உள்வாங்கிக் கொண்டவராக, மக்களில் ஒருவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் அருள் எழிலன் இன்றைக்கும் கலைஞர் தெலைக்காட்சியின் பணியாளராக தொடர அனுமதித்திருக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும், அதன் தலைமை செய்தி ஆசிரியர் திருமாவேலனுக்கும் பாராட்டுகளை தெரிவிக்கலாம்.  

ஊடகவியலாளர்களின் கோபத்தை இங்கு பகிர்வதற்கு முக்கிய காரணம்,  ஊடக தர்மத்தை பேணி காக்கின்றவர்களுக்கு, கனியாமூர் பள்ளிக்கு எதிரான போராட்டம் திட்டமிட்ட சதி செயலாக தெரியவில்லை என்பதை உரக்க சொல்வதற்காகதான்.

தனியார் பள்ளி நிர்வாகங்களின் கல்விக் கொள்ளைக்கு எதிராகவும் அடக்குமுறைகளையே அமைதியை நிலைநாட்டும் வழிமுறையாகவும் கொண்ட காவல்துறைக்கு எதிராகவும் எதோச்சதிகாரம் கொண்ட அரசு நிர்வாகத்திற்கு எதிராகவும் பொங்கும் ஒட்டுமொத்த ஜனநாயகவாதிகளின் பிரதிநிதிகளாக கனியாமூரில் திரண்டவர்களை பார்க்க வேண்டும்.

ஆனால், அதிகார மமதையில் உள்ள ஒன்றிரண்டு அரசு அதிகாரிகள், மனசாட்சியின்றி சுயநலத்தோடு செயல்பட்டு திமுக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த தீய எண்ணத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதுபோல்தான் உள்ளது, கனியாமூர் பள்ளி நிகழ்வில் 5 நாட்களாக எந்தவொரு சட்ட நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிகழ்வு.

பத்தாண்டு காலம் ஆளும்கட்சியாக இல்லாத போது, எண்ணற்ற அவமானங்களை எதிர்க் கொண்டு சுகத்தை இழந்தும் வசைவுகளை தாங்கிக் கொண்டும் அன்றாட வருமானத்தை இழந்தும் திமுகவின் வெற்றிக்காக தொடர்ந்து அயராது உழைத்து வந்த கோடிக்கணக்கான தொண்டர்களின் மகிழ்ச்சிக்கு வேட்டு வைப்பதை போல, கனியாமூர் பள்ளி நிகழ்வை வைத்து திமுக ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் கயவர்களை ஆட்சி மேலிடம் கண்டிக்கவில்லை என்றாலும் கூட தொண்டர் படை தண்டிக்கும் என்ற நிலைக்கு உருவாக்கிவிட்டிருப்பதாக குமறுகிறார்கள் கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள்.

திமுக தொண்டர்களிடையே இப்படியொரு மனநிலை உருவாகி கொண்டிருக்கும் நேரத்தில், 25 வயதான இளைஞர் மிகவும் பக்குவப்பட்டவராக இருப்பார், அறவழியில் போராட்டத்தை முன்னெடுக்காமல், வன்முறை பாதையை தேர்ந்தெடுப்பவர் சமூக விரோதி என்று பட்டம் சூட்டுகிறார் புகழ்மிக்க ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே.

இன்றைய சமுதாயத்திற்கு அவரின் இன்னொரு முகம் தெரியாது என்பதால் தர்மவான் போல நியாயம் பேசிக் கொண்டிருக்கிறார்.

கழுதை வயதான 35ல் பொது இடமான சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நுழைவு பகுதியில் உள்ள இரும்பு கேட்டில் நின்று கொண்டு ஊஞ்சல் ஆடியவாரே நள்ளிரவில் அவர் செய்த அநாகரிக செயல்களை எல்லாம், விரிவாக எழுதினால், ஊடகத்துறைக்கு அவமானம் ஏற்பட்டுவிடும்.

அநீதிக்கு எதிராக சிங்க கூட்டங்கள் ஆர்த்தெழும் போது குள்ளநரிகள் ஊடுருவது இயற்கையான ஒன்றுதான். பசுந்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் கண்டு தண்டிக்கிற உரிமையும், கடமையும் சிங்கங்களுக்குதான் உண்டே தவிர, வேட்டைக்காரர்கள் கையில் ஒப்படைப்பது மானுட பண்பாகாது..

சுதந்திரத்திற்கான போராட்டத்தில் எப்போதுமே இரண்டு பாதை உண்டு. ஒன்று அஹிம்சை வழி. அந்த பாதை எல்லோருக்கும் கை கூடாது. மற்றொன்று முள்ளை முள்ளால் எடுக்கும் வழி.. அதைதான் கனியாமூர் தனியார் பள்ளிக்கு எதிராக திரண்ட மக்கள் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.

மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17 ஆம்தேதி) கனியாமூரில் திரண்ட ஒவ்வொருவருமே வரலாற்று நாயகர்கள்தான். அவர்களின் கோபம், ஜனநாயகத்திற்கு எதிரான பாதையில் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு, திமிரோடு நடைபோட்ட தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு எதிரானது.

அரசு அலுவலகங்களோ, காவல் நிலையங்களோ விளிம்பு நிலை மக்களின் துயர் துடைப்பவை அல்ல என்று காட்டிக் கொண்டிருக்கும் சூழலுக்கும், அரசு அலுவலகங்களை நாடி வருபவர்களை, சகோதரராக அங்கீகரிக்காமல் கேவலமாக நடத்தும் அநாகரீகத்திற்கும் எதிரானது.

மக்கள் சேவை என்ற சிந்தனையில்லாமல், அரசாங்கம் என்ற உச்சகட்ட பாசிச சிந்தனைக்கு எதிரானது,

இளம்வயதில், சுயநலத்தோடு வாழாமல், பொதுநோக்கத்தோடு களத்திற்கு வந்து கைதாகியிருக்கும் 400க்கும் மேற்பட்டோரை சமூக விரோதிகளாக அடையாளப்படுத்தும் முதலாளித்துவ சிந்தனைக்கு சாவு மணி அடிக்கும் வகையில், வரலாற்றில் நிலைத்து நிற்கும் போராளிகளாக அவர்களை அடையாளப்படுத்த தமிழகம் முழுவதும் நிறைந்திருக்கும் வழக்கறிஞர்களே, ஊருக்கு ஒருவராக புறப்பட்டு, கைதாகி சிறையில் வாடிக் கொண்டிருப்போருக்கும் அவர்களை பிரிந்து துயரத்தில் துவண்டு கொண்டிருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தமிழருக்கு பிறந்த தமிழ் ரத்தங்கள் உங்களை கைவிடாது என்று வெளிப்படையாக காட்டும் வகையில் கரம் கோருங்கள்.

கள்ளக்குறிச்சி, கடலூர் என்ற இரண்டு மாவட்டத்திற்குள்ளாகவே வாட்ஸ் அப் குழு மூலம் இரண்டொரு நாட்களிலேயே 5 ஆயிரம் பேரை திரட்ட முடிந்திருக்கிறது என்றால், தமிழ்நாடு என்ற வீரத்தின்  பிறப்பிடமாகவும், தியாகத்தின் பூமியாகவும் பரந்திருக்கும் நிலப்பரப்பில் லட்சக்கணக்கானோரை வரும் நாட்களில் எளிதாக ஒன்று திரட்ட முடியும்.

கனியாமூர் பள்ளி நிர்வாத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் எத்தகைய தண்டனையை வேண்டுமானால் வழங்கி நீதியை நிலைநாட்டிக் கொள்ளட்டும். ஆனால், மக்கள் மன்றத்தில் அவர்கள் போராளிகள் என்ற அடையாளத்தோடு வாழ, அவர்களது குடும்ப உறவுகள், சமுதாயத்தில் கூனி குறுகி நிற்பதற்கு பதிலாக நெஞ்சம் நிமிர்ந்து நிற்பதற்கு காலாட் படை வீரர்களைப் போல அணி திரளுங்கள் வழக்குரைஞர்களே..

உங்களால் மட்டுமே உடனடியாக அணி திரள முடியும். மனித சங்கிலி போல கை கோருங்கள்.. குற்றம் இழைத்துவிட்டோமோ என்று ஒரு நிமிடம் கூட கண்ணீர் சிந்துகிற நிலையை தற்காலிக சிறைவாசிகளுக்கு ஏற்பட அனுமதித்து விடாதீர்..

கனியாமூர் மக்கள், தமிழ்குடிகளின் வீரத்தை மீண்டும் ஒருமுறை பறை சாற்றியவர்கள் என்று  உரக்க முழங்குவோம் தோழர்களே..

One thought on “வழக்குரைஞர் சமூகமே, கனியாமூர் கிளர்ச்சியாளர்களை சமூக விரோதிகளாக அடையாளப்படுத்துவதை அனுமதியாதீர்…”
  1. பத்து மாசம் சுமந்து, பெத்து, கஷ்டப்பட்டு வளத்து இப்படி எவனோ ஒருத்தன் கிட்ட உயிர் போகும்னா பொம்பள புள்ளய பெத்த நாங்க தான் உயிர உடணும். ????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Comments are closed.