Thu. Nov 21st, 2024

தேனி மாவட்டத்தில் காலியாகிறது ஓபிஎஸ் கூடாரம்….

சென்னையில் அதிமுக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பெரும்பான்மையானோர், அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதற்கு நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், அந்த மாவட்டத்தில் உள்ள 68 பொதுக்குழு உறுப்பினர்களில் 42 பேர் சென்னையில் உள்ள இபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்து அவருக்கு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். எஞ்சியுள்ள பொதுக்குழு உறுப்பினர்களும் ஆதரவுக் கடிதம் கொடுத்துள்ளதாகவும் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டம் தேனி. இந்த மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ளன. இந்த நான்கு தொகுதிகளை உள்ளடக்கிய தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள், நாள்தோறும் சென்னைக்கு குழு, குழுவாக வந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று அதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் சென்னை வந்திருந்திருந்தனர். இதேபோல் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த 68 பொதுக்குழு உறுப்பினர்களில் 42 பேர் ஒரே குழுவாக வந்திருந்து இபிஎஸ், பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேனி மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினருமான தனலட்சுமி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்றும் அதுவும் எடப்பாடியார்தான் தலைமை ஏற்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம். அவரை சந்தித்து நீங்கள் தான் எங்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில் அதிமுகவின் நல்ல ஆட்சியை எதிர்காலத்தில் எடப்பாடியார் ஏற்படுத்தி தருவார் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

முன்னதாக பேசிய ஜக்கையன், தேனி மாவட்டத்தில் உள்ள கிளைச் செயலாளர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை அனைவரும் சென்னை வந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு ஆதரவு அளித்து, அவரின் ஒற்மை தலைமையில் இந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டும். மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அதிமுகவை அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் வலியுறுத்தியுள்ளோம். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கு 100 சதவீத நிர்வாகிகளும் எடப்பாடியார் தான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.

மேலும் தேனி மாவட்ட அதிமுக பொருளாளர் சோலை ராஜா, கம்பம் ஒன்றிய முன்னாள் செயலாளர் இளையநம்பி, போடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் லெனின் ஆனந்த் உள்ளிட்டோர் பேசினார். ஓபிஎஸ் எங்களுக்கு வேண்டாம். பதவியில் அவர் தொடர்ந்தால் அதிமுகவை கெடுத்து விடுவார் என்று ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர்.