Sun. Aug 7th, 2022

தாரை இளமதி, சிறப்பு செய்தியாளர்..

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் இளம் ஐஏஎஸ் அதிகாரியான விஷ்ணு, துள்ளல் மிகுந்த ஆட்சி பணியால் பொதுமக்களிடம் நல்ல பெயரை பெற்று வருகிறார். திமுக ஆட்சிக்கு புகழை சேர்க்கும் வகையில் ஆட்சியர் ஆற்றி வரும் மக்கள் பணியால், அரசியல் வேறுபாடின்றி அனைத்துக்கட்சி நிர்வாகிகளும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஆனால், ஆளும்கட்சியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல் பிரபலங்கள், ஆட்சியரின் அதிரடி நடவடிக்கைகளால் வருமானம் இழந்துள்ளதால், திருநெல்வேலியில் இருந்து ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ்ஸை பணியிட மாற்றம் செய்வதற்காக கடந்த பல மாதங்களாக முனைப்பு காட்டி வருகின்றனர் என்றும், ஆனால், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் மற்றும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆசிர்வாதம் நெல்லை ஆட்சியருக்கு பரிபூரணமக இருப்பதால், நெல்லையில் இருந்து விஷ்ணு ஐஏஎஸ்ஸை தூக்கியடிக்க முடியவில்லை. இதனால் விரக்தியடைந்துள்ள நெல்லையின் மைந்தரான சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவும், திமுக எம்பி ஞானதிரவியமும் ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ் மீதான கோபத்தை அரசு நிகழ்வு ஒன்றிலேயே பகிரங்கமாக வெளிப்படுத்தியதுதான், நெல்லை மாவடட மக்களிடம் மிகுந்த அதிர்ச்சியை தற்போது ஏற்படுத்தியுள்ளது என்று புலம்புகிறார்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட நெல்லை மக்கள்..

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் திமுக எம்பி ஞானதிரவியத்திற்கு எதிராக ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ் அப்படி என்ன செய்துவிட்டார்? நெல்லையில் உள்ள சமூக செயற்பாட்டாளர்களிடம் பேசினோம். திமுக விவிஐபிக்களின் பிழைப்பில் ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ் மண்ணை அள்ளிப் போட்டு, இயற்கை வளத்தை காப்பாற்றுவதற்காக அதிரடியாக எடுத்து வரும் நடவடிக்கைகளை விரிவாக விளக்கினர்.

முந்தைய அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, தற்போதைய திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல் குவாரிகளும் சட்டத்திற்கு புறம்பாகதான் செயல்பட்டு கொண்டு வந்திருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு மேல் மிகவும் ஆபத்தான அளவுக்கு கற்கள் தோண்டியெடுக்கப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த கல் குவாரி தொழிலில் அரசியல் வேறுபாடின்றி அனைத்து அரசியல் தலைவர்களும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்தனர். முந்தைய அதிமுக ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட விஷ்ணு ஐஏஎஸ், பல நேரங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் கல் குவாரிகள் மீது அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முயன்றார். ஆனால், ஆளும்கட்சி பிரமுகர்களின் தலையீட்டால், ஆட்சியரின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டைப் போடப்பட்டன.

பொதுமக்களின் நலன்களை புறக்கணித்து கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்ட அரசியல் வாதிகளின் பணத்தாசைக்கு சாவு மணி அடிக்கும் வகையில் அடை மிதிப்பான் குளம் கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகிவிட, அந்த கோர நிகழ்வு மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, நெல்லை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கல் குவாரிகளுக்கு சீல் வைத்து அதிரடி காட்டினார் ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ். மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டதாக கூறி கல் குவாரிகள் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் கோடிக்கணக்கில் அபராதமும் விதித்தார்.
ஆட்சியரின் அதிரடி நடவடிக்கைகளால் ஆடிப்போன கல் குவாரி உரிமையாளர்கள், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் திமுக எம்பி ஞான திரவியத்திடம் முறையிட்டனர். அப்பாவுக்கு சொந்தமான கல் குவாரிகள் இல்லை என்று வெளிப் பார்வைக்கு தெரிந்தாலும் அவரது தொழில் கூட்டாளிகள், உறவினர்கள், நட்பு வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. ஆனால், திமுக எம்பி ஞான திரவியத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இருக்கின்றன. இங்கிருந்து வெட்டியெடுக்கப்படும் கற்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதால் நாள்தோறும் பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பார்த்து வந்தார் ஞான திரவியம் எம். பி. அந்த வருமானத்தில் கடந்த இரண்டு மாதமாக மண் விழுந்துவிட்டது. இதேபோல, அபராதம் விதிக்கப்பட்ட கல் குவாரிகளில் ஞான திரவியத்திற்கு சொந்தமானதும் அடங்கும்.
இதேபோல, மண் மற்றும் மணல் எடுப்பதற்கும் தடை விதித்தார் ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ். இதனால், செங்கல் சூளைகளுக்கு தேவையான மண்ணும் கிடைக்கவில்லை. செங்கல் சூளை அதிபர்கள் பேரவைத்தலைவரை சந்தித்து முறையிட்டனர். அதன் பேரில் செங்கல் சூளைக்கு தேவையான மண்ணை எடுக்க அனுமதிக்க வேண்டும் என ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ்ஸிடம் நேரடியாக முறையிட்டார் அப்பாவு. ஆனால், அசைந்து கொடுக்கவில்லை ஆட்சியர். இதனால், ஆட்சியரின் அதிகாரத்தையே கேலிக்குரியதாக்கும் வகையில், மண் பாண்ட தொழிலில் ஈடுபட்டவர்களும் ஆட்சியரின் உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற பரப்புரையை மேற்கொண்டு, ஆட்சியர் அலுவலகத்திலேயே மண் பாண்ட தொழிலாளர்களை அழைத்துச் சென்று முறையிட்டார் பேரவைச் தலைவர் அப்பாவு. ஆனால், அதில் 95 சதவீதம் பேர் செங்கல் சூளை தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள்தான். இந்த கபட நாடகத்தை உணர்ந்து கொண்ட ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ், மண் பாண்ட தொழிலுக்கு தேவையான மண்ணை எடுக்க அனுமதி வழங்கப்படும், ஆனால் செங்கல் சூளைக்கு தேவையான மண்ணை எடுக்க அனுமதி வழங்க முடியாது என்ற கறாராக உத்தரவு பிறப்பித்தார்.
எந்த பக்கம் போனாலும் முட்டுக்கட்டைப் போடுகிறாரே ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ் என்ற ஆத்திரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்த நேரங்களில் எல்லாம் ஆட்சியர் விஷ்ணுவுக்கு எதிராக புகார் பட்டியல் வாசித்துள்ளார் அப்பாவு. அதில் முக்கியமான புகார், அதிமுக ஆட்சிக்காலத்தில் நெல்லை ஆட்சியராக நியமிக்கப்பட்டவர் விஷ்ணு ஐஏஎஸ் என்பதுதான் பிரதானமாக இருந்துள்ளது. இதேபோல, ஆட்சியரின் அதிரடி நடவடிக்கைகளால் நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை இழந்ததுடன், 20 கோடி ரூபாய் அளவுக்கு அபராதமும் செலுத்தியுள்ள ஞானதிரவியம் எம்பியும், ஆட்சியரை மாற்ற சென்னைக்கு காவடி எடுத்தும், அவரின் முயற்சி வெற்றிப் பெறவில்லை.


நெல்லை மாவட்ட திமுகவில் மதத்தின் அடிப்படையில் மட்டுமல்ல மூத்த தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்ட அரசியல் எதிரிகளை வீழ்த்துவதற்காகவும் உறவாடி வரும் அப்பாவும், ஞானதிரவியமும் விஷ்ணு ஐஏஎஸ்ஸை, ஆட்சியர் பதவியில் இருந்து தூக்கியடிக்கவும் கடந்த பல மாதங்களாக கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனால், ஆட்சியரின் துடிப்பான பணிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நற்சான்றிதழ் வழங்கி, ஆட்சியர் விஷ்ணுவுக்கு அரணாக நின்று கொண்டிருக்கிறார் என்றவர், இந்த எபிசோடில் கிளைமாக்ஸ் நிகழ்வாகதான் நேற்றைய தினம் (ஜூலை 12) கூடங்குளத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் ஆட்சியர் விஷ்ணுவுக்கு எதிராக அக்னி வார்த்தைகளை உமிழ்ந்து, ஆளும்கட்சிக்கே மிகப்பெரிய அவமானத்தை தேடி தந்துவிட்டனர் என்று வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
சில நிமிட ஆசுவாசத்திற்குப் பிறகு அவர்களே தொடர்ந்து பேசினர். கூடங்குளத்தில் நேற்று தொழிற் பயிற்சி மைய திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், பயிற்சி மையத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரின் அருகில் பேரவைத் தலைவர் அப்பாவும், திமுக எம்பி ஞான திரவியமும் அமர்ந்திருக்க, இருவரின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வையில் உள்ளூர் செய்தியாளர் ஒருவர், கல் குவாரிகளுக்கு சீல் வைத்ததாலும், மண் எடுப்பதற்கு தடை விதித்திருப்பதாலும் விளிம்பு நிலை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள், வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.இதற்கு திமுக அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியை எழுப்ப, முதல் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறிய பிறகும் கூட ஞானதிரவியம் எம்பியும், பேரவைத்தலைவர் அப்பாவும் மாறி மாறி ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ் பதிலளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
செய்தியாளர் சந்திப்பில் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இருவரும் செயல்பட்டதைப் பார்த்து மனம் நொந்து போன அமைச்சர் சி.வி.கணேசன், ஞான திரவியம் எம்பியை நேரிடையாகவே கண்டிக்கிறார். இருவருமே விஷ்ணு ஐஏஎஸ்ஸை மாற்றியே தீர வேண்டும் என்பதில் குறியாக இருப்பதை அறிந்து மனம் வெறுத்து விட்டார் அமைச்சர் சி. வி. கணேசன்..பெரும்பாலான மாவட்டங்களில் ஆட்சியர்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் தான் போர்க்கொடி தூக்குவார்கள்..ஆனால் நெல்லையில் மக்களிடம் நல்ல பெயரை எடுத்து ள்ள ஆட்சியரை மாற்றவேண்டும் என்று ஆளும்கட்சி விவிஐபிகள் முரண்டு பிடிக்கிறார்கள் என்றால் தவறு யார் பக்கம் இருக்கிறது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கேள்வி எழுப்பி யிருக்கிறார் அமைச்சர் சிவி கணேசன் என்றனர் நெல்லை சமுக செயற்பாட்டாளர்கள்..

பேரவை தலைவரின் விருப்பத்தை நிறைவேற்ற ஏன் மறுக்கிறார் முதல்வர் என தலைமைச் செயலகத்தில் உள்ள முக்கியமான அதிகாரியிடம் பேசினோம்.. உண்மை தெரியாதா? என பீடிகையோடு பேசினார் அவர்..
சென்னையிலோ நெல்லையிலோ தன்னை சந்திக்க வரும் திமுகவினர் உள்பட அனைவரிடமும் முதல்வர் குடும்பத்து உறுப்பினர்களை பற்றி கடுமையான விமர்சனத்தை அண்மை காலமாக வைத்து வருகிறார்.. தன்னால் நினைத்ததை எதையும் தன்னிச்சையாக செய்ய முடியவில்லை.. முதல்வரின் குடும்பத்தினரின் சம்மதம் பெற்று தான் செய்ய வேண்டியுள்ளது.. அதுவும் நினைத்த நேரத்தில் நடப்பதில்லை என்று புலம்பியுள்ளார்.. இந்த தகவல்கள் உளவுத்துறை மூலம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.. பெரிய மனிதர் என்று மிகப்பெரிய அந்தஸ்து கொடுத்தும் பணம் சம்பாதிப்பதில் உள்ள பேராசை அவரை தலைமைக்கு எதிராக பேச வைக்கிறதோ? என முதல்வர் கண் சிவந்ததாகவும் தகவல் கூறுகிறார்கள் என்றவர் அடுத்த சொன்ன தகவல் தான் முதல்வரின் கோபத்திற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது..மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி, உயிரோடு இருந்த நேரத்தில் முதலியார்கள் வசம் இருந்த திமுக தலைமையை படாதபாடு பட்டு நான் மீட்டு வந்தேன்..ஆனால் தளபதியின் மருமகன் என்ற ஒற்றை முதலியாரிடம் (சபரீசன்) திமுக தலைமை சென்று விடும் வகையில் சுதந்திரம் கொடுத்து விட்டார் என்று கலைஞரே தன்னிடம் சொல்லியதாகவும் நெருக்கமான சிலரிடம் அப்பாவு கூறியது தான் முதல்வர் குடும்பத்து உறவுகளை கொந்தளிக்க வைத்து விட்டது என்று கூறி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் அந்த தலைமைச் செயலக அதிகாரி…

வாழும் காமராஜருக்கு (?) நேரம் சரியில்லையோ…

Leave a Reply

Your email address will not be published.