Sat. May 4th, 2024

வரும் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை 2 வது நாளாக இன்றும் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நடைபெற்றது. நீதிபதி கோரியிருந்த சில கேள்விகளுக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்து.
தொடர்ந்து எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் வாதிடும் போது, பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரவும்நிறைவேற்றவும் அதிகாரம் உள்ளது. அங்கு எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க உரிமை உள்ளது. எதிர் கருத்து இருந்தால் பொதுக்குழுவில் விவாதிக்கலாம். அதை விடுத்து நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற முடியாது. கட்சி பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர நீதிமன்றத்தில் முன் கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். முன் அனுமதி இல்லாமல் ஓ.பி.எஸ் தாக்கல் செய்த இந்த மனு விசாரணைக்கே உகந்தது அல்ல .ஜூன் 23ல் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் தான் ஜூலை 11 கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனால் பொதுக்குழு குறித்து கடைசி நேரத்தில் நோட்டீஸ் அனுப்பியதாக கூற முடியாது. அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கே முழு அதிகாரம் உள்ளது. திருத்தங்கள் பொதுக்குழுவில் வைக்கப்படாததால் அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தலும் செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி விட்டன என தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இரு பதவிகளும் காலியாகி விட்டதால் தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பினர் அதிமுக பொதுக்குழுவை நடத்த உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு 2,190 உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் சார்பிலும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பிலும் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இதனையடுத்து வரும் 11 ஆம் தேதி காலை 9 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒத்திவைத்தார்.
அன்றைய தினம் காலை 9.15 மணியளவில்தான் அதிமுக பொதுக்குழு கூடுகிறது என்பதால், அதிமுக தொண்டர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.