Sun. Aug 7th, 2022

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…

தொலைக்காட்சி விவாதங்களை அண்மைகாலமாக நாள்தோறும் நான் பார்ப்பதில்லை. விவாதங்களில் கலந்துகொள்கிற அரசியல் விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே பொது நோக்கம் இல்லாமல் அவரவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப வாதங்களை முன் வைத்து நரம்பு புடைக்க ஆவேசமாகிறார்கள். நாளுக்கு நாள் தொலைக்காட்சி விவாதங்கள் தரமிழந்து கொண்டிருக்கின்றன என்பது எனது குற்றச்சாட்டு இல்லை, அதனை விரும்பி பார்க்கும் பெரும்பான்மையானோரின் கருத்து.

தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் அனைவரையும் அம்பலபடுத்த வேண்டும் என்று பெரும்பான்மையானோர் ஆவேசம் காட்டுகிறார்கள். ஊடகத்தர்மத்தை முழுமையாக கடைப்பிடித்தால் அவர்களின் குரல்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். ஆனால், நட்பு கருதியும் மரியாதை நிமித்தமாகவும் கடந்து செல்கிறேன்.

ஆனால், தமிழக அரசியல் களத்தில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட ரவீந்திரன் துரைசாமியைப் பற்றி நல்லரசுவில் விமர்சனத்தை முன் வைத்தேன், ஒருதலைபட்சமாக இருக்கிறது என்பதற்காக.  

கடந்த ஓராண்டுக்கு மேலாக அவரின் விமர்சனங்களை அவ்வப்போது பார்க்க நேர்ந்தது. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் கொண்டாடி வந்த அவர், ஓபிஎஸ்ஸை ஓரம் கட்ட தொடங்கிய நாளில் இருந்து அவருக்கு ஆதரவாக ஓங்கி குரல் கொடுக்க தொடங்கி விட்டார்.  ஒருதலைபட்சமாக இருக்கிறது அவரது விமர்சனம் என்ற அடிப்படையில்தான் அவரைப் பற்றி எழுதும் போது, அரசியலை பிழைப்பாக கொள்ளாத ரவீந்திரன் துரைசாமியே, அன்றாட வியூகங்களைப் பற்றி மெனக்கெட்டு யோசிக்கும் போது அரசியலை தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாத இபிஎஸ் போன்றவர்கள் எந்தளவுக்கு அரசியல் வியூகங்களை வகுப்பார்கள். அவர்களுக்கு ஆலோசனைகளை வாரி வழங்க பல்துறை ஆளுமைகள் வரிசை கட்டி நிற்பார்கள் என்பதையெல்லாம் களத்தில் நடமாடுகிறவன் என்ற அடிப்படையில் முன்வைத்தேன்.

நல்லரசுவில் வெளியான கட்டுரைக்கு அவருக்கே உரிய முறையில் விளக்கம் அளித்திருக்கிறார். சென்னை ஊடக உலகில் என்னை அறிந்தவர்களுக்கு தெரியும் எனது நேர்மையைப் பற்றி என்பதால், மீண்டும் ரவீந்திரன் துரைசாமியை அவரது கூற்றுக்காகவே விமர்ச்சிக்க தொடங்குகிறேன்.

வெள்ளாள கவுண்டர் சாதி அரசியலை கையில் எடுத்து எடப்பாடி பழனிசாமி செய்து வரும் அரசியலை பல மாதங்களாக கூறி வந்த ரவீந்திரன் துரைசாமி, கடந்த சில நாட்களாக இபிஎஸ்ஸின் நிழலாக உள்ள சேலம் இளங்கோவனையும் விமர்ச்சிக்க தொடங்கியுள்ளார் சாதிய கண்ணோட்டத்தோடு. ஆர்.இளங்கோவன் கொங்கு வேளாளர் (வெள்ளாள கவுண்டர்) இல்லை என்பதை இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். இராமாயண காவியத்தில் ராமருக்கு கிடைத்த லட்சுமணைப் போல இபிஎஸ்ஸுக்கு ஆர்.இளங்கோவன் கிடைத்திருக்கிறார் என்று சொன்னால், என்னை கேவலமாக திட்டும் கூட்டமும் இருக்கிறது என்பதையும் அறிந்த பிறகும் பதிவு செய்கிறேன்.  

ஒரு சில ஆயிரம் ரூபாய்க்கே துரோகம் இழைக்கும் மக்கள் நிறைந்த உலகில், பல நூறு கோடி ரூபாயை கையாளும் இடத்தில் இருந்து கொண்டிருக்கும் போதும் சுயநலவாதியாக, ஏமாற்று பேர்வழியாக இல்லாமல் இருந்து வருகிறார் ஆர்.இளங்கோவன் என்பதாலேயே அவருக்கு வக்காலத்து வாங்குகிறேன்.  இபிஎஸ்ஸோடு இளங்கோவனை இணைத்து நீங்கள் விடும் சவால்கள் எல்லாம் பலிக்குமா? 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு பாமகவை இழுத்து வந்த வியூக வகுப்பில் ஆர்.இளங்கோவனுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை ஆர்.டி. மறந்திருக்க மாட்டார்.

சாதி அரசியல் என்பது தமிழகத்தின் சாபக்கேடு. இன்றைய தேதியில் மட்டுமல்ல, நீதிக்கட்சி துவங்கிய காலத்தில் இருந்தே சாதி, அரசியலில் ஆழமாக ஊடுருவிவிட்டது. நீதிக்கட்சி காலத்தில் சாதியுணர்வு இருந்திருக்கிறதே தவிர, சாதி வெறியில்லை. நட்புக்கும், உழைப்புக்கும், தியாகத்திற்கும் அன்றைய காலங்களில் உரிய மரியாதையும் அங்கீகாரமும் தரபபட்டிருக்கிறது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் சாதி அரசியல் செய்கிறார். மற்ற முன்னணி நிர்வாகிகள் யாரும் சாதி அரசியலே செய்வதில்லை என்று பொங்குகிறார் ரவீந்திரன் துரைசாமி.

வன்னியர் அரசியல் தமிழகத்தில் எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதை அறியாதவர் அல்ல ரவீந்திரன் துரைசாமி. வன்னியர்களின் விடியலுக்காக பா.ம.க. என கட்சியை துவங்கியிருந்தாலும் மருத்துவர் ராமதாஸின் நாடி நரம்புகளில் எல்லாம் வன்னியர் என்ற சாதிய அரசியல்தான் பிரதானமாக இருக்கிறது என்ற போதும் வன்னியர் சாதிக்கு பலம் பொருத்திய தனிக்கட்சி இருந்தாலும், மருத்துவர் ராமதாஸுக்கு மிஞ்சிய சாதி பாசம், சமூக நீதியை உயிர்மூச்சாக கொண்டிருக்கும் திமுகவின் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு உண்டு.

 எந்த கட்சியில் இருந்தாலும் வன்னியருக்கு ஒரு ஆபத்து என்றால் துடிதுடித்து போவார் துரைமுருகன்.

அவரை போலதான் நாடார், தேவர், முத்தரையர், முதலியார் என அனைத்து சாதிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் சாதிய கண்ணோட்டத்துடன்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்படிபட்டவர்களிடம் என்ன நிம்மதி என்றால், பெரும்பான்மையானோர் சாதிய அடையாளத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ள வெட்கப்படுபவர்கள். இப்படிபட்டவர்கள் அதிகம் இருப்பதால்தான், அரசியலில் மாமன், மச்சான் என்ற உறவோடு அரசியலை முன்னெடுப்பது அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது.

ஓபிஎஸ் கூடாரத்தின் அனைத்து சித்து விளையாட்டுகளையும் முறியடித்து அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராகிவிட்ட எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்று பாருங்கள் ரவீந்திரன் துரைசாமி அவர்களே. நாள்தோறும் நீண்ட வரிசையில் நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் அதிமுக நிர்வாகிகளிடம் பேசி பாருங்கள். சாதிய பின்னணியோடுதான் அவர்கள் எல்லோரும் வருகிறார்களா? பணத்திற்காக வருகிறார்களா? கட்சி விசுவாசத்திற்காக வருகிறார்களா? என்று தெரிந்துவிடும.

அப்படியே கொஞ்சம் பொடி நடையாக நடந்து மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவால் மூன்று முறை அடையாளம் காட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கும் சென்று பாருங்கள்.. அங்கே விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு இருக்கும் தொண்டர்களின் பின்னணியையும் அறிந்து கொள்ள முடியும்.

உங்களால் முட்டுக் கொடுக்கப்படும் ஓபிஎஸ்ஸுக்கு அதிமுக தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் இருந்து வரும் 10 சதவீத ஆதரவு உண்மை என்றால், அவரது வீட்டை கடந்து செல்வது என்பது மிகவும் சிரமமாக இருந்து இருக்கும்.  

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று 4 நாட்கள் கடந்துவிட்டன. அதிமுவில்  தனக்கு உள்ள செல்வாக்கை பொதுவெளியில் நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயம் தனக்கு இருந்த போதும்கூட, அக்கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் ஒன்றிய, நகரச் செயலாளர்கள் என இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்போர், இபிஎஸ் கூடாரத்திற்கு எதிரான சிந்தனையில் உள்ள முன்னணி நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து ஒன்றிரண்டு கோடி ரூபாய் செலவழித்து பொதுக்குழு மாதிரி ஒரு கூட்டத்தை கூட்டி செல்வாக்கை நிரூபிக்க முடியாத ஓபிஎஸ்தான், ஒன்றரை கோடி தொண்டர்களைச் சந்தித்து தான் தான் அதிமுகவின் அசைக்க முடியாத தலைவர் என்பதை நிரூபிக்க போகிறாரா? ரவீந்திரன் துரைசாமி அவர்களே…

  இபிஎஸ்ஸுக்கு இருக்கிற சாதி பின்னணி போல, கொங்கு அதிமுக அரசியல் செய்வதைப் போல, ஓபிஎஸ்ஸும் தேவர் அதிமுக அரசியலை முன்னெடுக்க ஏன் தயங்குகிறார்? ,இபிஎஸ்ஸுக்கு பின்னால் கொங்கு முன்னணி தலைவர்களே இல்லை. ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு தேவர் சமுதாயத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கை நட்சத்திரம் விகே சசிகலா இருக்கிறார். அவரைவிட சர்வ வல்லமை பொருந்திய சமுதாய தலைவர் டிடிவி தினகரன் இருக்கிறார். இவர்களின் மறைமுக ஆதரவோடு தேவர் சமுதாயத்தை ஒருங்கிணைத்து, கொங்கு அதிமுக அரசியலை மண்ணோடு வீழ்த்த ஏன் தயக்கம் காட்டி வருகிறார், ஓபிஎஸ்?. பதில் இருக்கிறதா,ரவீந்திரன் துரைசாமி அவர்களே?..

நிறைவாக ஒன்று சொல்கிறேன் ரவீந்திரன் துரைசாமி அவர்களே?  உங்களை விமர்சனம் செய்துதான் நல்லரசு விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இன்றைக்கு தமிழக அரசின் உளவுத்துறையின் உச்சபட்ச அதிகாரியாக இருக்கிறாரே டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் அவர்களை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நீதியரசர் ஒருவரின் இல்லத்தில் சந்தித்க நேர்ந்தது. அப்போது ஐபிஎஸ் அதிகாரி அங்கு பேசியதை எல்லாம் நல்லரசுவில் எழுதினால், உங்களை விமர்சனம் செய்வதன் மூலம் கிடைக்கும் விளம்பரத்தை விட ஆயிரம் மடங்கு கிடைக்கும்.

அரசியல் ரீதியாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த சில நாட்களாக இபிஎஸ்ஸை வசைப்பாடிக் கொண்டிருக்கும் நேர்மையின் சின்னம் மருது அழகுராஜ், கடந்த 5 ஆண்டு காலம் இபிஎஸ் கூடாரம் போட்ட பிச்சை காசில் வாழ்ந்துவிட்டு திடீர் ஞானோதயம் ஏற்பட்டு இப்போது அவரையே அழகு தமிழால் நிந்தித்துக்  கொண்டிருக்கிறாரே, அந்த மருது அழகுராஜ் நல்லரசுவில் வந்த கட்டுரைகளுக்காக 45 நிமிடம் பேசினார். ஆவேசமாகவும், சமரசமாகவும், தாழ்ந்தும் பேசியவை ஆடியோ பதிவாக இருக்கிறது. அதை வெளியிட்டும் நல்லரசுவால் விளம்பரம் தேடிக் கொள்ள முடியும். ஆனால், தர்மத்திற்கு அப்பாற்பட்டு எந்தவொரு செயலிலும் நல்லரசு ஈடுபடாது.

1989 காலகட்டத்தில் சேத்துபட்டு தராசு அலுவலகத்தில் வந்து ரவிந்திரன் துரைசாமி காத்திருந்த காலத்திலேயே தராசு ஆசிரியர் திரு.ஷ்யாமின் நம்பிக்கை பெற்றவர்களில் ஒருவராக பயணித்தும், 1996 சட்டமன்றத் தேர்தலிலேயே களத்தில் அலைந்து கருத்துக் கணிப்பில் ஈடுபட்டு நேர்மையாளர்கள் என புகழ் மாலையை சூடிய படைகளில் ஒருவனாக வாழ்ந்ததற்கு இன்றைய தேதியில் நற்சான்றிதழ் தேவையில்லை.

இபிஎஸ்ஸை மக்கள் தலைவர் என்று அடையாளப்படுத்துவதற்கு ரொம்ப, ரொம்ப தயக்கம் காட்டுகிறீர்கள். 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டியில் வீதி வீதியாகவும் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஊர்களில் கருத்து கணிப்பில் ஈடுபட்டவன் என்ற முறையில் கூறுகிறேன். எடப்பாடியார் என்று தலைவருக்குரிய மரியாதையோடு, அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, விளிம்பு நிலை மக்களும்கூட உரக்க கூறியதை காதில் கேட்டவன், வீடியோவாக பதிவு செய்தவன் என்ற முறையில் கூறுகிறேன். ஓபிஎஸ்ஸுக்கு இளைத்தவர் இல்லை எடப்பாடி பழனிசாமி. இதை நான் சொல்லவில்லை, விருதுநகர் அதிமுக பிரமுகர்கள் முழங்கியதுதான். உங்களுக்கு புரியும் என நம்புகிறேன்.

அதனால், தேவையில்லாமல் எடப்பாடி பழனிசாமியை சாதிய வட்டத்தில் மட்டுமே நிறுத்தி அவமானப்படுத்தும் செயலை இனியும் தொடர்ந்து செய்யாதீர். நேர்மையான விமர்சனங்களை வையுங்கள். உங்கள் விமர்சனங்களை காது கொடுத்து கேட்பவர்களுக்கு துரோகம் இழைக்க வேண்டாம்…

Leave a Reply

Your email address will not be published.