Sat. Apr 20th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்….

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரண நிகழ்விலும் அதன் எதிரொலியாக நடைபெற்ற விரும்பதகாத நிகழ்வுகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், மனிதநேயத்தோடு மக்கள் பக்கம் நிற்கிறார் முதல்வர் என்பதை வெளிப்படுத்துவதாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் மனம் திறப்பதால், அதே மனநிலையோடு உள்ள நல்லரசுவும் முதல்வர் மு.க.ஸ்டாலினை மனம் திறந்து பாராட்டுகிறது.

கனியாமூர் பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17 ) நடைபெற்ற விரும்பதகாத நிகழ்வுகளை செய்தியாக மட்டுமே பதிவு செய்த நல்லரசு, தனிப்பட்ட முறையில் எந்த கருத்தையும் பதிவு செய்யாத போதும், காவல்துறையின் அலட்சியத்தின் காரணமாகவே, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு மிகுந்த அவப்பெயரை தேடித் தந்துவிட்டது என்று ஒற்றை வரியில் விமர்சனத்தை முன்வைத்துதோம்.

அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி.. காவல்துறையின் அலட்சியத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர், தமிழகத்தின் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ்தான். இவரைப் பற்றி நன்கு அறிந்த காவல்துறை உயரதிகாரிகள், மூத்த ஊடகவியலாளர்கள் முன் வைக்கும் விமர்சனம் அதிர்ச்சி தரக்கூடியவை.

போராட்டக்காரர்களை எல்லாம் தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தும் பாசிச குணம் கொண்ட ஓய்வுப் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வால்டர் தேவாரத்தை ரோல் மாடலாக கொண்டவர்தான் சைலேந்திரபாபு ஐபிஎஸ் என்கிறார்கள் அவருக்கு மிகமிக நெருக்கமான நண்பர்கள். அரசு நிர்வாகத்திற்கு எதிராக போராட்டக்களத்திற்கு வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல், தடியடி, கண்ணீர் புகைகுண்டு, துப்பாக்கிச் சூடு போன்ற அகிம்சைக்கு எதிரான வழிமுறைகளை கையாண்டு போராட்டக்காரர்களுக்கு உயிர் பயத்தை உருவாக்குவதுதான் வால்டர் வகுத்து வைத்திருக்கும் பாடம் என்கிறார்கள்.

ஸ்ரீமதி மரணம் தொடர்பான தகவல்,  கடந்த 13 ஆம் தேதி காலை முதலே சமூக ஊடகங்களில் தீயாக பரவிக் கொண்டிருந்த நேரத்திலேயே அவரது தாய் செல்வி மற்றும் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்து தண்டிக்கும் வரை அவரது உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்பதை உரத்த குரலில் சொல்லிய போதே, டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ், கனியாமூருக்குச் சென்றிருக்க வேண்டும்.

இப்படியொரு நிகழ்வுக்கு எல்லாம், டிஜிபி நேரில்  போக வேண்டுமா? என்று கேள்வி வைத்தாலும்கூட, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது பிரதிநிதியாக டிஜிபி சைலேந்திரபாபுதான், ஸ்ரீமதியின் பெற்றோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி தந்திருக்க வேண்டும். ஆனால், 4 நாள்களுக்குப் பிறகு, முதல்வர் உத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னையை விட்டு நகராத டிஜிபி, முதல்வரின் டிவிட்டர் பதிவு வெளியான நிமிடம் வரை ஸ்ரீமதி மரணம் தொடர்பாக காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை கூட வெளியிடவில்லை. அன்றைய தினம் அவரது பேட்டியும், டிவிட்டர் மூலம் முதல்வர் வெளிப்படுத்திய உறுதிமொழிக்கும் எவ்வளவு வேறுபாடு?

கடந்த 13 ஆம் தேதி காலை 10 மணியளவிலேயே கனியாமூரில் சாதாரண மனிதர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் விரும்பதகாத நிகழ்வு நடைபெற துவங்கிவிட்டது.  பகல் ஒருமணியளவில் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி, ஸ்ரீமதியின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து நிச்சயம் தண்டனை பெற்று தருவோம் என்று கூறி போராட்டக்காரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அவர்களை மேலும் வெறி கொள்ளச் செய்யும் அளவுக்கு போராட்டக்காரர்களை ஒடுக்குவோம் என்று வால்டர் மனநிலையில் நின்று எச்சரிக்கை விடுக்கிறார். மேலும், பள்ளி நிர்வாகம் தவறே செய்யவில்லை என்று  டிஜிபி கூறியதாக பிரபல தொலைக்காட்சியான தந்தி டிவியில் செய்தி ஒளிப்பரப்பானதும், எரிகிற தீயில் எண்ணெணய் வார்க்கப்படுகிறது என்ற  சிந்தனையே டிஜிபிக்கு தோன்றவில்லை.

இப்படிபட்ட நேரத்தில்தான், மருத்துவச் சிகிச்சையில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் மூலம் தெரிவித்த உறுதிமொழி,, கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களை மட்டுமல்ல, போராட்டக்காரர்களின் மனநிலையோடு ஒத்து போயிருந்த தமிழக மக்களையம் நிம்மதி பெருமூச்சு விட வைத்தது.

ஸ்ரீமதியின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. காவல்துறையின் விசாரணை முடிவில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் அளித்த உறுதிமொழியை போல, டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ்ஸால் அழுத்தம் திருத்தமாக சொல்ல முடியவில்லை. முதல்வரை விட உயர்ந்தவரா டிஜிபி.?,.

முதல்வரின் அறிக்கையில் போராட்டக்காரர்களை ஒடுக்குவோம் என்ற அரக்க குணமே வெளிப்படவே இல்லையே.. அப்புறம் எதற்கு டிஜிபி கர்ஜிக்க வேண்டும். அந்த பதவிக்கே தகுதியில்லாதவர் என்பதை போலதானே அவரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன..முதல்வர் உத்தரவிட்ட பிறகுதானே கனியாமூருக்கே டிஜிபி சென்றார். பாமரர்கள் மீதான பாசத்தை விட பணக்கார வர்க்கத்தினருக்கு அனுசரணையாக இருக்கும் குணம்தான் அண்மைக்காலமாக அவருக்கு அதிகமாகிவிட்து என்று அவருக்கு எதிரான விமர்சனங்களை தொடர்ந்து வைப்பவர்கள், இந்த நிமிடம் வரை கொஞ்சம் கூட சமாதானம் அடையவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய அம்சம்.  

இப்படிபட்ட நேரத்தில், பொதுமக்களை நேசிக்கும் ஒரு காவல்துறை அதிகாரி எப்படி நடந்து கொண்டிருப்பார் என்பதை எனது அனுபவத்தில் இருந்தே, அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வை இங்கு நினைவு கூர்கிறேன்.

1987 ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் அறிவித்த 7 நாள் சாலை மறியல் போராட்டத்தின் தொடர்ச்சியாக 1991 அல்லது அடுத்த ஆண்டுகளில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அதிகாலை நேரத்தில் கனியாமூரில் மக்கள் கூடியதைப் போல பெருங்கூட்டம் கூடியது. நகரில் பெரும்பான்மையாக வாழும் நெசவாளர் சமுதாயத்தினரின் தொழிலுக்கு 7 நாள் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக தொல்லைகள் கொடுத்து வந்ததால் எழுந்த கோபத்தின் காரணமாக, நகரின் 4 பிரதான சாலைகளையும் சுற்றி வந்த பெருங்கூட்டம் விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டது. ஊரே போர்க்களம் போல காட்சியளித்த நேரத்தில், அங்கிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அதிரடி படை வீரர்களுடன் விரைந்து வந்தார், அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

ஊருக்குள்ளே நுழைய முடியாதபடி தடுப்புகளை ஏற்படுத்தியிருந்த போதும் முன்களப் பணியாளர் போல முதல் நபராக அவற்றை எல்லாம் அகற்றிக் கொண்டே பெரும் படையோடு வந்த அந்த அதிகாரியை பார்த்து பயந்து நடுங்க வேண்டிய மக்கள், அவரின் உருவத்தைப் பார்த்து, துளியும் அச்சம் கொள்ளவில்லை.

ஆனால், ஊருக்குள் புகுந்து வேட்டையாடும் சிங்கம் போல, அவரது உயரத்தை விட நீளமாக இருந்த லத்தியை சுழற்றியபடி 4 பிரதான சாலைகளையும் சுற்றி வந்து ஒலிபெருக்கி மூலம் அமைதி காக்கும்படியும் மீறினால் தண்டிக்கப்படுவீர்கள் என்ற எச்சரிகையை முன் வைத்து உடைந்து போன தமிழில் விடுத்த மிரட்டல், ஒட்டுமொத்த போராட்டக்காரர்களையும் பயந்து பின்வாங்க வைத்தது.

ஊரில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு 30 மணி நேரத்தில் அமைதிக் குழுவை அமைத்து, ஊரில் மீண்டும் விரும்பதகாத நிகழ்வு நடந்தால் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்ற அவரின் எச்சரிகையை கேட்ட இளைஞர்கள், ஊர் பெரியவர்கள் பொட்டி பாம்பாக அடங்கி போனார்கள்.

அன்றைக்கு ஒரு சில மணிநேரங்களில் மிகப்பெரிய விரும்ப தகாத நிகழ்வை கட்டுக்குள் கொண்டு வந்தவர் இன்றைய சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் ஐபிஎஸ்.

இப்படி மக்களோடு நேரிடியாக தொடர்புடைய காவல்துறையில் ஒவ்வொரு நிலையையும் கடந்து உச்ச நிலைக்கு வரும் உயர் அதிகாரிகள், கீழ்நிலை அதிகாரிகள் தடுமாறி நிற்கும் போது களத்திற்குச் சென்று தங்கள் அனுபவத்தின் மூலம் கீழ்நிலை அதிகாரிகளுக்கு பக்கபலமாக நிற்க வேண்டும்.

டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ் கடமையில் இருந்து தவறிவிட்டார் என்பதை உணர்ந்து கொண்டுதான், ஓய்வு நேரத்தில் கூட காணொளி வாயிலாக ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களிடம் நம்பிக்கையிழந்த ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 13 ஆம் தேதி முதல்வர் வெளியிட்ட டிவிட்டர் அறிவிப்பும், நேற்றிரவு பிறப்பித்த உத்தரவும், கனியாமூர் நிகழ்வில் மக்களின் பக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர்கள்.

நிறைவாக,  முதல்வர் அவர்களே,. ஊர் உலகமே பேசுகிறது. கனியாமூர் நிகழ்வுக்கு மூலக் காரணம் காவல்துறையின் அலட்சியம்தான் என்று.   தயவு தாட்சண்யம் பார்க்காதீர்கள். டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ்ஸையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்யுங்கள்.

டிஜிபி மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளும் அப்படியே உளவுத்துறை கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ்ஸுக்கும் பொருந்துகிறது. இனியும் இவரே உளவுத்துறைக்கு தலைமை வகித்தால், வரும் காலங்களிலும் தமிழக அரசுக்கு மேலும் மேலும் தலைகுணிவு ஏற்படும் என்ற பெரும்பான்மையானோரின் குற்றச்சாட்டுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ்ஸையும் உடனடியாக பணியிடம் மாற்றம் செய்யுங்கள்.

ஜனநாயக நாட்டில் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை இதன் மூலம் நிலை நாட்டிவிட்டீர்கள் என்று நிகழ் காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் வரலாறு படைத்தவராவீர்.

ஒரே ஒரு வேண்டுகோள் முதல்வர் அவர்களே..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறை தேடி தேடி கைது செய்து கொண்டிருக்கும் நபர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்த்து, முதல்முறையாக சட்டத்தை கையில் எடுத்தவர்கள் என்றால் கருணை காட்டுங்கள். உணர்ச்சி வேகத்தில் நிகழ்த்திய செயல்களை எல்லாம் குற்றமாக எடுத்துச் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒட்டுமொத்த விரும்பதகாத நிகழ்வுக்கும் மக்கள் மட்டுமா காரணம்? காவல்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கும் குற்றவுணர்ச்சி இருக்கிறது என்பதற்காகதானே ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் நடைபெற்று இருக்கிறது.  

அதனால் மன்னியுங்கள் முதல்வரே.. உங்களின் மனிதநேயத்திற்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவியும். 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் துயரத்தைவிட எரிக்கப்பட்ட உயிரற்ற உடைமைகளின் மதிப்பு மிகப்பெரியதல்ல..

சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று அறிவுரை கூறுகிற நீதிமன்றம் கூட, பரிதவிக்கிற ஸ்ரீமதியின் பெற்றோரை உச்சநீதிமன்றம் வரை அலைக்கழிக்கும் நேரத்தில், அபலைகளான பாதிக்கப்பட்டோருக்கு ஆபத்பாந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற புகழ் மாலை குவியட்டும்….

2 thoughts on “மக்களுக்கு நிம்மதியளித்துள்ளீர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே., வாழ்த்துகள்… அப்படியே ஐபிஎஸ் அதிகாரிகள் சைலேந்திர பாபு, டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் மாற்றிவிடுங்கள்…”

Comments are closed.